• Sat. May 16th, 2026

24×7 Live News

Apdin News

யுத்தக் குற்றவாளிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும் | ஈ.பி.டி பி

Byadmin

May 16, 2026


இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் காரணமாக மக்கள் உயிரிழந்தமை விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று (15) வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“இந்த மண்ணிலே இடம்பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம் காரணமாக உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டும் என்ற ஆலோசனை எங்களுடைய தலைமையினால் எங்களுடைய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஈழ விடுதலைப் போராட்டம் காரணமாக உயிரிழந்த அனைவரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

அதற்கான பொதுவான தினம் நிர்ணயிக்கப்பட்டு அனைவரும் நினைவ கூரப்பட வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை கூட நாடாளுமன்றில் எமது செயலாளர் நாயகததினால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

அந்த அடிப்படையிலே, இந்த நாட்டிலே இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, முள்ளிவாய்க்கால் பகுதியிலே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றாரகள். அவர்கள் அனைவரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு, உயிரிழந்த தங்களுடைய உறவுகளை நினைவுகூருவதற்கு முழுமையான உரிமை இருக்கின்றது என்பதையும் நாங்கள் வலிறுத்துகின்றோம்.

அதேவேளை இறுதி யுத்தத்தின்போது, யுத்த குற்ற மீறல்கள் இடம்பெற்று இருக்கின்றன. யுத்த குற்றமீறல்களில் இரண்டு தரப்பினரும் ஈடுப்பட்டிருக்கின்றனர் என்பதை, சர்வதேச நிபுணர் குழுவின் தருஸ்மன் அறிக்கை போன்ற பல்வேறு அறிக்கைகள் உறுதிப்படுத்துவதுடன், அந்த பிரதேசத்தில் இருந்து தப்பி வந்த மக்களும் வெளிப்படுத்துகின்றனர் என்ற அடிப்படையில் யுத்த குற்றம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் தொடர்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

ஆனால் எங்களுடைய மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளை பெற்றுக்கொடுக்காத, எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான தற்போதைய அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு இடையூறாக அமையக்கூடிய சொல்லாடல்களை முன்வைத்து முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் நலன்களை முன்னிறுத்திய அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டு கீழ்த்தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது என தெரிவித்தார்

By admin