• Wed. Jul 23rd, 2025

24×7 Live News

Apdin News

முன்னோரைப் போற்றும் ஆடி அமாவாசை…

Byadmin

Jul 22, 2025


அமாவாசை நல்ல நாளா?, கெட்ட நாளா? என்பதிலே பலருக்கும் மாற்றுக் கருத்து உண்டு. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இந்த நாளில், சுப காரியங்கள் செய்வதோ, ஒரு காரியத்தை தொடங்குவதோ கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம். இறைவனால் உண்டான இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு தினமும் நல்ல தினம்தான். அந்த வகையில் அமாவாசை தினமும் நல்ல நாளே.

சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்திக்கும் தினம், அமாவாசை. இந்த நாளில் இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மாக்கள், புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வரும். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணித்து, அவர்கள் தொடங்கும் காரியங்களை கணிவோடு பார்ப்பார்கள். அந்த காரியம் வெற்றிபெற ஆசிர்வதிப்பார்கள். எனவே இந்த நாளும் நல்ல நாள்தான்.

எனவே பித்ருக்கள் என்று அழைக்கப்படும் நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு மரியாதை செய்யும் அமாவாசை தினத்தில், புதிய காரியங்களைத் தொடங்கினால், அது நிச்சயம் நல்லவிதமாகவே நடைபெறும். அமாவாசை மாதம் தோறும் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது. அதில் ஆடி அமாவாசை வரும் வியாழக்கிழமை வரப்போகிறது.

அந்த நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு, வீடு, வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும். ஆடி அமாவாசை என்று இல்லாமல், ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை போன்ற ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்க வேண்டும்.

அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். அதுவும் இயலாதவர்கள் வீட்டில் வைத்து செய்யலாம். வீட்டில் செய்ய நினைப்பவர்கள், சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து குளித்து உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அன்று அரை நாள் விரதம் இருந்து புரோகிதரை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். அதுவும் முடியாதவர்கள் எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபடலாம். அதன் பிறகு சூரிய பகவானை பார்த்து வணங்க வேண்டும். அன்னதானம் செய்ய முடியாதவர்கள், ஒரு பசு மாட்டிற்கு 9 வாழைப்பழத்தை வழங்கலாம்.

முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசியை பெறுவதுடன், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்தும், பலவிதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் உள்ள கடல் அல்லது நதியில் நீராடலாம். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அது முடியாதவர்கள், ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தாலே, ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைத்து விடும்.

The post முன்னோரைப் போற்றும் ஆடி அமாவாசை… appeared first on Vanakkam London.

By admin