உடுமலை: திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உடுமலையில், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பங்கேற்கும் விழாவுக்காக தயார் செய்யப்பட்ட நேதாஜி மைதானம் மழையால் சேறும், சகதியுமாக மாறியது. அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக கடந்த 15 நாட்களாகவே உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
நாளை மடத்துக்குளம் தொகுதிக்கு உட்பட்ட நரசிங்காபுரத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவும், உடுமலையில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி உளிட்டோர் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. அதோடு, உடுமலை நேதாஜி மைதானத்தில் சுமார் 15,000 பேர் பங்கேற்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று திடீர் உடல் நலக்குறைவால் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த 2 நாட்களாகவே பரவலான மழை பெய்த நிலையில், அரசு விழா நடைபெறும் நேதாஜி மைதானம் சேறும் சகதியுமாக மாறியது. இதையறிந்த அதிகாரிகள் மழை நீர் தேங்கிய பகுதியில் கிராவல் மண் கொட்டி அதனை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நலத்திட்ட உதவிகள் தொடர்பாக பல்வேறு அரசு துறைகளின் உயர் அதிகாரிகளும் உடுமலையில் முகாமிட்டுள்ளனர். ஆட்சியர் மனீஸ் நாரணவரே தலைமையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
திருப்பூர் சாலை, பழைய மற்றும் மத்திய பேருந்து நிலையம், விழா நடைபெறும் சாலைகளில் திமுகவினர் முதல்வரை வரவேற்கும் விதமாக கட்சிக் கொடிகளை பறக்கவிட்டு வரவேற்பளிதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தனர். முதல்வரின் வருகை ஒத்திவைக்கப்பட்டதால் பயனாளிகள், திமுகவினர், அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.