முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த சீமான், மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரையும், துணை முதல்வர் உதயநிதியையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மு.க.முத்துவின் மறைவு மிகவும் வருத்தம் அளித்தது. அந்த துயரத்தை பகிர்ந்துகொள்ள என்னால் நேரில் செல்ல முடியவில்லை. எனவே முதல்வரையும், துணை முதல்வரையும் சந்தித்து என்னுடைய ஆறுதல்களை தெரிவித்தேன். அரசியல் பாதை, கொள்கை நிலைப்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் அதையும் தாண்டி ஓர் உறவு இருக்கிறது. கொள்கை கோட்பாடுகள் வேறு. மனித உறவும் மாண்பும் வேறு.
ஒருமுறை நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் மயங்கி விழுந்தபோது, என்னை தொடர்பு கொண்டு உடல்நிலையை கவனித்துக்கொள்ளும்படி ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல் என் அப்பா இறந்தபோது ஆறுதல் கூறியது மட்டுமின்றி, அமைச்சர் பெரியகருப்பனை அருகில் இருக்கச் செய்து செய்யவேண்டிய காரியங்களை செய்யச் செய்தார். இதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனித மாண்பும், பண்பும். இந்த நாகரிகம்தான் இந்த மண்ணில் இல்லாமல் போய்விட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக மலர வேண்டும்.
தவெக கட்சித் தலைவர் விஜய்யுடன் தற்போது பேசுவதற்கு அவசியம் ஏற்படவில்லை. அவரது பாதை மாறிவிட்டது. பயணம் மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்