பட மூலாதாரம், Anbumani/X
-
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
“கூட்டணியில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம். வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியைத் தொடங்கிவிட்டோம். வெற்றி வாய்ப்புள்ள அனைவரும் விருப்ப மனுவைக் கொடுக்க ஆயத்தமாக வேண்டும்.”
திண்டிவனத்தில் பா.ம.க செயற்குழு கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு பேசினார்.
ஆனால், “இந்தக் கூட்டம் பா.ம.க-வின் சட்டவிதிகளுக்கு முரணானது” என அன்புமணி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராமதாஸின் பின்னணியில் தி.மு.க இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இப்படியாக, பா.ம.க-வில் குடும்ப மோதல் வலுத்து வருவது, 2026 சட்டமன்றத் தேர்தலில் வட மாவட்டங்களில் எந்தக் கட்சி பயனடையப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஓமந்தூரில் ஜூலை 8 அன்று பா.ம.க செயற்குழு கூட்டம் நடந்தது.
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு அன்புமணிக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக, கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி கூறியிருந்தார். ஆனால், அன்புமணி அதில் பங்கேற்கவில்லை.
அன்புமணி மீது நடவடிக்கையா?
பட மூலாதாரம், Ramadoss/X
கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 11வது தீர்மானம் தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்படாமல் இருப்பவர்கள் பற்றிப் பேசுகிறது.
அதில், “தலைமை உத்தரவுக்குக் கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்தும் நபர்களின் மீது கட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, விசாரணை நடத்தி, பின்னர் தேவைப்பட்டால் தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நிறுவனரே தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு பொதுவெளியில் அவரது பேச்சுக்குக் கட்டுப்படாமல் பொறுப்பற்ற பதிலைக் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அந்த செயல் தலைவர், மீண்டும் தலைவர் பதவியை அபகரிக்கும் நோக்கத்தில் பொதுவெளியில் கட்சிக்கு மட்டும் களங்கம் விளைவிக்காமல் நிறுவனத் தலைவருக்கும் களங்கம் உருவாக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக” தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, இதை யார் செய்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு நிறுவனத் தலைவர் மற்றும் தலைவராக இருக்கும் மருத்துவர் ராமதாஸுக்கு செயற்குழு அங்கீகாரம் வழங்குவதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
‘சட்டவிதிகளுக்கு முரணானது’ – அன்புமணி
பட மூலாதாரம், Anbumani/X
தீர்மானத்தில் செயல் தலைவர் என்று குறிப்பிடப்பட்டாலும் அன்புமணியின் பெயர் நேரடியாகக் கூறப்படவில்லை. செயற்குழு கூட்டத்தில் பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி ஆகிய நிர்வாகிகளுடன் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியும் அமர்ந்திருந்தார்.
இவரது மகன் முகுந்தன் பரசுராமனை பா.ம.கவின் இளைஞர் சங்கத் தலைவராக ராமதாஸ் நியமனம் செய்ததன் விளைவாகவே அன்புமணி தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார்.
அதேநேரம், பா.ம.கவின் சட்டவிதிகளுக்கு முரணாக ராமதாஸ் செயற்குழு கூட்டம் நடத்தியதாக அன்புமணி நடத்திய பா.ம.க அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 8ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், “பா.ம.க பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவரான அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் பங்கேற்காமல் நடைபெறும் கூட்டங்கள், கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளுக்கும் சட்டத்துக்கும் முரணானவை” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், @drramadoss
செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசும்போது, “2026 சட்டமன்றத் தேர்தலை கூட்டணியில் சந்திக்க முடிவு செய்துள்ளோம். நமக்குக் கிடைக்கும் தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியைத் தொடங்கிவிட்டோம்” எனப் பேசினார்.
“வெற்றி வாய்ப்புள்ள அனைவரும் விருப்ப மனுவைக் கொடுக்க ஆயத்தமாக வேண்டும். அதேபோல் உள்ளாட்சித் தேர்தலையும் சந்திக்க உள்ளோம்” எனக் கூறிய ராமதாஸ், “சட்டமன்றத் தேர்தலில் ஏ படிவம், பி படிவம் ஆகியவற்றில் கையெழுத்து போடப்போவது நான்தான்” என்றும் அறிவித்தார்.
இதுதொடர்பாக, அன்புமணி ஆதரவு பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமா பிபிசி தமிழிடம் பேசியபோது, “இந்த விவகாரம் குறித்து தற்போது எதுவும் பேச விரும்பவில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.
‘அன்புமணிக்கு சாதகமான சூழல்’
பட மூலாதாரம், Anbumani/X
அதேநேரம், அன்புமணியை தலைவராக முன்னிறுத்தி சட்டரீதியாகச் சில விஷயங்களை முன்னெடுக்க உள்ளதாகக் கூறுகிறார், அன்புமணி ஆதரவு பா.ம.க நிர்வாகி ஒருவர்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தேர்தல் ஆணையம் உள்பட அனைத்திலும் அன்புமணிக்கு சாதகமான சூழல் உள்ளது. நிர்வாகிகளில் பெரும்பான்மையானோர் அன்புமணி பக்கம் நிற்கின்றனர். இந்த நிர்வாகிகளின் பின்புலத்தில்தான் தொண்டர்கள் இயங்குகின்றனர்” எனக் கூறுகிறார்.
“தலைவரின் அதிகாரங்களைப் பற்றி மட்டுமே உள்கட்சி விதிகள் பேசுகின்றன. அதில், ‘பொதுக்குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்படலாம். அந்த முடிவுகள் தொடர்பாக அவர் அறிவுறுத்தலாம்’ என்று மட்டுமே கூறுகிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு ராமதாஸ் நடத்திய கூட்டத்தை விமர்சித்த அவர், “பொதுக்குழு, செயற்குழு, நிர்வாகக் குழு ஆகியவற்றைக் கூட்டும் அதிகாரம் தலைவருக்கும் பொதுச்செயலாளருக்கும் உள்ளது. அவர்களால் அழைக்கப்படாத கூட்டம் என்பது ஒரு கட்சிக் கூட்டமாக மட்டுமே பார்க்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும், பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவராக அவர் இருப்பதாகவும் கூறினார்.
மாம்பழ சின்னத்திற்கு பாதிப்பு வருமா?
பட மூலாதாரம், Anbumani/X
கட்சியின் சட்டவிதிகள் குறித்து விளக்கிய மூத்த பத்திரிகையாளர் மாலன், “பா.ம.கவின் சட்ட விதிகளின்படி பொதுக்குழுவால் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதில் பிளவுகள் வரும்போது பெரும்பான்மையான நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்களோ அதைப் பரிசீலித்து தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்குகிறது” என்றார்.
“தந்தை-மகன் மோதலால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக அக்கட்சிக்கு பாதிப்பு இருக்கும்” எனக் கூறும் அவர், “இருவருக்கும் இடையில் பிரச்னை முற்றும்போது சின்னத்தை முடக்கக்கூடிய சூழல் ஏற்படலாம்” என்கிறார்.
அதுமட்டுமின்றி, “தற்போது பதிவு செய்யப்பட்ட கட்சியாக பா.ம.க உள்ளது. அக்கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. தனித்தனியாகப் போட்டியிட்டால் இருவருக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும்.”
இதே கருத்தை கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முன்வைத்துப் பேசிய பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணி, “2026 தேர்தலில் வெற்றி பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுக்க வேண்டும். இவ்வளவு போராட்டங்கள் நடத்தியும் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை” எனக் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு அக்கட்சிகளின் சின்னம் ஒதுக்கப்படுகிறது. அதேநேரம், பதிவு பெற்ற கட்சியாக இருந்தால் தேர்தலில் பொதுச் சின்னம் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதைப் பரிசீலித்து பொதுச் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்குகிறது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாம்பழ சின்னம் கோரி பா.ம.க விண்ணப்பித்தது. அதை ஏற்று அக்கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டது.
வட மாவட்டங்களில் பின்னடைவா?
பட மூலாதாரம், @drramadoss
மாலனின் கூற்றுப்படி, ராமதாஸும் அன்புமணியும் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்பது முக்கியமானது.
“தி.மு.க உடன் கூட்டணி வைக்க வேண்டும் என ராமதாஸ் முடிவெடுத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு, 10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகள் பேசப்படும். இது அரசியல்ரீதியாக அக்கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.”
“அன்புமணியை முன்னிறுத்தி தேர்தல்களைச் சந்தித்தபோதும் பா.ம.க பெரிதாக வெற்றி பெறவில்லை” எனக் கூறும் அவர், “இருவருமே ஒருவரையொருவர் பலவீனப்படுத்திக் கொள்ளும் வகையில்தான் இந்த மோதல் இருக்கிறதே தவிர, இதனால் கட்சிக்கு எந்தப் பலனும் இல்லை” என்கிறார்.
“கூட்டணி, வேட்பாளர் ஆகியவற்றைப் பொறுத்து தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்கப்படும். வரும் காலங்களில் சாதியைப் பார்த்து மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது” எனவும் மாலன் குறிப்பிட்டார்.
இருவரும், குடும்ப மோதலை பொதுமக்கள் சார்ந்த பிரச்னையாகக் கொண்டு செல்வதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி திருப்பதி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “குடும்ப அரசியலில் இப்படியொரு போக்கு வந்ததில்லை. இந்த நிலை நீடித்தால் வட மாவட்டங்களில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் கட்சியாக பா.ம.க இருக்கப் போவதில்லை” என்றார்.
பா.ம.க நிர்வாகிகளில் பலரும் அன்புமணி பக்கம் இருந்தாலும், கணிசமான வாக்கு வங்கி ராமதாஸ் பக்கம் உள்ளதாகக் கூறும் சிகாமணி திருப்பதி, “கட்சிக்காக உழைத்தவர் என்ற அடிப்படையில் பார்த்தால் ராமதாஸ் தரப்புக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம். இந்த மோதலின் விளைவாக பா.ம.க பலவீனமடைவது வட மாவட்டங்களில் தி.மு.க-வுக்கு சாதகமான சூழலை உருவாக்கலாம்,” என்றும் தெரிவித்தார்.
பா.ம.க உட்கட்சி மோதலுக்கு திமுக காரணமா?
பா.ம.க-வில் நடக்கும் குடும்ப மோதலின் பின்னணியில் தி.மு.க இருப்பதாகக் கூறுகிறார் அன்புமணி ஆதரவு தரப்பின் மூத்த நிர்வாகி ஒருவர்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பா.ம.க வலுவாக இருப்பதை மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாடு காட்டியது. இதைக் குலைக்கும் வேலைகளில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.
ஆனால், இதை முற்றிலுமாக மறுக்கும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “வட மாவட்டங்களில் பா.ம.க உடனான தேர்தல் கூட்டணியைக் கடந்துதான் தி.மு.க வெற்றி பெற்று வந்துள்ளது. அந்தக் கட்சியைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு இல்லை” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு