மகாராஷ்டிராவின் தானேயில் செயல்பட்டுவரும் ஒரு பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை கழற்றி அவர்களுக்கு மாதவிடாய் வந்துள்ளதா என சரிபார்த்த பள்ளி முதல்வரும், பெண் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளியில் பெண்களுக்கான கழிப்பறை சுவரில் ரத்தக் கறைகள் காணப்பட்டதால், மாணவிகளுக்கு மாதவிடாய் இருக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க அவர்களின் ஆடைகளைக் கழற்றியதாக அவர்கள் இருவரும் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாதவிடாய் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட’10 முதல் 15 சிறுமிகளில்’ ஒருவரின் தாய் அளித்த புகாரை அடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இந்தப் பள்ளியில் நர்சரி முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 600 மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
தானே மாவட்டத்தின் ஷாபூரில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்தது. புதன்கிழமையன்று பள்ளியில் போராட்டம் நடத்திய பெற்றோர்கள், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரினார்கள்.
பெற்றோரின் கோரிக்கையை ஏற்ற போலீசார், 8 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், பள்ளியின் முதல்வர் மற்றும் பெண் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். இதைத் தவிர, பெண்களை அவமதித்தல், கண்ணியக் குறைவாக நடத்துதல் மற்றும் தாக்குதல் தொடர்பான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்பு புகைப்படம்
குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பை தெரிந்துக் கொள்ள பிபிசி மராத்தி அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றபோதிலும், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
பள்ளி மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருவதாக மூத்த காவல் அதிகாரி மிலிந்த் ஷிண்டே பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
தானே மாவட்டத்தின் ஷாப்பூர் தாலுகாவில் அமைந்துள்ள ஆங்கில மொழியில் கல்வி கற்பிக்கும் ஒரு பள்ளியில் ஜூலை 8ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ஜூலை 8ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணிக்குள், பள்ளியில் படிக்கும் மாணவிகளில் சுமார் 125 பேரை பள்ளி முதல்வர் பள்ளியின் அரங்கத்திற்கு அழைத்தார்.
ஒரு ப்ரொஜெக்டரில் காட்டப்பட்ட காட்சியில் பள்ளி குளியலறையின் சுவர்களிலும் தரையிலும் ரத்தக் கறைகள் இருந்தது தெரியவந்தது. அங்கிருக்கும் மாணவிகளில் யாருக்கெல்லாம் மாதவிடாய் வருகிறது என்று கேட்கப்பட்டது. மேலும் தற்போது யாருக்கு மாதவிடாய் காலம் என்றும், சுவர்களில் ரத்தம் எப்படி வந்தது? என்றும் விசாரணை நடைபெற்றது.
பட மூலாதாரம், Getty Images
மாதவிடாய் வந்ததாகக் கூறிய மாணவிகளின் உள்ளங்கை அச்சுகளை பதிவு செய்யுமாறு சில ஆசிரியர்கள் சொன்னார்கள்.
மாதவிடாய் தற்போது இல்லை என்று கூறிய மாணவிகளை குளியலறைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் ஆடைகளை கழற்றி பரிசோதிக்குமாறு பெண் ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அனைத்து மாணவிகளுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு திரும்பியதும் தங்கள் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை சில மாணவிகள் தெரிவித்தனர். சில மாணவிகள் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. ஆனால், இந்த சம்பவத்திற்குப் பிறகு சில மாணவிகள் பள்ளிக்கு வர மறுத்துவிட்டதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
காவல்துறையில் புகாரளித்த பெற்றோரில் ஒருவர், மாதவிடாய் இல்லாத தனது மகளை திட்டிய பள்ளி நிர்வாகத்தினர், ஏன் சானிட்டரி பேட் அணியவில்லை என்று கேட்டதாகவும், தனது மகளின் உள்ளங்கை ரேகை கூட எடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
தன்னை இதுபோன்று நடத்தியதால் தனது மகள் “மிகவும் சங்கடப்பட்டதாக” அந்தப் பெண் கூறினார்.
இந்த சம்பவத்தால் தங்கள் மகள்கள் அதிர்ச்சியில் இருப்பதாக சில பெற்றோர்கள் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தனர்.
“இந்த சம்பவம் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. எங்கள் மகள்கள் மிகவும் பயப்படுகிறார்கள். பள்ளிக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஒரு மாணவியின் பெற்றோர் கேட்டுக்கொண்டார்கள்.
தான் கேள்வி கேட்டபோது, பள்ளியின் முதல்வர் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுத்ததாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் தாய் கூறினார். “எப்படி இவ்வளவு குழந்தைகள் ஒரே நேரத்தில் பொய் சொல்ல முடியும் என்ற எங்கள் கேள்விக்கு, பள்ளியிடம் பதில் இல்லை” என்று அவர் கூறினார்.
30 முதல் 40 மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்த பிறகு பள்ளியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.
பெற்றோரின் கோபத்தைக் கண்ட முதல்வர் காவல்துறையினரை அழைத்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல்துறையினரும் அதிகாரிகளும் உடனடியாக அங்கு வந்தனர். கோபத்தில் இருந்த மாணவிகளின் பெற்றோர்களை காவல்துறையினர் அமைதிப்படுத்த முயன்றனர்.
பட மூலாதாரம், Getty Images
மூடப்பட்ட பள்ளி
பள்ளியின் தொலைபேசி எண்ணில் பிபிசி தொடர்பு கொண்டபோது, முதல்வர் மற்றும் பிறர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இது தவிர, வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், பள்ளி தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் தொலைபேசியில் பேசியவர்கள் தெரிவித்தனர்.
ஒரு காணொளியில், பள்ளி முதல்வர் கோபமடைந்த பெற்றோருடன் வாக்குவாதம் செய்வதைக் காணலாம், மாணவிகளின் ஆடைகளை அவிழ்க்குமாறு தான் எந்த உத்தரவையும் கொடுக்கவில்லை என்றும், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் கூறுகிறார்.