• Sat. Jun 27th, 2026

24×7 Live News

Apdin News

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

Byadmin

Jun 27, 2026


மிகக் கொடூரமான ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறவில்லை. கட்சிகளும் மக்களும் ஒன்றிணைந்து தொடர்ச்சியான எதிர்ப்புகளை தெரிவிப்பதன் மூலம் தான் இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை (25) சாவகச்சேரியில் கடையடைப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டன.  இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மிகக் கொடூரமான ஆட்சியான கடந்த கால ஆட்சியில் கூட இப்படியான நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை. எத்தகைய விசாரணைகள் நடைபெற்றாலும் இறுதியாக நீதிமன்றத்தின் ஊடாகவும் அல்லது தேர்தல் திணைக்களத்தின் ஊடாகவும்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதனை விடுத்து அரச நிகழ்ச்சி நிரலில் ஆளுநர் இதனை செய்துள்ளார்.

எதற்காக இவர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற கேள்வி வருகின்றபோது அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. சாவகச்சேரி நகரசபை தவிசாளர் கிசோர் நீக்கப்பட்டதற்கு காரணமாக சாவகச்சேரியில் மக்களுக்கு எதிராக, வர்த்தகர்களுக்கு எதிராக ஏதாவது நடைபெற்றால் உடனடியாகவே குரல் கொடுப்பவர். இதுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. வவுனியா மாநகர சபை தவிசாளருக்கு எதிராக ஆரம்பத்தில் எதுவும் இல்லை. மூன்று மாத காலமாகத்தான் ஊழல் என்று காரணம் கூறப்படுகிறது. முறையான காரணங்கள் தெரிவிக்காது ஊழல் செய்துவிட்டதாக ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நிலைமைகள் தொடர்ந்தும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஐனநாயகத்திற்கான அச்சுறுத்தலாக உருவாகிக் கொண்டிருப்பதாக நாங்கள் உணர்கின்றோம். மக்கள் மட்டுமல்ல தமிழ்கட்சிகள் மட்டுமல்ல ஐனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் அனைவருக்குமே ஒன்றிணைந்து இதனை எதிர்ப்பதன் மூலம் தான் இப்படியான செயற்பாடுகளை தடுக்க முடியும். அதுமட்டுமன்றி ஐனநாயகத்தை மீண்டும் உருவாக்க முடியும். மிக்க கொடூரமான ஆட்சி என கடந்த காலங்களில் கருதப்பட்ட ஆட்சியில் கூட எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறான செயல்திட்டங்கள் செயற்படுத்தவில்லை வேறுவிதமான செயற்பாடுகள் நடந்திருக்கலாம்.

ஆனால் ஐனநாயகத்திற்கு எதிராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை விலத்துகின்ற ஐனநாயக விரோத செயல்கள் நடைபெறவில்லை. இத்தகைய ஐனநாயக விரோத செயல்பாடுகள் இடம்பெறாது இருக்க தமிழ்கட்சிகள், மக்கள் இணைந்து தொடர்ச்சியாக இணைந்து போராடுவதன் மூலம் தான் இவைகளை தடுத்து நிறுத்தலாம் என்றார்.

உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்தில், நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரை வடமாகாண ஆளுநர், உப தவிசாளரின் பதவியை நீக்கியும், நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும், சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்றைய தினம் முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சாவகச்சேரி சந்தை, வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

அதேவேளை , கொடிகாமம் பகுதிகளிலும் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன்,சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

By admin