2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் தொடர்ந்து விரிவாக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்து 9 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்று அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 23 பேர் சேர்க்கப்பட்டனர். இதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் ஆட்சி அமைக்க த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஐ.யூ.எம்.எல். கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், த.வெ.க. அமைச்சரவையில் விசிக பங்கேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். த.வெ.க. தரப்பில் இருந்து வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்பெற முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், வி.சி.க. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அமைச்சரவையில் முதன்முதலாக வி.சி.க. பங்கேற்கிறது.
வி.சி.க. தரப்பில் வன்னி அரசு அமைச்சராக பொறுப்பேற்பார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஐ.யூ.எம்.எல். கட்சியில் இருந்து பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜஹான் அமைச்சராக பொறுப்பேற்கிறார். இவர்கள் இருவரது பதவியேற்பு விழா இன்று (மே 22) காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.