பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ஷுபாங்கி மிஸ்ரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
புதன்கிழமையன்று, 2026 செப்டம்பர் 30 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான கரும்பு உற்பத்தி கணிசமாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பு, இரானில் நிலவும் போரினால் உர இறக்குமதியில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்துக்கு மத்தியில், தனது மிகப்பெரிய மக்கள்தொகைக்குத் தேவையான உள்நாட்டு விநியோகத்தை நிலைப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை, ஏற்றுமதித் தடை குறித்த இந்த முடிவு உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகவும், மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
நாட்டின் அந்நிய செலாவணி இருப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தி வரும் வேளையில், இந்தியாவின் அதிக மதிப்புள்ள சர்க்கரை மீதான ஏற்றுமதித் தடை பல கேள்விகளை எழுப்புகிறது.
இதனால் சந்தைகளும் எதிர்மறையான விளைவுகளைச் சந்தித்தன. முன்னணி சர்க்கரை நிறுவனங்களின் பங்குகள் வியாழக்கிழமை 6% வரை சரிந்தன.
இந்தியா சர்க்கரையை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாகவும் இருப்பதால், உள்நாட்டு விநியோகத்தை நிர்வகிப்பதையே நோக்கமாகக் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்திய சர்க்கரை மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குநர் தீபக் பல்லானி இதுகுறித்துப் பேசியபோது, “இந்தத் தடை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இது உள்நாட்டில் போதுமான அளவு சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது” என்றார். இருப்பினும், ஏற்றுமதி சூழல் குறித்து இன்னும் சீரான மறுஆய்வு எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“ஏற்றுமதி சூழல் குறித்து ஒரு முறையான மறுஆய்வு நடத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். குறிப்பாக சில ஒப்பந்தங்கள் ஏற்கெனவே அமலில் இருப்பதால், அந்த சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதித்திருக்க வேண்டும். ஏனெனில் ஒப்பந்தங்களை மதிக்காமல் இருப்பது சரியல்ல” என்று பல்லானி பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
எதிர்பார்த்ததைவிட குறைவான விளைச்சல்
சர்க்கரை ஏற்றுமதித் தடையின் மையப் பகுதியாக, இந்தப் பருவத்தில் (2025-2026) கரும்பு விளைச்சல் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருந்ததே காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
நிகர சர்க்கரை உற்பத்தி, 2025-26 ஆம் ஆண்டில் 30 மில்லியன் டன்னாக இருக்கும் என்று ஆரம்பக்கால மதிப்பீடுகள் கணித்திருந்தன. ஆனால் சாதகமற்ற வானிலை காரணமாக இப்போது உற்பத்தி சுமார் 28 மில்லியன் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பல்லானி பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும், “முந்தைய மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்திய அரசு 1.5 மில்லியன் டன் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்திருந்தது, அதில் சுமார் 6.5 லட்சம் டன் ஏற்கெனவே ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டது. இருந்தபோதிலும், சர்க்கரை துறையானது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், உலகளாவிய சர்க்கரை சந்தையில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்களிப்பை ஆதரிப்பதற்கும் இடையே சமநிலையைப் பேணி, போதுமான விநியோகத்தைத் தொடர்ந்து பராமரிக்கிறது,” என்று அவர் கூறினார்.
ஹோர்மூஸ் நீரிணை மூடல் உரங்களின் மீது ஏற்படுத்திய தாக்கம்
குறைந்த விளைச்சல் தவிர, ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக இந்தியாவின் உர இருப்பில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ஏற்றுமதித் தடைக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
உலகளவில் உரத்தை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, தற்போது அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.
ஏனெனில், பிப்ரவரி 28 முதல் முடக்கப்பட்டுள்ள ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே உலகளாவிய உர வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு நடைபெறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் பயிரிடப்படும் பயிர்களில் கரும்புதான் அதிகப்படியாக உரம் பயன்படுத்துவதாகத் தரவுகள் காட்டுகின்றன. குறிப்பாக, இதனால் கரும்பு விவசாயம் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்தியாவிடம் போதுமான உர இருப்பு இருப்பதாக அரசாங்கம் வலியுறுத்திய போதிலும், மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள சில கரும்பு விவசாயிகள் ஏற்கெனவே விநியோகப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர்.
“தற்போது தேவையான அளவு உரம் கிடைப்பதில்லை, இதனால் விவசாயிகள் விலையுயர்ந்த தயாரிப்புகளை வாங்கவோ அல்லது உரத்தின் அளவைக் குறைக்கவோ யோசித்து வருகின்றனர். வருங்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகலாம்,” என்று புலந்த்ஷாஹரில் உள்ள பாரதிய கிசான் யூனியனின் (டிக்கைட்) மாவட்டத் தலைவர் சௌத்ரி அரவ் சிங் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் ஏற்படும் உரப் பற்றாக்குறை கரும்பு விளைச்சலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தீபக் பல்லானியும் கணித்துள்ளார்.
“கரும்பு நடவு செய்யப்பட்டுவிட்டது. அதற்கு உரம், யூரியா போன்றவை தேவைப்படும். பற்றாக்குறை ஏற்பட்டாலோ அல்லது விலை உயர்ந்தாலோ, அது நிச்சயமாக விளைச்சலைப் பாதிக்கும்” என்று அவர் கூறினார்.
எத்தனால் விநியோகம்
உள்நாட்டு சர்க்கரை விநியோகம் என்பது, எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு மாற இந்தியா எடுத்துள்ள முடிவுடனும் தொடர்புடையது.
எத்தனால் என்பது முதன்மையாக சர்க்கரை, ஸ்டார்ச் ஆகியவற்றை ஈஸ்ட் மூலம் நொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த எத்தனால் உற்பத்தியில் கிட்டத்தட்ட 40% கரும்பு மூலப் பொருட்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
ஐஎஸ்எம்ஏ அமைப்பின் தகவல்படி, 2025-26ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் சுமார் 35 லட்சம் டன் எத்தனால் உற்பத்திக்காகத் திருப்பிவிடப்பட்டன.
எரிபொருளுடன் கலப்பதற்காக கரும்பு சார்ந்த எத்தனால் விநியோகத்தை 2013-14இல் 38 கோடி லிட்டராக இருந்ததில் இருந்து, 2023-2024இல் 672 கோடி லிட்டராக அரசாங்கம் வேகமாக அதிகரித்துள்ளது.
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கான மையத்தின் ஆய்வாளர் பிரேர்ணா பிரபாகர் பிபிசியிடம் பேசுகையில், “உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே முதன்மையாக இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இதன் பின்னணியில் எரிசக்தி பாதுகாப்பு குறித்த கேள்வியும் இருப்பதாக” தெரிவித்தார்.
“எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாகத் தெரிகிறது. ஏனெனில் இது கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்” என்று கூறிய பிரபாகர், பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பது இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு மீதான அழுத்தத்தைத் தளர்த்தும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், சர்க்கரை துறை நிபுணர்கள் எத்தனால் உற்பத்திக்கும் சர்க்கரை ஏற்றுமதித் தடைக்கும் நேரடியான மற்றும் உடனடித் தொடர்பு இருப்பதாகக் கருதவில்லை.
சர்க்கரை உற்பத்திப் பருவம் ஏற்கெனவே முடிந்துவிட்டதாகவும், பெரும்பாலான ஆலைகள் மூடப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கரும்பின் வருடாந்திர சுழற்சி அக்டோபரில் தொடங்கி செப்டம்பரில் முடிவடைகிறது.
“சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்குத் திருப்பிவிடும் பணிகள் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டன. எனவே ஏற்றுமதித் தடையானது எத்தனால் உற்பத்தியை அதிகப்படுத்தும் என்று சொல்ல முடியாது,” என தீபக் பல்லானி தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
உலகளாவிய மற்றும் உள்நாட்டு தாக்கம்
உலகளவில் சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் ஆப்பிரிக்கா அதன் மிகப்பெரிய சந்தையாக உள்ளது.
வர்த்தகத் துறையின் தரவுகள்படி, 2025 ஏப்ரல் முதல் 2026 பிப்ரவரி வரை இந்தியா 1869.69 மில்லியன் டாலர் மதிப்பிலான சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது, இதில் பெரும்பகுதி ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றுள்ளது.
ஐஎஸ்எம்ஏ அமைப்பின் தகவல்படி, ஜிபூட்டி, இலங்கை, சோமாலியா, சூடான், ஆப்கானிஸ்தான், இந்தோனீசியா, கென்யா, தான்சானியா போன்ற ஆப்பிரிக்க மற்றும் பிற நாடுகள் இந்தியாவின் முக்கிய சர்க்கரை ஏற்றுமதி இடங்களாக உள்ளன.
தற்போது ஆப்பிரிக்க நாடுகள் தங்களின் சர்க்கரை தேவையைப் பூர்த்தி செய்ய பிரேசில் அல்லது தாய்லாந்தை நாடக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், உலகளாவிய சர்க்கரை தட்டுப்பாடு குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வரும் சூழலிலும், அந்நிய செலாவணி இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோதி விடுத்த வேண்டுகோளுக்கு நடுவிலும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஏற்றுமதித் தடை அந்நிய செலாவணி இருப்பில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று இந்தியாவின் முன்னாள் வேளாண்மைத் துறைச் செயலாளர் சிராஜ் ஹுசைன் தெரிவித்தார்.
“உலக சந்தையில் சர்க்கரை விலைகள் குறைவாக இருப்பதால், ஏற்றுமதியைத் தடை செய்யும் முடிவால் பெரிய பாதிப்பு இருக்காது” என்று பிபிசியிடம் தெரிவித்த அவர், “எப்படியிருந்தாலும், மொத்த ஏற்றுமதி ஒதுக்கீட்டில் 7 முதல் 8 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே (இந்த ஆண்டு) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.” எனவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு அளவில், ஏற்றுமதித் தடையால் சர்க்கரை விநியோகம் அதிகரிக்கக் கூடும் என்றாலும், இந்த முடிவு விவசாயிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கு மோசமான செய்தியைக் கொண்டு வந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
“உலகளவில் விலைகள் இப்போதுதான் சீராகத் தொடங்கின. இந்திய ஏற்றுமதி அதிகரிக்க ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது, ஆனால் இனி அது நடக்காது,” என்று வேளாண்மை மற்றும் கிராமப்புறத் துறையில் கவனம் செலுத்தும் ‘ரூரல் வாய்ஸ்’ செய்தித் தளத்தின் தலைமை ஆசிரியர் ஹர்வீர் சிங் கூறினார்.
ஏற்றுமதித் தடை சர்க்கரை ஆலைகளின் நிதி நிலையை மோசமாக்கி, இது விவசாயிகளுக்கு அவர்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்கான அவர்களின் திறனை மேலும் தடுக்கும் என்று சிங் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி குறைவாக இருந்தபோதிலும், அதன் விலை தேக்க நிலையிலேயே இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சர்க்கரைத் துறை விலையேற்றத்தை எதிர்பார்த்திருந்தது. “சர்க்கரை விலைகள் உயரும் என்ற உணர்வு இருந்தது, இது சர்க்கரை ஆலைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தியிருக்கும்” என்று கூறிய அவர், “விலை உயர்வு அவர்களுடைய பணம் செலுத்தும் திறனை அதிகரித்திருக்கும், இதன் விளைவாக விவசாயிகளுக்கும் பலன் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு