பட மூலாதாரம், UGC
-
- எழுதியவர், அமரேந்திர யார்லகடா
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி குடியரசில் 3 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் தெலுங்கு பேசும் நபர், மற்ற இருவர் ஒடிசா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
“ஜூலை 1 ஆம் தேதி, மாலி குடியரசின் கீஸ் பகுதியில் உள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையின் வளாகத்துக்குள் ஆயுததாரிகள் நுழைந்தனர். அவர்கள் 3 இந்தியர்களை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்டவர்களில் ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த குரகுல அமரலிங்கேஸ்வர ராவ் என்பவரும் ஒருவர் என்று குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த பனாட் வெங்கடரமணாவும் உள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஜோஷி என்ற மற்றொருவரும் கடத்தப்பட்டவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவரது முழு விவரம் இன்னும் தெரியவில்லை.
பட மூலாதாரம், AFP via Getty Images
இந்தியர்கள் மாலிக்குச் சென்றது ஏன்?
மாலியில் உள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையில் ஜோஷி பொது மேலாளராகவும், அமரலிங்கேஸ்வர ராவ் உதவி மேலாளராகவும் பணியாற்றுகின்றனர். பனாட் வெங்கடரமணா ஒரு பொறியாளராக பணிபுரிகிறார்.
தற்போது, அவர்களின் பாதுகாப்பு குறித்து குடும்ப உறுப்பினர்கள் கவலைப்படுகிறார்கள்.
இந்த டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பிரசாதித்யா குழுமத்தால் நடத்தப்படுகிறது.
மோட்டபர்த்தி சிவராம வர பிரசாத் இதன் தலைவராக உள்ளார். கடத்தல் சம்பவம் குறித்து டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை.
அதனையடுத்து பிபிசி டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலை நிர்வாகத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது. அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.
மறுபுறம், கடத்தலை யார் செய்தார்கள் என்பது குறித்து தெளிவான தகவலும் இல்லை. கடத்தல்காரர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது, ஆனால் அவர்கள் பயங்கரவாதிகளா என்பதை உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும், மேற்கு மற்றும் மத்திய மாலியில் உள்ள ராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு அல்-கொய்தாவின் துணை அமைப்பான ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமீன் (JNIM) பொறுப்பேற்றுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், UGC
‘விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டார்கள்’
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், மச்சர்லா மண்டலம், ஜம்மலமடகா கிராமத்தைச் சேர்ந்த அமரலிங்கேஸ்வர ராவுக்கு, வெங்கட ரமணா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
முன்னதாக, அவர்களது குடும்பம் மிரியாலகுடாவில் வசித்து வந்தது, ஆனால் பின்னர் ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. நகருக்கு குடிபெயர்ந்தது.
அமரலிங்கேஸ்வர ராவின் பெற்றோர் ஜம்மலமடகாவில் வசிக்கின்றனர்.
அமரலிங்கேஸ்வர ராவ் கடந்த எட்டு ஆண்டுகளாக டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருவதாக அவரது மைத்துனர் கோட்டேஸ்வர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
“நான் ஜூலை 1 ஆம் தேதி காலை வேலைக்குச் சென்றேன். அந்த நேரத்தில், ஆயுததாரிகள் தொழிற்சாலை வளாகத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் தொழிற்சாலையின் பொது மேலாளர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த எனது மைத்துனர் வெங்கட ராமணாவை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு, அவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என தொழிற்சாலை நிர்வாகம் கூறுகிறது,” என்று அவர் கூறினார்.
“அவர்கள் இந்த வருடம் அக்டோபர் 2 ஆம் தேதி இந்தியா வர விரும்பினர். விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்தனர்.” என்று பிபிசியிடம் கோடேஸ்வர ராவ் தெரிவித்தார்.
அமரலிங்கேஸ்வர ராவ் கடத்தப்பட்டதாக டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலை நிர்வாகம் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவித்தது.
“நாங்கள் தொழிற்சாலை உரிமையாளர் பிரசாத்தை சந்தித்தோம். அவரும் முயற்சி செய்வதாகச் சொன்னார்,” என்று கோடேஸ்வர ராவ் விளக்கினார்.
இதற்கிடையில், அமரலிங்கேஸ்வர ராவின் குடும்ப உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மத்திய நிலக்கரி சுரங்க அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியை சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாலியில் கடத்தப்பட்டவர்களை விரைவில் விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் மாலியில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அவர் கடிதம் எழுதினார்.
இருப்பினும், மாலியில் நடந்த கடத்தல் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று மிரியலகுடா டிஎஸ்பி ராஜசேகர ராஜு பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், UGC
‘முதலில் போலீஸ் என்றார்கள், இப்போது பயங்கரவாதிகள் என்கிறார்கள்’
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள சமர்ஜோலா கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான பி. வெங்கட ரமணா கடத்தப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினரும் கவலையடைந்துள்ளனர்.
அவர் கடந்த ஆறு மாதங்களாக ப்ளூ ஸ்டார் நிறுவனத்துக்காக டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாக குடும்ப உறுப்பினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
“வெங்கட ரமணாவின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன்,” என்று அவரது தாயார் பி. நர்சம்மா தனது கவலையை வெளிப்படுத்துகிறார்.
தனது மகன் கடத்தப்பட்டது தொடர்பாக ஹின்ஜிலி காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளார்.
“வெங்கடரமணா கடைசியாக ஜூன் 30 அன்று பேசினார். வேலைக்குச் செல்வதாகக் கூறினார். அதன் பிறகு அழைக்கிறேன் என்றார். மூன்று நாட்களுக்குப் பிறகு, எனக்கு நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. ஆனால் எனக்கு எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு, என் இளைய மகன் போன் செய்து, என் சகோதரனை மாலியில் போலீஸார் கைது செய்ததாகக் கூறினார். ஆனால் தொலைக்காட்சியில், அவர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனக்கு மிகவும் கவலையாக உள்ளது” என்று நர்சம்மா தெரிவித்தார்.
ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், வெங்கடரமணா குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“கஞ்சம் மாவட்டத்தின் ஹின்ஜிலிகாட் பகுதியைச் சேர்ந்த வெங்கட ரமணா சில பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது. இந்த விஷயத்தை ஆராய்ந்து அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருமாறு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
மாலி எங்கே உள்ளது?
மாலி குடியரசு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. இதன் தலைநகரம் பமாகோ. இதன் மக்கள்தொகை தோராயமாக 23 மில்லியன் ஆக உள்ளது.
1990களில் இருந்து இந்திய தொழிலதிபர்கள் மாலிக்குச் சென்று முதலீடு செய்து வருவதாக பமாகோவில் உள்ள இந்திய தூதரகம் கூறுகிறது.
சுரங்கம், மின்சாரம், எஃகு, சிமென்ட், மருந்து மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் சுமார் 400 இந்தியர்கள் அந்நாட்டில் வசித்து வருவதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மாலியில் ‘ஜிஹாதி போராளிகள்’ ராணுவ தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜூலை 1 ஆம் தேதி மாலியில் உள்ள ராணுவம் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .
“வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மாலியின் சூழலைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடத்தப்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக திரும்பி வருவதை உறுதி செய்வதற்காக நாங்கள் மாலி குடியரசுடன் தொடர்பில் இருக்கிறோம். இதுபோன்ற தாக்குதல்களை இந்திய அரசு வன்மையாகக் கண்டிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், மாலியில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்குமாறும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
“மாலியில் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் பமாகோவில் உள்ள தூதரகத்தைத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு