திருநெல்வேலி: மாநில ஆளுநர்களின் அதிகாரங்களில், முதல்வர்கள் தலையீடு இருக்கக் கூடாது என்று மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார். பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268-வது குருபூஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மாநில முதல்வர்களுக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளன. அதைவைத்து மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதைவிடுத்து, ஆளுநருக்கு இருக்கும் சில அதிகாரங்களில் முதல்வர்கள் தலையிடக் கூடாது. மாநிலத்தின் முதல் பிரஜையாக ஆளுநர்தான் உள்ளார். நான் 4 மாநிலங்களில் ஆளுநராக இருந்திருக்கிறேன். 2 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்தான். ஆனால், இதுபோன்ற எந்தப் பிரச்சினைகளும் அங்கு ஏற்படவில்லை.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போது ஒரு தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு, முதல்வருக்குதான் அதிகாரம் என இங்குள்ளவர்கள் கூறி வருகின்றனர். மாநில ஆளுநர்களின் அதிகாரங்களுக்குள் முதல்வர்கள் தலையீடு இருக்கக் கூடாது. இவ்வாறு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.