பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், திலீப் குமார் சர்மா
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள உயும்போக் கிராமத்தில் வசிக்கும் 32 வயதான க்ஷேத்ரிமாயும் சுஷிலின் வீட்டில் துக்கம் சூழ்ந்துள்ளது.
அக்டோபர் 19-ஆம் தேதி இம்பால் பள்ளத்தாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ஆயுதக் குழுவினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று மெய்தேய் சமூக ஆண்களில் சுஷிலும் ஒருவர்.
விறகு சேகரிப்பதற்காகச் கிராம மக்கள் சிலருடன் அருகிலுள்ள காட்டுக்குச் சென்றிருந்தபோது சுஷில் தாக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஒக்ரம் இபோபி சிங் உள்ளிட்ட பலர் சுஷிலின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். துக்கம் விசாரிக்க வருபவர்களைக் காணும்போது சுஷிலின் வயதான தந்தை கண்ணீர்விட்டு அழுகிறார்.
கண்ணீருடன் பேசிய சுஷிலின் தந்தை தேபென், “என் மகன் விறகு சேகரிப்பதற்காகக் காட்டுக்குச் சென்றான். ஆனால், வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. அவனுடைய நான்கு வயது மகள் அடிக்கடி, ‘அப்பா எங்கே?’ என்று கேட்கிறாள். அந்தக் குழந்தைக்கு நான் என்ன பதில் சொல்வது?” என்கிறார்.
தனது பாதுகாப்பு குறித்த கவலையை வெளிப்படுத்திய அவர், “மலையடிவாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் விறகு சேகரிப்பதும் நெல் வயல்களில் வேலை செய்வதும்தான். அப்போது யாராவது துப்பாக்கியால் சுட்டால், மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வர முடியாது. எல்லோரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் நாங்கள் எப்படி உயிர்வாழ்வது?” என்று கேள்வியெழுப்பினார்.
10 நாட்களில் நடந்த வன்முறையில் குறைந்தது 14 பேர் உயிரிழப்பு
பட மூலாதாரம், Dilip Kumar Sharma
மணிப்பூரின் மலைப்பகுதிகளில் வன்முறை திடீரென அதிகரித்துள்ளது. இந்த மாதம் அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி வெறும் 10 நாட்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் காம்ஜோங், காங்போக்பி, உக்ருல் ஆகிய மாவட்டங்களில் 12 மணி நேரத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களில் குக்கி மற்றும் நாகா சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அக்டோபர் 17-ஆம் தேதி காம்ஜோங் மாவட்டத்தில் குக்கி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் சசாத் கிராமத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
அக்டோபர் 18-ஆம் தேதி இரவு, தோபால் மாவட்டத்தின் காங்காபோக்கில் மற்றொருவர் கொல்லப்பட்டார். பின்னர், அக்டோபர் 19-ஆம் தேதி இம்பால் கிழக்கு மாவட்டத்தில் மூன்று மெய்தேய் சமூக ஆண்கள் கொல்லப்பட்டனர்.
2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி முதல் மெய்தேய் சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே தொடர்ந்து வந்த வன்முறை, இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்திருந்தது.
ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ருல் மாவட்டத்தில் குக்கி மற்றும் நாகா சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் மதுபோதையிலான மோதல், பரவலான வன்முறையாக மாறியது.
வெறும் எட்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நாகா-குக்கி மோதலில் இதுவரை குறைந்தது 22 நாகா பொதுமக்களும் 31 குக்கி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மெய்தேய் சமூகத்தினர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மாநிலத்தில் வன்முறையின் புதிய கட்டம் உருவாகியுள்ளது.
தொடக்கத்தில் இரண்டு சமூகங்களுக்கு இடையே நிலவிய இன மோதல், தற்போது மூன்று தரப்புகள் சம்பந்தப்பட்ட மோதலாக மாறியுள்ளது.
ஒருபுறம் மெய்தேய் மற்றும் குக்கி சமூகத்தினர் மோதிக்கொண்டிருக்க, மறுபுறம் நாகா சமூகத்தினருக்கும் குக்கி சமூகத்தினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
மாநிலத்தில் அண்மையில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து காவல்துறை கூறியது என்ன?
பட மூலாதாரம், Dilip Kumar Sharma
நோங்ஷும் பகுதியில் மெய்தேய் சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை மணிப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.
அக்டோபர் 19-ஆம் தேதி காலையில், இம்பால் கிழக்கு மற்றும் காங்போக்பி மாவட்டங்களின் எல்லையில் உள்ள நோங்ஷும் மலைக்கு அருகிலுள்ள காட்டில் மெய்தேய் சமூகத்தினர் சுமார் 14 பேர் விறகு சேகரித்துக் கொண்டிருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அப்போது, ஆயுதக் குழுவினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் க்ஷேத்ரிமாயும் சுஷில் (32), அருபம் ரோனில் (35), லைரென்லக்பம் இனாவோபி (44) என சாகோல்மாங் காவல் நிலைய அதிகாரி அடையாளம் கண்டுள்ளார்.
இதற்கிடையே, மணிப்பூர் காவல்துறையின் கூடுதல் டிஜிபி லஹிரி டோர்ஜி லஹாட்டு செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “மணிப்பூர் காவல்துறை, இந்திய ராணுவம், அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) கோப்ரா படையினர் இணைந்து சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றித் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். விறகு சேகரிக்கச் சென்றவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “கைது செய்யப்பட்டவர்களில் இருவர், தாக்குதல் நடத்திய குழுவில் தாங்களும் இடம்பெற்றிருந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, ஐஎன்எஸ்ஏஎஸ் ரகத் துப்பாக்கிகள், ஏகே-47 ரகத் துப்பாக்கிகள், எம்-16 ரகத் துப்பாக்கிகள், துப்பாக்கி சுடும் வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள், டைப் 81 ரகத் துப்பாக்கிகள் உள்ளிட்ட 12 நவீன ஆயுதங்கள் மீட்கப்பட்டன. மேலும், கையெறி குண்டுகள், பாம்பே குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயன்படுத்தக்கூடிய தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன” என்றார்.
மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், மணிப்பூர் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
மெய்தேய் ஆண்களின் உடல்களை இன்னும் பெற்றுக்கொள்ளாத குடும்பத்தினர்
பட மூலாதாரம், Dinesh Kumar Sharma
இந்த ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதிக்குப் பிறகு, பள்ளத்தாக்குப் பகுதியில் வசிக்கும் மெய்தேய் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும். இந்தத் தாக்குதல், மெய்தேய் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் இம்பால் பள்ளத்தாக்கில் பரவலான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், உயிரிழந்தவர்களின் உடல்களை இம்பாலில் உள்ள முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன்பு வைத்திருந்தனர். பின்னர், பாதுகாப்புப் படையினர் அந்த உடல்களை அங்கிருந்து அகற்றினர்.
மூவரின் உடல்களும் தற்போது இம்பாலில் உள்ள அக்டோபர் 24-ஆம் தேதி நிலவரப்படி அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. நீதி கிடைப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை உடல்களைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மெய்தேய் சமூகத்துடன் தொடர்புடைய ‘மணிப்பூர் பூர்வகுடி மக்கள் குழு’ அமைப்பு, இந்தக் கொலைகளைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன் தாக்கம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காணப்பட்டது.
புதன்கிழமை மாலை 5 மணியுடன் முழு அடைப்புப் போராட்டம் முடிவடைந்தது. இருப்பினும், வியாழக்கிழமையும் இம்பாலில் சந்தைகள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருந்தன. மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புகளும் ‘மீரா பைபி’ எனப்படும் பெண்கள் அமைப்பினரும் இம்பாலில் தொடர்ந்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெய்தேய் சமூகத்தினர் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த இம்பாலைச் சேர்ந்த கிரண், “கடந்த ஆறு மாதங்களாகப் பள்ளத்தாக்கில் அமைதி நிலவியது. ஆனால், குக்கி ஆயுதக் குழுவினர் அப்பாவி மக்களைக் கொன்று மீண்டும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளனர்” என்றார்.
மாநிலத்தில் நிலவும் வன்முறை குறித்த கேள்விக்குப் பதிலளித்த கிரண், “நிலைமை மேம்பட்டுள்ளதாகவும், மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்றும் அரசாங்கத்தில் உள்ள சிலர் கூறி வந்தனர். இந்த உறுதிமொழியை நம்பித்தான் எங்கள் மக்கள் அருகிலுள்ள காட்டுக்கு விறகு சேகரிக்கச் சென்றனர். ஆனால், அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது இதற்கு யார் பொறுப்பேற்பது?” என்று கேள்வி எழுப்பினார்.
வன்முறை ஏன் அதிகரித்துள்ளது?
பட மூலாதாரம், https://x.com/YKhemchandSingh
சந்தேகத்துக்குரிய தீவிரவாதக் குழுக்களின் ஈடுபாடே மணிப்பூரில் வன்முறை திடீரென அதிகரித்ததற்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
குக்கி பழங்குடியினரின் முக்கிய சிவில் சமூக அமைப்பான ‘குக்கி இன்பி’, மலை மாவட்டங்களில் நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் தீவைப்புச் சம்பவங்களுக்கு நாகாலாந்தின் தேசிய சோசலிச கவுன்சில் என்ற நாகா தீவிரவாத அமைப்பே காரணம் என்று தனது அறிக்கைகளில் குற்றம்சாட்டுகிறது.
அதேவேளையில், மணிப்பூரில் உள்ள நாகா பழங்குடியினரின் உயர்மட்ட சமூக மற்றும் அரசியல் அமைப்பான ஐக்கிய நாகா கவுன்சில், இந்தத் தாக்குதல்களுக்கு ஆயுதச் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பல்வேறு குக்கி ஆயுதக் குழுக்களே காரணம் என்று குற்றம் சாட்டுகிறது.
மணிப்பூரில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஓய்வுபெற்ற இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஹிமாலயா சிங் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், “சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்குப் போதுமான பாதுகாப்புப் படையினர் மாநிலத்தில் உள்ளனர். இருப்பினும், வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.
“அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இடையே கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒருங்கிணைப்பு குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாதது அவர்களுக்கு மேலும் துணிச்சலை அளித்துள்ளது” என்றும் அவர் கூறினார்.
மணிப்பூரைச் சேர்ந்தவரான லெப்டினன்ட் ஜெனரல் ஹிமாலயா சிங், மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறைக்கு வெளிப்புற சக்திகளும் காரணம் என நம்புகிறார்.
அவர் கூறுகையில், “இங்கு அமைதி நிலவுவதை விரும்பாத வெளிப்புற சக்திகள் அதிகரித்து வரும் வன்முறைக்குத் தூண்டுதலாக உள்ளன. மணிப்பூர் மியான்மருடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. அண்மைய வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில், எல்லைக்கு அப்பால் செயல்படும் சில தீவிரவாதக் குழுக்களின் பெயர்களும் வெளியாகியுள்ளன.
உண்மையில், மணிப்பூர் தற்போது புவிசார் அரசியலுக்கான போர்க்களமாக மாறியுள்ளது. இன மோதலுக்கான மற்றொரு காரணம் மதம் மற்றும் பழங்குடி அடையாளம் தொடர்பானது. சிலர் இத்தகைய பிரிவினையை ஏற்படுத்தும் பிரச்னைகளைத் தூண்டி நிலைமையை மேலும் மோசமாக்குகின்றனர்” என்றார்.
மணிப்பூரில் நீண்டகாலமாக மனித உரிமைப் பணிகளில் ஈடுபட்டு வரும் கே. ஓனில், குக்கி பழங்குடியினரின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் போதிய கவனம் செலுத்தாததும் இந்த வன்முறைக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் எனக் கருதுகிறார்.
வன்முறை திடீரென அதிகரித்திருப்பது குறித்துப் பேசிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஓனில், “இது நிலம் தொடர்பான மோதல். மாநிலத்தில் அமைதி திரும்பிவிட்டால், தனி நிர்வாகம் மற்றும் யூனியன் பிரதேசம் வேண்டும் என்ற குக்கி சமூகத்தினரின் கோரிக்கைகளைப் புறக்கணிக்க முடியும்” என்றார்.
“இந்திய அரசாங்கத்துடன் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் இருக்கும் தீவிரவாதக் குழுக்கள் வன்முறையைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றன. போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளை இந்த ஆயுதக் குழுக்கள் பின்பற்றாததால்தான் வன்முறை அதிகரித்துள்ளது” என்றும் அவர் கூறினார்.
மணிப்பூரில் நடைபெறும் வன்முறைகளில் ‘செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் ஒப்பந்தத்தின்’ கீழ் உள்ள ஆயுதக் குழுக்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் கருத்தில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஹிமாலயா சிங்கும் உடன்படுகிறார்.
அவர் கூறுகையில், “தற்போது வெளியாகும் அனைத்து வன்முறைச் சம்பவங்களிலும் தீவிரவாதக் குழுக்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்தத் தீவிரவாதக் குழுக்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படை விதிகள் அனைத்தையும் மீறுகின்றன என்பதையே இது தெளிவாகக் காட்டுகிறது” என்றார்.
அதிகரிக்கும் வன்முறை குறித்து அரசாங்கம் கூறுவது என்ன?
பட மூலாதாரம், https://x.com/KonthoujamG
வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்கு ராணுவ நடவடிக்கைகளைவிட இனக்குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையே முக்கியம் என மணிப்பூர் அரசு கூறுகிறது.
மாநில உள்துறை அமைச்சர் கோவிந்தாஸ் கொந்தோஜம் ஊடகங்களிடம் பேசுகையில், “துப்பாக்கிக் குழலிலிருந்து அமைதி பிறப்பதில்லை; பேச்சுவார்த்தையின் மூலம்தான் அமைதி ஏற்படும். எந்தவொரு கருத்து வேறுபாடாக இருந்தாலும், பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “வன்முறையில் ஈடுபடுபவர்களிடையே பரஸ்பர புரிதலை ஏற்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. அமைதியை நிலைநாட்ட நாம் பேசியாக வேண்டும் என்பதைப் பெரும்பாலானோர் புரிந்துகொண்டுள்ளனர். பாதுகாப்புப் படையினரை மட்டுமே நம்பிப் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது” என்றார்.
வன்முறையில் ஈடுபடும் குழுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர், “வன்முறையைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நிலைகளில் நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன” என்றார்.
உள்துறையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி கூறுகையில், “வன்முறை நடந்த மலை மாவட்டங்களுக்கு மூத்த காவல்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை டிஜிபி முகேஷ் சிங் நேரடியாகக் காம்ஜோங் மாவட்டத்துக்குச் சென்றுள்ளார். அங்கு குக்கி-நாகா சமூகத்தினரின் கவலைகளை அவர் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, 11-வது அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவு மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) பிரதிநிதிகளுடன் இணைந்து பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. மாநிலத்தில் அமைதியையும் இயல்பு நிலையையும் மீட்டெடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு