• Mon. Jul 14th, 2025

24×7 Live News

Apdin News

மரம் வெட்ட சட்டவிரோத அனுமதி வழங்கிய குமரி வன அலுவலர்கள் மீது நடவடிக்கை: ஐகோர்ட்டில் அரசு தகவல் | Illegal permission to cut trees Government informs High Court that action will be taken against kanyaKumari forest officials

Byadmin

Jul 14, 2025


மதுரை: குமரி மாவட்டத்தில் தனியார் வனத்தில் ரப்பர் மரங்களை வெட்ட சட்டவிரோதமாக அனுமதி வழங்கிய வன அலுவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட்தாஸ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘குமரி மாவட்டத்தில் வன அலுவலர்கள் ஆனந்த், ஷாநவாஸ்கான், ஸ்ரீவல்சன் ஆகியோர் கடையல் வனப்பகுதியில் தனியார் வனத்தில் வளர்ந்துள்ள சுமார் 4000 ரப்பர் மரங்களை வெட்ட தனிநபர்களுக்கு சட்ட விதிகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த தனிநபர்கள் ஆற்றுப் புறம்போக்கு பகுதியில் வளர்ந்திருந்த மரங்களையும் வெட்டியுள்ளனர். ரப்பர் மரங்களை வேருடன் சாய்க்க ஜெசிபி, ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, குமரி மாவட்டத்தில் வனத்துறை விதிகளை மீறி செயல்படும் வன அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கவும், தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு விதிப்படி மரங்கள் கட்டுப்பாடு இல்லாமல் வெட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சம்பந்தப்பட்ட வன அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மேல்முறையீடு மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



By admin