-
- எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை
- பதவி, பிபிசி தமிழ்
-
நேற்று வரை கூப்பிடு தூரத்தில் இருந்த பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்த உங்கள் குழந்தை நாளை முதல் பள்ளிக்குச் செல்ல 50 கி.மீ. பயணிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் தரும் வேலைக்காக 8 ஆயிரம் வாடகை கொடுத்து பெருநகரத்தில் தங்க வேண்டிய சூழலை கற்பனை செய்து பார்க்க முடியுமா? நேற்று வரை தமிழ்வழியில் படித்த குழந்தையை, நாளை முதல் இந்தி வழிக் கல்வியில் சேர்க்க நேர்ந்தால் என்ன ஆகும்?
“இதுதான் இன்று தங்களின் நிலை” எனக் கூறுகின்றனர் முன்பு டெல்லி ஜங்புராவில் வசித்த தமிழர்கள்.
ஜூன் 1ஆம் தேதி டெல்லி ஜங்புராவில் மதராசி கேம்ப்(Madrasi Camp) என்று அழைக்கப்படும் தமிழர் குடும்பங்கள் வசித்த பகுதி இடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிவிட நினைக்கும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய் துகொடுக்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மறுபுறம், மதராசி கேம்ப் இடிக்கப்பட்ட நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா, “குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக” கூறினார்.
இது நடந்து ஏறக்குறைய ஒன்றரை மாதம் நிறைவடைந்துவிட்டன.
அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் நிலை குறித்து அறிவதற்காக பிபிசி தமிழ் தலைநகரில் வசித்த தமிழர்களைத் தேடிப் பயணித்தது.
பல ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் தலைநகரில் குடியேறிய இந்த மக்கள், இத்தனை ஆண்டுகளில் தங்கள் சொந்த ஊரின் வேரை மறந்து டெல்லிவாசிகளாகவே மாறிப் போயிருக்கின்றனர். ஆனால், இவர்கள் தற்போது தங்கள் குடியிருப்புகளை இழந்துவிட்டதாக கவலையில் உள்ளனர்.
அவர்கள், “ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது புதிய குடியிருப்பு கொடுப்பதற்காக அரசு வகுத்துள்ள கொள்கை விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைக்கின்றனர்.
முதலில் ஜங்புராவுக்கு சென்றபோது, மதராசி கேம்பில் இருந்த சுமார் 380 வீடுகளும் முழுமையாக இடிக்கப்பட்டு மணல் மேடுகளே எஞ்சியிருந்தன. பின்னர் அங்கிருந்து புதிதாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நரேலா பகுதி நோக்கிப் பயணித்தோம்.
நரேலா, தலைநகர் டெல்லியின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு தொழிற்பேட்டை. ஒரு காலத்தில் விவசாய பூமியாக மிளகாய் உற்பத்திக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்த நரேலா தற்போது தலைநகர விரிவாக்கத்தால், தொழிற்பேட்டையாக மாறியிருப்பதாகக் கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள்.
நாங்கள் சென்ற போது டெல்லி வளர்ச்சிக் குழுமத்தால் (DDA) கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும், வீடுகளும் எங்களை வரவேற்றன. ஆச்சரியப்படுத்தும் வகையில் இத்தனை குடியிருப்புகளுக்கும் மத்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான வீடுகளிலேயே மக்கள் குடியேறியிருந்தனர்.
நரேலாவில் குடியேறியுள்ள கணேஷ் பிரபு அவருடைய இருப்பிடத்தை கூகுள் மேப் மூலம் பகிர்ந்ததால் நமது வாகனத்தில் எளிதாக அங்கு செல்ல முடிந்தது.
பிபிசி குழு கார் மூலம் சென்றதால் சுமார் 1 மணிநேரத்தில் இந்த இடத்தைச் சென்றடைய முடிந்தது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால் கூடுதலாக நேரம் ஆகலாம் என நரேலாவுக்கு சென்று திரும்பியவர்கள் கூறினர்.
ஒரு வழியாக அங்கிருந்த ஒரு மிகப்பெரிய குப்பை மேட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ளாக தமிழ்க் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ‘பாக்கெட் 5’ என்னும் இடத்தைக் கண்டுபிடித்தோம்.
அந்த வளாகத்தின் பாதுகாப்புக்கென இருந்த காவலாளி, எங்கள் வருகையைப் பதிவு செய்துகொண்டு உள்ளே அனுமதித்தார். அங்கு கணேஷ் பிரபு எங்களை வரவேற்றார்.
“நான் மதராசி கேம்பில் சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தேன். ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது அது இடிக்கப்பட்டுவிட்டது. எனக்கு வேறு வேலை தெரியாது. இப்போது எனக்கு இங்கே இரண்டாவது மாடியில் வீடு கொடுத்துள்ளார்கள். கீழே வீடு இருந்தால் இங்கேயும் கடை வைத்துப் பிழைத்துக் கொள்வேன்” என்றார்.
அங்கும் தரைத்தளத்தில் வசிக்கும் சிலர் குடியிருப்பிலேயே கடைகளை அமைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. தொடர்ந்து பேசிய கணேஷ் பிரபு, “எனக்கு இன்று பிழைக்க வழி இல்லை. வாடகை கொடுத்து குடியிருக்க என்னால் முடியாது. எனது மகன்களை மதுரையில் எனது பெற்றோரிடம் விட்டுவிட்டேன். நான் மட்டும் தனியாக இருக்க வேண்டும் என்பதால் டெல்லி நகருக்கு உள்ளாக என்னால் வாடகை கொடுக்க முடியாது. எனவே இங்கு வந்துவிட்டேன்” என்றார்.
“இந்த வீடுகள் ஒதுக்கப்படுவதற்காக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் என்பவரின் தாயார் பெயரில் 4வது தளத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில சிக்கல்களைக் காரணம் காட்டி அவர்களுக்கு வீட்டைக் கொடுக்க மறுக்கின்றனர்” என்று கூறிய கணேஷ் பிரபு அந்த வீட்டைக் காண்பித்தார்.
இவர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்னை தண்ணீர்தான். “பல வீடுகள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் குழாய் அடைப்புகள் சரி வரப் பொருத்தப்படாமல் இருக்கின்றன. இதனால் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரைச் சேமிக்க முடிவதில்லை” என கணேஷ் பிரபு கூறுகிறார்.
நரேலாவில் குடியேறியிருக்கும் அஞ்சலை பிபிசி தமிழிடம் பேசினார். “அங்கே (ஜங்புரா) இருக்கும்போது காலை 7.30 மணிக்கெல்லாம் வேலைக்குச் சென்று விடுவேன். 10 மணிக்கு வீடு வந்துவிட்டு, பின்பு மீண்டும் வேலைக்குச் செல்வேன். மாதத்திற்கு 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை என்னால் சம்பாதிக்க முடிந்தது. ஆனால் இங்கே வந்த பின்னர் என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. நான் எப்படிச் சாப்பிடுவது?” எனக் கேள்வி எழுப்பினார்.
“நான் வீடுகளில் பாத்திரம் துலக்குவது போன்ற வேலைகளைச் செய்துதான் பிழைப்பு நடத்துகிறேன். இங்கே நரேலாவில் இப்படி வேலை கொடுப்பதற்கான மக்கள் யாரும் இல்லை. நாங்கள் எப்படி பிழைப்பு நடத்துவது?” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்க் குடும்பங்களைத் தேடிச் சென்ற எங்களால் மூன்று பேரிடம் மட்டுமே பேச முடிந்தது. அவர்கள் தவிர வீடு ஒதுக்கீடு பெற்ற உலகநாதன் என்பவர், மற்ற தமிழ்க் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியை ஏற்றிருக்கிறார். தமக்கு வேறு வேலை ஏதுமில்லாத சூழ்நிலையில், தற்காலிக வேலையாக இது அமைந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
வீடு ஒதுக்கீடு பெற்ற மற்றவர்கள், வேலை செய்யும் இடத்திற்கு அருகில் இந்த இடம் இல்லை என்பதால் தாங்கள் வசித்த பழைய இடத்திற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்துக் குடியேறியுள்ளனர். கூலி வேலையில் சொற்ப ஊதியமே பெறும் தாங்கள் வாடகை செலுத்தவே முடியாமல் திண்டாடுவதாகவும் அவர்கள் கவலையை வெளிப்படுத்தினர்.
நரேலாவில் தமிழ்க் குடும்பங்கள் தவிர சிஆர்பிஎஃப் போன்ற மத்திய காவல் படைகளில் பணியாற்றுவோருக்கும் அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் குடிசைகள் அகற்றப்பட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்கும் இங்கே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சுமார் 8 மாதங்களுக்கு முன்னதாக இந்தப் பகுதியில் குடியேறிய சில இந்தி பேசும் சிறுவர்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகளைப் பகிர்ந்து கொண்டனர். பள்ளி செல்வதற்கே காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படும் நிலை இருப்பதாக அவர்கள் கூறினர்.
கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மற்றொரு இளைஞரும் பிபிசி தமிழிடம் இதே கவலையைப் பகிர்ந்துகொண்டார்.
“என்னால் இங்கு வந்த பின்னர் கல்வியைத் தொடர முடியவில்லை. நான்தான் எனது குடும்பத்தின் முதல் தலைமுறையாக பட்டம் பயில்கிறேன். ஆனால் இங்கிருந்து டெல்லி நகருக்குள் கல்விக்காகச் சென்று திரும்புவது இயலாத ஒன்றாக இருக்கிறது. இங்கே மருத்துவ வசதிகள் இல்லை. யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் 40 கி.மீ. தாண்டித்தான் செல்ல வேண்டும். அங்கே நகருக்குள் நாங்கள் இருந்த போது எங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அருகிலேயே இருந்தது” என்றார்.
‘மொத்தம், 170 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டன’ என்ற தகவலுக்கும், அங்கு இயல்பில் உள்ள சூழலுக்கும் முரண் இருந்ததால் மீண்டும் ஜங்புரா பகுதிக்கே திரும்பினோம்.
ஜங்புராவில் மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் நாங்கள் நுழைந்தோம். அங்கு மக்களைப் போராட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தயாராகிக் கொண்டிருந்தனர். நரேலாவில் வீடு ஒதுக்கப்படாத மக்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும், ஏற்கெனவே வீடு பெற்றவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.
அங்கிருந்த அன்பழகி என்ற பெண் பிபிசியிடம் பேசுகையில், “நான் இங்கிருந்து நரேலாவுக்கு வேனில் சென்று பார்த்தேன். ஓலா டாக்சியில் செல்வதற்கு 750 ரூபாய் வாங்கி விட்டனர். அங்கிருந்து திரும்ப வருவதற்கு மாலை 6 மணிக்குப் புறப்பட்டோம். இங்கு வந்து சேர இரவு 11 மணி ஆகிவிட்டது. வீட்டு வேலை செய்வதற்காக தினமும் இவ்வளவு தொலைவு என்னால் பயணிக்க முடியாது” என்றார். மேலும் “எனது பேரப்பிள்ளைகள் இங்குள்ள பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் நரேலாவுக்கு சென்றால் படிப்பைக் கைவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும்” என்றும் அன்பழகி கூறினார்.
இதேபோன்று போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்த ஜானகி பேசுகையில், “ஏற்கெனவே நரேலாவில் வீடு பெற்ற 170 பேர் போக மேலும் 26 பேருக்கு வீடு கொடுக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. ஆனால் அதிகாரிகள் அந்த வீடுகளை ஒதுக்கவில்லை” என்று கூறினார்.
டெல்லி லோதி பார்க்கில் தில்லி தமிழ்ப் பள்ளிகள் கூட்டமைப்பு நடத்தும் பள்ளியில் இந்தக் குழந்தைகள் படிக்கின்றனர். அங்கிருந்த குழந்தை பள்ளியில் படித்த தமிழ்ப் பாடலை பாடிக் காட்டினார். இனி இந்தக் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குள்ளாகி இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர்.
இவர்கள்போக, வீரம்மா, செல்வி ஆகிய இரு பெண்கள் வீடுகளில் வேலை பார்த்துவிட்டு, ஓய்வாக ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தனர். இவர்களில் வீரம்மாவுக்கு வீடு கிடைத்துள்ளது. செல்விக்கு வீடு கிடைக்கவில்லை.
“ஆனால் எங்கள் இருவரின் நிலையும் ஒன்றுதான்” என்கிறார் வீரம்மா. “பிழைப்பின்றி வீடு மட்டும் கிடைத்தால், அதை வைத்து என்ன செய்வது?” என்று கேள்வி எழுப்புகிறார்.
இதேபோன்று மூதாட்டி செல்லம்மாள் பேசுகையில், “45 வருடங்களாக இதே ஊரில் இருக்கிறேன். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம்தான் எனக்கு சொந்த ஊர். நான் இப்போது 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். ஆனால் 8 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும். ஏற்கெனவே, வீட்டு உரிமையாளர். வாடகை பிரச்னையில் காலி செய்யச் சொல்கின்றனர்” என்றார்.
தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட உதவித்தொகை இந்த குடும்பத்தினர் அனைவருக்குமே கிடைத்துள்ளது. குடும்பத்திற்கு 8 ஆயிரம் ரூபாய் பணமும் 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களையும் பெற்றிருப்பதாக வீரப்பன் என்பவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய சூழ்நிலையில் உணவுக்கே கஷ்டப்படும் மக்களுக்கு இது மிகப்பெரிய உதவி. ஆனால் இவர்களுக்கு நிரந்தரத் தீர்வு தேவை எனவும் வீரப்பன் கூறுகிறார்.
கடந்த 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு குடிசைகள் அகற்றப்படும்போது, அங்கு வசிக்கும் மக்கள் அவர்களின் வேலைவாய்ப்பு கிடைக்கும் இடத்திற்கு அருகில் மாற்று குடியிருப்பு வழங்கப்பட வேண்டும் என்று உறுதியளிக்கிறது (Gainda Ram vs. Municipal Corporation of Delhi, [2010 (10) SCC 715]). தொலைதூர இடங்களுக்கு இந்த மக்கள் மாற்றப்பட்டால், வேலை வாய்ப்புக்காக மீண்டும் அதே இடங்களில் குடியேறுவார்கள் என ஆய்வறிக்கைகளைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த காலத்தில் நடுத்தர மற்றும் மேல் தட்டு மக்களுக்கான வீடுகளைக் கட்டும்போது இவர்களுக்கான வீட்டு வசதி திட்டமிடப்படவில்லை. இதன் விளைவாகவே டெல்லி முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கும் இடங்களைச் சுற்றி குடிசைகள் அதிகரித்ததாகவும் அந்தக் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த புதிய குடிசைப் பகுதியும் உருவாவது அனுமதிக்கப்படாது எனக் குறிப்பிடும் இந்த கொள்கை, ஏற்கெனவே குடிசைகளில் குடியிருப்பவர்கள் எவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதையும் விளக்குகிறது.
தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?
பட மூலாதாரம், AKS Vijayan/X
ஜங்புராவாசிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள உதவிகள் குறித்து அறிவதற்காக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனிடம் பேசினோம். தமிழ்நாடு அரசு சார்பில் ஜங்புராவாழ் தமிழர்களுக்குத் தேவையான “வசதிகளைச் செய்து தரத் தயாராக இருக்கிறோம்” என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அவர் கூறினார்.
“தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் எங்கே அவர்கள் வசிக்க விரும்புகிறார்களோ அந்த மாவட்ட ஆட்சியரோடு தொடர்புகொண்டால் அங்கு அவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கி வீடுகளைக் கட்டித் தருகிற திட்டதை நிறைவேற்றித் தருவோம் என்று சொல்லியிருந்தார். அதைத்தான் நாங்கள் அவர்களிடமும் கூறினோம்.”
ஆனால், தாங்கள் மூன்று தலைமுறைகளாக இங்கேயே இருந்துவிட்டதாகவும், இப்போது அங்கு வந்து என்ன செய்வது எனத் தெரியவில்லை எனவும் கூறிய மக்கள் தாங்கள் இங்கேயே இருந்து விடுவதாகவும் கூறியதாக அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், “தமிழ்நாட்டிற்கே வந்துவிடலாம்” என்று நினைப்பவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகையான உதவிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் செய்துகொடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஏ.கே.எஸ். விஜயன் குறிப்பிட்டார்.
அதோடு, “திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுடன் சேர்ந்து டெல்லி முதலமைச்சரைச் சந்தித்தபோதும், நரேலா பகுதியில் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு” தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
டெல்லி அரசின் நிலைப்பாடு என்ன?
மதராசி கேம்ப் இடிக்கப்பட்ட நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தாம் பொறுப்பேற்ற பின்னர் குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
“குடிசை வாழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் யமுனை நதியும் பாதுகாக்கப்பட வேண்டும்” என ரேகா குப்தா தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இது தொடர்பாக டெல்லி தென்கிழக்கு மாவட்ட ஆட்சியர் அனில் தம்பா மற்றும் ஜங்புரா எம்எல்ஏ தர்விந்தர்சிங் தாகூர் ஆகியோரைத் தொடர்புகொள்ளப் பல வழிகளில் பிபிசி முயன்றும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. அவர்கள் தரப்பில் விளக்கம் தரப்படும் பட்சத்தில் அதுவும் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு