கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று தமிழ்த் திரையுலகத்தால் கொண்டாடப்பட்ட நடிகை சரோஜா தேவி, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்திருந்தாலும், தமிழ்ப் படங்களில்தான் அவர் உச்சத்தைத் தொட்டார் என்று கூறலாம்.
அக்காலத்தில் சூப்பர் ஸ்டார் ஆக இருந்த எம்ஜிஆருடன் அதிகமான படங்களில் நடித்தவர் சரோஜா தேவி.
எம். ஜி. ஆருடன் சரோஜா தேவி இணைந்து கதாநாயகியாக 26 படங்களில் நடித்திருக்கிறார். அவருடன் மட்டுமின்றி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆகியோருடனும் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சரோஜா தேவி தமிழில் நடித்த முக்கியமான 10 படங்களின் தொகுப்பு இங்கே.
எம்ஜிஆர் இயக்கி தயாரித்த அவரின் சொந்தப்படமான நாடோடி மன்னனில் எம்ஜிஆருக்கு நாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பானுமதி. ஏற்கெனவே எம்ஜிஆரும் பானுமதியும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால் அதிலும் அவரே ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாயகியாக நடிப்பதிலிருந்து பானுமதி விலகிக்கொள்ள, எம்ஜிஆருக்கு நாயகியாகும் வாய்ப்பு சரோஜா தேவிக்கு வந்ததாக சரோஜா தேவி வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் எழுதியுள்ளார் பா.தீனதயாளன்.
இளவரசி ரத்னா பாத்திரத்தில் நடிக்க வைக்க பல புதிய நடிகைகளைத் தேர்வு செய்து, படமெடுத்துப் பார்த்து, அந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததால் சரோஜா தேவியை இறுதி செய்ததாக எம்ஜிஆர் கூறியதாக அவர் அதில் பதிவு செய்கிறார்.
அந்தப் படத்தில் நடித்தபோது, சரோஜா தேவியின் மழலை கலந்த தமிழுக்கு ஏற்ப வசனங்களை மாற்றியமைத்ததாக அவர் கூறியிருக்கிறார்.

அன்பே வா
என்றைக்குப் பார்த்தாலும் கண்களுக்கும் மனதுக்கும் இதமும் சுகமும் தரும் ஒரு அற்புதமான பொழுது போக்கு படம் ‘அன்பே வா’. பிரபல இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் முழுக்க முழுக்க சிம்லாவில் படமாக்கப்பட்டது.
எம்ஜிஆருக்குச் சொந்தமான மாளிகையை, வாடகைக்கு விட்டு சம்பாதித்துக் கொண்டிருப்பார் நாகேஷ். எம்ஜிஆர்தான் அதன் உரிமையாளர் என்று தெரியாமல், அவரிடமே வாடகைக்கு விட்டிருப்பார். சுற்றுலாவுக்கு வந்த சரோஜா தேவியும் அதே மாளிகையில் வாடகைக்குத் தங்கியிருப்பார். இருவருக்கும் ஏற்படும் மோதல் பின் காதலாகி திருமணத்தில் முடிவதே கதை.
எம்ஜிஆருடன் மோதும் ஒவ்வொரு காட்சியிலும் சரோஜா தேவியின் செல்லச் சிணுங்கலும், பொய்க்கோபமும், காதலை வெளிப்படுத்தும் முகபாவங்களும் அன்றைய ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
இந்த படத்திற்காக வாலியால் எழுதப்பட்ட ‘நான் பார்த்ததிலேயே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்’ என்ற பாடல், சரோஜா தேவிக்காகவே எழுதப்பட்ட வரிகளாக இருக்கும்.
இதே படத்தில்தான் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடலும், அதில் எம்ஜிஆர் மற்றும் சரோஜா தேவியின் ஆடை, அணிகலன், அலங்காரம் அத்தனையும் அசல் ராஜா–ராணிக்கான ஓர் அடையாளம் போலிருக்கும்.
புதிய பறவை

சிவாஜி புரடக்சன்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படம் புதிய பறவை.
சிவாஜியை ஒரு எதிர்மறை நாயகனாகக் காண்பிக்கும் வித்தியாசமான கதைக்களம் உள்ள அந்த ‘காதல் த்ரில்லர்’ படத்தை இந்திப்பட இயக்குநர் தாதா மிராசி இயக்கிருந்தார்.
படத்தின் தலைப்பில் இடம் பெறும் அந்த புதிய பறவைதான், படத்தின் இரு கதாநாயகிகளில் ஒன்றாக வந்த சரோஜா தேவி. பிரபல சிங்கப்பூர் தொழிலதிபர் கோபாலை காதலிக்கும் லதா என்ற கதாபாத்திரம். கோபாலின் முதல் மனைவி இறந்ததன் மர்மத்தை அறியும்போது சரோஜா தேவி உடைந்து உருக்குலைந்து ‘கோபால் கோபால்’ என்று கதறும் காட்சி அக்கால ரசிகர்களை காட்சிக்குள்ளேயே உறைய வைத்தது.
அந்தப் படத்தில் அவர் உச்சரிக்கும் ‘கோபால் கோபால்’ என்பதை வைத்தே, நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் பெண் வேடத்துடன் சில காட்சிகளை வடிவமைத்திருப்பார். அந்த காட்சியும் எல்லோரையும் ரசிக்கவைத்தது. அதன்பின் அந்த ‘கோபால்’ வசனமே பலருக்கும் பல நேரங்களில் ‘மீம் கண்டென்ட்’ ஆனது.

பாலும் பழமும்
பீம்சிங் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திலும், புதிய பறவை படத்தைப் போலவே செளகார் ஜானகியும், சரோஜா தேவியும் இரண்டு கதாநாயகிகளாக நடித்தனர். ஆனால் அதிலும் ஒரு சிறப்பம்சமாக சரோஜா தேவி, சாந்தி மற்றும் நீலா என்ற இரண்டு கதாபாத்திரங்களில் இரட்டை வேடத்தில் நடித்தார். அந்த இரண்டு பாத்திரங்களுக்கும் இடையிலும் தனது நடிப்பால் ஒரு பெரும் வித்தியாசத்தைக் காண்பித்திருப்பார்.
இந்தப் படத்துக்கான விமர்சனத்தில் ஆனந்த விகடன், ”நடிப்பிலே சிவாஜிக்கு ஈடு கொடுக்கிறார் சரோஜா தேவி.” என்று பாராட்டியது. குமுதம் இதழும், ‘ரூபாய் வேடம் ஒன்று பைசா வேடம் ஒன்று. சோகத்தை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு. அதைச் செவ்வனே செய்திருக்கிறார் சரோ” என்று எழுதியது.
சரோஜா தேவியுடன் ஜோடியாக நடித்திராத நடிகர் ஜெய்சங்கருடன் ஒரு சினிமா இதழுக்காக ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது ஜெய்சங்கரிடம் நான் நடித்த படங்களில் எது பிடிக்கும் என்று சரோஜா தேவி கேட்க, ”பாலும் பழமும் படம்தான் மிகவும் பிடிக்கும். ஒண்டர்ஃபுல், மூன்று, நான்கு முறை பார்த்திருக்கிறேன்.” என்று கூறியிருப்பார்.
தாய் சொல்லைத் தட்டாதே
எம்ஜிஆர்–சரோஜா தேவி இணையின் அதிரிபுதிரி வெற்றிப்படங்களில் இதுவும் ஒன்று. 1961 தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தை தேவர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.
மிகக்குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் இது என்று தன் படங்களைப் பற்றிய பதிவில் சரோஜா தேவி கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் விஜயா என்ற எளிமையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சரோஜா தேவி. இந்த படத்துக்கான விமர்சனத்தில் ”எம்ஜிஆரும் சரோஜா தேவியும் ஹாயாக நடித்திருக்கிறார்கள்” என்று எழுதியது குமுதம் இதழ்.
கல்யாணப்பரிசு வெள்ளிவிழாவுக்கு எந்த ஊருக்குமே வர இயலாது என்று கைவிரித்த சரோஜா தேவி, இந்தப் படத்தின் 100 வது நாள் வெற்றிக்காக கோவை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், நெல்லை என பல ஊர்களுக்கும் எம்ஜிஆருடன் சென்று வந்ததாக எழுதியிருக்கிறார் பா.தீனதயாளன்.

கல்யாண பரிசு
ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான கல்யாண பரிசு, அந்தக் காலத்தில் ‘சூப்பர் டூப்பர் ஹிட்’ அடித்த படம். அதில் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு நாயகியாக வசந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டியவர் நடிகையர் திலகம் சாவித்திரி. ஆனால் அப்போது அவர் கர்ப்பமானதால் அந்தப் பாத்திரம், சரோஜா தேவியின் கைக்கு வந்தது.
தமிழே அறியாத சரோவை வசந்தியாக்குவதற்குள் ஸ்ரீதரின் யூனிட்டே திண்டாடித் தெருவில் நின்றது என்று இனிய அவஸ்தை என்று அந்தப் படப்பிடிப்பைப் பற்றி சித்ராலயா கோபு எழுதியிருக்கிறார்.
ஒரு ரூபா என்பதை சரோஜா தேவி தன் கொஞ்சும் தமிழில் ‘வரு ரூபா’ என்றே திரும்பத்திரும்பச் சொல்லி, ஒரு நாளையும் ஏகப்பட்ட ஃபிலிமையும் தின்று ஏப்பம் விட்டதாக கோபு அதில் நகைச்சுவையாக குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தப் படத்தில் வரும் ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’ என்ற பாடலுக்காக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதாக ஒரு பேட்டியில் சரோஜாதேவி கூறியிருக்கிறார். அந்தப்படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. ஜெமினியின் முதல் வெள்ளிவிழா படம் என்ற முறையில், அதிலிருந்து சாவித்திரிக்கு அடுத்ததாக ஜெமினியின் ஆஸ்தான நாயகியாக சரோ இடம் பிடித்தது கல்யாண பரிசில் இருந்துதான்.
சபாஷ் மீனா
பிஆர் பந்துலு இயக்கத்தில் உருவான சபாஷ் மீனா படம், இன்றைக்குப் பார்த்தாலும் இடைவிடாமல் சிரிக்க வைக்கும் முழு நீள நகைச்சுவைத் திரைப்படம். கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும், துவக்கம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கலகலக்க வைத்த படம் சபாஷ் மீனா. சிவாஜியும் சந்திரபாபுவும் இணைந்து கலக்கியிருப்பார்கள். அதில் சந்திரபாபுவுக்கு ஜோடியாக நடித்தார் சரோஜா தேவி.
பின்னாளில் சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், கவுண்டமணி இணைந்து கலக்கி, வெள்ளிவிழா கண்ட ‘உள்ளத்தை அள்ளித்தா’ படமும் இந்தக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான். இந்தப் படத்துக்குப் பின், சரோஜா தேவி பெரிய நடிகர்களின் நாயகிகளாக வலம் வரத்துவங்கினார்.

படகோட்டி
பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் படகோட்டி. எம்ஜிஆர் மீனவனாகவும், சரோஜா தேவி மீனவப் பெண்ணாகவும் நடித்திருந்தனர். துருதுருவென்ற வேடத்தில், மிகவும் கஷ்டப்பட்டு மீனவ பாஷை கலந்து தமிழ் பேசி நடித்திருந்தார் சரோஜா தேவி. எம்.எஸ்.விஸ்வநாதன்–ராமமூர்த்தி இசையில் ‘தொட்டால் பூ மலரும்’ பாடலில் எம்ஜிஆரும், சரோஜா தேவியும் இணைந்து காதலுடன் ஒருவரை ஒருவர் கைகளால் தட்டியபடி காதலை வெளிப்படுத்துவது பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும்.
‘பழரசத்தோட்டம் பனிமலர் கூட்டம் பாவை முகமல்லவா’ என்று சரோஜா தேவியின் முகத்தை அழகாக வர்ணித்திருப்பார் வாலி. இந்தப் பாடலை கடந்த 2004 ஆம் ஆண்டில் ‘நியூ’ படத்துக்காக ஏஆர் ரகுமான் மறு ஆக்கம் செய்திருந்தார்.

இருவர் உள்ளம்
எல்.வி.பிரசாத் இயக்கத்தில் உருவான இந்தப் படத்துக்கு வசனம் எழுதியது முன்னாள் முதல்வர் கருணாநிதி. எழுத்தாளர் லட்சுமியின் பெண் மனம் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக சாந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரோஜா தேவி. தமிழை தட்டுத்தடுமாறிப் பேசும் சரோஜா தேவிக்காகவே எளிமையான வசனங்களை கருணாநிதி எழுதியிருந்ததாக விமர்சனங்களில் எழுதப்பட்டது. இந்தப் படமும் அக்காலத்தில் வசூல் சாதனை நிகழ்த்திய வெற்றிப்படங்களில் ஒன்றானது.
கடந்த 1997 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசனுடன் விஜய் இணைந்து நடித்த ‘ஒன்ஸ்மோர்’ படத்தில், இந்த படத்திலிருந்து எடுக்கப்பட்ட சில காட்சிகள், பயன்படுத்தப்பட்டன. அந்தப் படத்தை இருவர் உள்ளத்தின் தொடர்ச்சி என்று வர்ணித்தார் சரோஜா தேவி.

ஆதவன்
சரோஜா தேவி தமிழில் கடைசியாக நடித்த படம் இதுதான். சூர்யா–நயன்தாரா இணையாக நடித்த இந்த படம், கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் மிகவும் கடுமையான நீதிபதியின் ஜாலியான தாயாக சரோஜா தேவி நடித்திருப்பார். வடிவேலுவும் அவரும் இணைந்து வரும் காட்சிகள் எப்போது பார்த்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
சரோஜா தேவியைப் பார்த்து வடிவேலு அடிக்கும் ஒவ்வொரு கமெண்ட்டும் வெடிச்சிரிப்பை வரவழைக்கும். இந்த படத்துக்குப் பின், அவர் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. சின்னத்திரையில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் அவர் நடிக்க விரும்பவில்லை என்று சரோஜா தேவி நுாலில் எழுதியுள்ளார் பா.தீனதயாளன்.
கமலஹாசன் சிறிய வேடத்தில் நடித்த பார்த்தால் பசி தீரும் படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இருவருடனும், செளகார் ஜானகி, சாவித்திரி என இரட்டை நாயகர்கள், நாயகிகளுடனும் சரோஜா தேவி இணைந்து நடித்திருந்தார். இவற்றைத் தவிர்த்து, எம்ஜிஆருடன் அவர் நடித்த பெரிய இடத்துப் பெண், எங்க வீட்டுப்பிள்ளை, கலங்கரை விளக்கம் போன்ற படங்களும் பெரும் வெற்றிப்படங்களாகவே அமைந்தன.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
நன்றி : பிபிசி.காம்