பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தாரை வார்க்கும் முடிவு
தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் 5 பேர் கொண்ட தேடல் குழுவை அமைப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், அதற்காக பல்கலைக்கழகங்களின் சட்டத்தை திருத்த முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின் உரிமைகளை தாரை வார்க்கும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த சர்ச்சையில் தமிழக அரசின் முடிவை விமர்சித்து கடந்த 8-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாட்டில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கு தனித்தனிச் சட்டங்கள் உள்ள நிலையில், அதனடிப்படையில் மட்டும் தான் அமைக்க முடியும். அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி என மூவரை மட்டுமே தேர்வுக் குழுவில் சேர்க்க பல்கலைக்கழக சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினரையோ, வேறு உறுப்பினரையோ சேர்ப்பது சட்டவிரோதம். தமிழக பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்காத பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நியமன நடைமுறையில் உள்நுழைப்பது தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தும்’’ என்று எச்சரித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாகவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.