நினைவுகளின் தொடர்ச்சி;
தடுத்து நிறுத்தி – அவற்றை,
மறந்திட வைத்திடும்;
மனமில்லாத தேசத்தில்.
மக்கள் பலவகை;
பாசம் என்றொரு வேசம்;
நனைந்து நாடிழந்தோம்
நயவஞ்சகத்தால் இங்கே.
முடிந்து விடாது தொடரும்
முள்ளிவாய்க்கால் நினைவுகள்.
முடிச்சிடும் ஆயிரம்
முனைப்புக்களின் தொடர்ச்சி.
தலைவரின் இருப்பின்
அவசியம் புரிந்தது.
பதினேழாண்டு தவித்த
பரிதவிப்பால் எமக்கு.
ஈழத்தமிழினம் பட்ட
துயரிங்கே மீண்டும்
தொடங்கிய புள்ளிக்கே
திரும்பிக் கொண்டது.
வட்டமென்ற வாழ்க்கை
துயரிலும் சரியானது.
நின்மதியாக வாழ்ந்திட – எம்
நிலம் வேண்டும் எமக்கு.
என்ன வளமில்லை எம்மிடம்?
ஏனிந்த அந்தரிப்போ?
ஒற்றுமை விட்டொரு
தனித்துவம் எதற்கிங்கே?
முடிவுகள் தவறாகி போகிறது;
முந்திக்கொள்ளும் சுயநலம்;
சந்தி சிரித்திட ஈழத்தமிழினம்
நொந்து சாகிறது நாளுமிங்கே.
முள்ளிவாய்க்கால் தந்த
படிப்பினை மறந்தோமோ?
மீண்டெழும் வழிகளை மூடி
பகைவன் வென்று விட்டானோ?
அறிவால் அளித்திடும்
ஆற்றல் பெற்றிங்கே நாம்
மொழிக்காய் போரிட்டு
வெல்வோம் துயரொழித்து.
குரல்கொடுத்து நாம்
கரம் பிடிப்போம். – ஒற்றுமை
இதுவென்று காட்டிட இனி
ஒத்திசைந்து நடந்திடுவோம்.
உயிர் கொடுத்து மண்ணில்
மீளாத்துயிலோடு மாவீரர்
மனங்கள் உறைந்து விட!
மானமா தமிழராய் நிமிர்வோம்.
முள்ளிவாய்க்கால் எமக்கு
முடிவல்ல புரிவோம்.
விழுந்து விட்டால் எழுவது
வீரருக்கு அழகென்று அறிவோம்.
நதுநசி
The post முடிந்து விடாது தொடரும் முள்ளிவாய்க்கால் நினைவுகள் | நதுநசி appeared first on Vanakkam London.