திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திருநெல்வேலியில் தாமிரபணியில் உயிர்நீத்த மாஞ்சோலை தொழிலாளர்களின் 26-வது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற டாக்டர் கிருஷ்ணசாமி, தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ”திருநெல்வேலியில் மண்ணுரிமை, மனித உரிமை வேண்டி போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்போது தாமிரபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு நதிக்கரையில் இடம் கோரியுள்ளோம். எங்களது சொந்த செலவில் நினைவு மண்டபம் கட்ட தயாராக இருக்கிறோம். ஆனால், அரசு தற்போது வரை இதற்கு செவி சாய்க்கவில்லை.
2028-ம் ஆண்டு வரை மாஞ்சோலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது என்ற நிலையில், மக்களுக்கு குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர மறுத்து, அவர்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்திருக்கிறோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
மாஞ்சோலை மக்களுக்கு 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி, 2 ஏக்கர் நிலத்தை அங்கேயே அரசு வழங்க வேண்டும். 1.73 லட்சம் ஹெக்டேர் வன நிலங்கள் மாற்று பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆனால் தமிழக முதல்வர் வஞ்சத்தோடு செயல்படுகிறார். மோசமான வரலாற்றில் தமிழக முதல்வர் இடம்பெற கூடாது. வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. மாஞ்சோலைக்கு இறுதி அத்தியாயம் எழுத நினைத்தால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இறுதி அத்தியாயத்தை நாங்கள் எழுதுவோம்” என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.