சிவில் உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை எஃப்.பி.ஐ. கண்காணித்து தயாரித்த கோப்புகள் உட்பட அவருடைய படுகொலை தொடர்பான ஆவணப் புதையலையே அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மொத்தம் 230,000 பக்கங்கள் உள்ள இந்த ஆவணங்கள், நீதிமன்ற உத்தரவு காரணமாக 1977ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வையிட முடியாமல் மறைக்கப்பட்டிருந்தது.
லூதர் கிங் குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “இந்த ஆவணங்களை பயன்படுத்தி எங்கள் தந்தையின் நற்பெயரை கெடுக்கும் எந்த முயற்சியையும் கண்டிப்பதாக,” அவரது இரண்டு குழந்தைகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்டிஸ்ட் மத போதகராக இருந்த கிங், 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி தனது 39ஆவது வயதில் சுட்டுக்கொல்லப்பட்டார். தொழில்முறை குற்றவாளியான ஜேம்ஸ் ஏர்ல் ரே இந்த கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார், ஆனால் பின்னர் தனது வாக்குமூலத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்.
செல்வாக்கு மிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் 2019 சிறை மரணம் தற்கொலையாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக டிரம்பின் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
“எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக டிரம்பை சூழ்ந்துள்ள சர்ச்சைப் புயல் மற்றும் பொதுவெளியில் அவரது நம்பகத்தன்மை குலைவு ஆகியவற்றிலிருந்து கவனத்தை திசைதிருப்ப மேற்கொள்ளப்பட்ட ஒரு தீவிர முயற்சி,” என சிவில் உரிமைகள் தலைவர் ஆல் ஷார்ப்டன் தெரிவித்தார்.
ஆவணங்கள் வெளியீடு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்ட கிங் ஜூனியரின் உயிருடன் உள்ள இரு பிள்ளைகளான மார்ட்டின் III மற்றும் பெர்னிஸ் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில்,” இந்த கோப்புகளைப் பயன்படுத்துபவர்கள் இரக்கம், கட்டுப்பாடு மற்றும் எங்கள் குடும்பத்தின் துக்கத்தின் மீதான மரியாதையுடன் இதை அணுக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்,” என தெரிவித்தனர்.
“இந்த கோப்புகளின் வெளியீடு அவற்றின் முழு வரலாற்று பின்னணியில் பார்க்கப்படவேண்டும்.
“J. எட்கர் ஹூவர் தூண்டுதலில் ஃபெடரெல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) மூலம் இடைவிடாமல் நடத்தப்பட்ட தலையீடும், ஆழமாக பாதிக்கும் தவறான தகவல் பரப்புதல் மற்றும் கண்காணிப்பால் எங்கள் தந்தை அவர் வாழ்நாளில் தொடர்ந்து குறிவைக்கப்பட்டார்.”
அரசாங்கத்தின் கண்காணிப்பு, கிங்கிற்கு “தனிநபர் குடிமகனின் கண்ணியம் மற்றும் சுதந்திரங்களை” மறுத்தது என்று அந்த அறிக்கை கூறியது.
1999-ல் ஒரு இந்த சிவில் உரிமைகள் தலைவர் ஒரு இனவாத துப்பாக்கி தாங்கிய தனி நபரால் பலியாகவில்லை, (மார்ட்டின் லூதர் கிங்) மாறாக அவர் ஒரு பரந்த சதித்திட்டத்தால் பலியானார் என்று நடுவர் மன்றம் கண்டறிந்ததையும் குடும்பம் மேற்கோள் காட்டியது.
கிங் மற்றும் முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் படுகொலைகள் மற்றும் ராபர்ட் எஃப். கென்னடியின் படுகொலை ஆகியவற்றின் ரகசிய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட டிரம்ப் ஜனவரியில் உத்தரவிட்டார்.
“இன்று வரை கிங் கோப்புகள் “பல தசாப்தங்களாக பெடரல் அரசிடம் தூசி படிந்து கிடந்தன,” என்று தேசிய புலனாய்வு இயக்குநரகம் (DNI) திங்களன்று ஒரு செய்தி வெளியீட்டில் கூறியது.
இந்த ஆவணங்களில் “எஃப்.பி.ஐ.யின் உள் குறிப்புகள்” மற்றும் “கிங்கின் கொலையாளியைத் தேடுவதற்கு பின்னால் உள்ள முன்பு பார்க்கப்படாத CIA பதிவுகள்” அடங்கும் என்று டிஎன்ஐ கூறியது.
எஃப்.பி.ஐ., நீதித்துறை, தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் சிஐஏவுடன் ஆகியவை ஒருங்கிணைந்து இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளன.
“எங்கள் நாட்டின் மாபெரும் தலைவர்களில் ஒருவரின் கொடூரமான படுகொலைக்கு பல தசாப்தங்களுக்குப் பிறகு பதில்களை பெற அமெரிக்க மக்களுக்கு உரிமை உள்ளது,” என்று அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார்.
படக்குறிப்பு, 1963-ல் வாஷிங்டன் டிசியிடிசியில் “எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்ற வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்திய தினத்தில் மார்ட்டின் லூதர் கிங்
கிங்கின் குடும்பத்தில் எல்லோரும் இந்த வெளியீடு குறித்து வருத்தப்படவில்லை.
“வெளிப்படைத்தன்மைக்கு உறுதி அளித்த அதிபர் டிரம்ப் மற்றும் DNI கப்பார்டுக்கு நான் நன்றி கூறுகிறேன்.” என சிவில் உரிமைகள் தலைவரை “என் மாமா” என்று குறிப்பிட்டு, ஆல்வேடா கிங் கூறினார்.
“அவரது மரணத்திற்கு நாங்கள் தொடர்ந்து துக்கம் அனுசரித்தாலும், இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டது, அமெரிக்க மக்கள் தெரிந்துகொள்ள உரிமையுள்ள உண்மையை நோக்கிய ஒரு வரலாற்று நடவடிக்கை .”
கைது செய்யப்படுவதற்கு முன்பு, கிங்கின் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜேம்ஸ் ஏர்ல் ரே, கனடா, போர்ச்சுகல் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு தப்பி ஓடினார், அங்கு அவர் ஒரு வங்கியை கொள்ளையடித்தார்.
மெம்ஃபிஸுக்கு நாடு கடத்தப்பட்ட அவர், 1969-ல் குற்றவாளி என ஒப்புக்கொண்டு 99 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார்.
பின்னர், அவர் மர்மமான சதிகாரர்களால் சிக்கவைக்கப்பட்டதாகக் கூறி, தனது வாக்குமூலத்தை மறுக்க முயன்றார், ஆனால் அது நீதிமன்றங்களால் தொடர்ந்து உறுதி செய்யப்பட்டது. ரே 1998-ல் 70 வயதில் இறந்தார்.