பட மூலாதாரம், Supplied
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இலங்கையைவிட்டு வெளியேறியபோது, தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சிறிய தீவுக் கூட்டத்தில் ஒருநாள் தாம் சிக்கிக்கொள்வோம் என்று ருச்சிரா ரணசிங்க நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.
தற்போது 50 வயதாகும் அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக குக் தீவுகளில் சிக்கியுள்ளார். இலங்கைக்குத் திரும்பிச் செல்லத் தாம் மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும், அதற்காகத் தன்னைக் கைவிலங்கிட்டு, கட்டிப்போட்டு, வாயைக் கட்டிக்கூட அழைத்துச் செல்லலாம் என்று கூறியுள்ளதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
நியூசிலாந்தில் குடியேற வேண்டும் என்பதே ரணசிங்கவின் விருப்பமாக இருந்தது.
அங்கு புகலிடம் கோரிய பிறகு, நாட்டைவிட்டு தற்காலிகமா வெளியேறி வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்குமாறு குடியேற்ற ஆலோசகர் ஒருவர் பரிந்துரைத்தபடி செயல்பட்டதாக அவர் கூறுகிறார். ஆனால், குக் தீவுகளுக்குச் சென்ற பிறகு அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதேவேளையில், நியூசிலாந்தை விட்டு வெளியேறியதன் மூலம், புகலிடம் கோரியதன் அடிப்படையில் தமக்கு வழங்கப்பட்டிருந்த விசாவின் நிபந்தனைகளையும் அவர் மீறியிருந்தார்.
இந்நிலையில், இலங்கைக்குத் திரும்பிச் செல்வதற்காகப் பயண இடைநிறுத்த விசா (Transit Visa) வழங்க நியூசிலாந்து மறுத்து வருகிறது
ஆஸ்திரேலியாவும் விசா வழங்க மறுக்கிறது. குக் தீவுகளில் இருந்து அவர் விமானத்தில் செல்லக்கூடிய மற்ற இரண்டு இடங்களான டஹித்தி மற்றும் ஹவாய் ஆகியவற்றுக்குச் செல்வதற்கும் விசா தேவைப்படுகிறது. அந்த விசாவுக்கான விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதற்கு முன்பு, நியூசிலாந்தில் தனது பயோமெட்ரிக் தகவல்களை அவர் வழங்க வேண்டும்.
இதனால், குக் தீவுகளைவிட்டு வெளியேறுவதற்கான நடைமுறைச் சாத்தியமான வழி எதுவும் அவருக்கு இல்லை.
“எனது ஒரே மகனுக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. நவம்பர் மாதம் நடைபெறும் அந்தத் திருமணத்தில் நான் கலந்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு என்ன நடந்துவிட்டது என்று கவலைப்படும் எனது தாய், தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்றும் வந்துகொண்டும் இருக்கிறார்” என்று கண்ணீருடன் கூறுகிறார் ரணசிங்க.
“அவர்கள் என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்கிறேன். எனக்கு என் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும், அவ்வளவுதான்.”
மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய முடிவு
வியாபாரம் நலிவடைந்ததால் தனது சிறிய டி-ஷர்ட் தயாரிப்பு நிறுவனத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு ரணசிங்க இலங்கையைவிட்டு வெளியேறினார்.
கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்ட அவர், முதியவர்கள் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் வீட்டு உதவிப் பணியில் ஈடுபடுவதற்காக ஹாங்காங்குக்குச் சென்றார்.
அவர் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியிருந்ததாக ரணசிங்கவின் சகோதரர் பிபிசி சிங்களத்திடம் தெரிவித்தார். அவரது கணவர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்ததாகவும், சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
2022-ஆம் ஆண்டு டிசம்பரில் ரணசிங்க நியூசிலாந்துக்குச் சென்றார். அங்கு இரண்டு மாத வருகை விசாவில் தனது உறவினர் ஒருவருடன் வசித்து வந்ததாக அவர் கூறுகிறார்.
அந்த விசா காலாவதியாகும் நேரம் நெருங்கியபோது, இலங்கையில் கடன் கொடுத்தவர்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகக் கூறி, குடியேற்றம் தொடர்பான மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் புகலிடம் கோரி விண்ணப்பித்ததாக அவர் தெரிவிக்கிறார்.
அவருக்கு புகலிடம் கோரியவர்களுக்கான ‘திறந்த பணி விசா’ வழங்கப்பட்டது. இதன்மூலம், ஓராண்டுக்கு ஏறக்குறைய எந்த நிறுவனத்திலும் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்ததாகவும், பின்னர் அந்த உணவகமே வேலைவாய்ப்பு விசாவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அவர் கூறுகிறார். இதன் மூலம் நீண்டகாலமாக நிலையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்று அவர் நம்பினார்.
ஆனால், நியூசிலாந்தில் புகலிடம் கோரியவர்கள் தங்களது விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கும்போது பொதுவாக வேறு விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அதன்பிறகுதான் அவர் ‘இமிக்ரேஷன் அண்ட் செக்ரட்டேரியல் சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடர்புகொண்டார். வெளிநாட்டிலிருந்து மீண்டும் வேலைவாய்ப்பு விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்த நிறுவனம் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறுகிறார்.
பிபிசி பார்வையிட்ட மின்னஞ்சல் தகவல்களின்படி, அந்த நிறுவனத்தின் மேலாளர் சில்வியான் காலன்ட், ரணசிங்க நாட்டைவிட்டு வெளியேறியவுடன் விண்ணப்ப நடைமுறையைத் தொடங்குவதாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து, வேலைவாய்ப்பு விசாவுக்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் வரை தற்காலிகமாகத் தங்குவதற்காக அவர் குக் தீவுகளுக்குச் செல்லத் திட்டமிட்டார்.
ஆனால், அந்த முடிவு அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
பட மூலாதாரம், AFP via Getty Images
மீண்டும் அவரது வேலைவாய்ப்பு விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதேசமயம், நியூசிலாந்தைவிட்டு வெளியேறியதன் மூலம் ஏற்கெனவே தமக்கு வழங்கப்பட்டிருந்த விசாவின் நிபந்தனைகளையும் அவர் மீறியிருந்தார். எதிர்காலத்தில் அவருக்கு எந்தவொரு விசாவும் வழங்கப்படாது என்பதை நியூசிலாந்து அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
இதற்கிடையே அவருக்கு உதவ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக சில்வியான் காலன்ட் கூறினார். அப்போது நியூசிலாந்தின் குடியேற்றத் துறை அமைச்சராக இருந்த கிறிஸ் பெங்க் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கும் கடிதம் எழுதியதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், இறுதியில் இந்தச் சூழ்நிலைக்குத் தானே காரணம் என்று காலன்ட் ஒப்புக்கொண்டதாகவும், இதற்கு மேல் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியதாகவும் ரணசிங்க தெரிவிக்கிறார்.
“வீட்டுக்குத் திரும்பிச் செல்வதே உங்களுக்கு நல்லது என்று அவர் என்னிடம் கூறினார். அங்கு என்னைத் தடுத்து நிறுத்த எதுவும் இல்லை. அதனால், நான் சம்மதித்தேன்” என்கிறார் ரணசிங்க.
ஆனால், இலங்கைக்குச் செல்வதற்கான ஏர் நியூசிலாந்து விமானச் சீட்டுடன் விமான நிலையத்துக்குச் சென்றபோது, நியூசிலாந்தின் பயண இடைநிறுத்த விசா இல்லாமல் விமானத்தில் ஏற முடியாது என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
நியூசிலாந்தின் பயண இடைநிறுத்த விசாவுக்கு அவர் மூன்று முறை விண்ணப்பித்தார். மூன்று விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. நியூசிலாந்துக்குள் நுழைந்தால் அவர் அங்கிருந்து வெளியேறுவார் என்பதில் தங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவின் பயண இடைநிறுத்த விசாவுக்கு அவர் நான்கு முறை விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.
ஒரு விண்ணப்பத்தை நிராகரித்தபோது, வேறு வழிகளில் பயணிக்க முயற்சிக்குமாறு நியூசிலாந்து பரிந்துரைத்தது. ஆனால், அமெரிக்க மாகாணமான ஹவாய் தீவும், பிரெஞ்சு பொலினீசியாவைச் சேர்ந்த டஹிடி தீவும், விசா விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதற்கு முன்பாக பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்தன. இந்தத் தகவல்களை நியூசிலாந்தில் நேரில் சென்றுதான் வழங்க முடியும் என்றும் கூறின.
மாற்றுப் பயண வழிகளில் தாம் மேற்கொண்ட முயற்சிகள், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தனது மகனின் திருமணம் மற்றும் உடல்நலம் மோசமடைந்து வரும் தனது தாயின் நிலைமை ஆகிய அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு நியூசிலாந்துக்கு அவர் அண்மையில் மீண்டும் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.
“விமானப் பயணச்சீட்டுகளுக்காக நான் நிறைய பணத்தை இழந்துவிட்டேன். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக, ஒன்றன்பின் ஒன்றாக விசாவுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், எதுவும் கைகூடவில்லை” என்று அவர் அழுகிறார்.
பட மூலாதாரம், Supplied
உதவும் மக்கள்
அழகிய மணல் கடற்கரைகளுக்கும் கரடுமுரடான எரிமலை மலைச்சிகரங்களுக்கும் பெயர்பெற்ற இந்தத் தீவுக் கூட்டம், ஆக்லாந்திலிருந்து விமானத்தில் சுமார் நான்கு மணி நேரப் பயணத் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு ரணசிங்க விருப்பமின்றி தங்கியிருக்கிறார்.
தனது நிலைமையில் இருப்பவர்களுடன் ஒப்பிடும்போது தான் அதிர்ஷ்டசாலி என்றும் அவர் கூறுகிறார். அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் நிர்வாகம், ஊழியர்களுக்கான தங்குமிடத்தில் அவரை இலவசமாகத் தங்க அனுமதித்துள்ளது. உள்ளூர் மக்கள் உணவு மற்றும் உடைகளையும் வழங்கி வருகின்றனர்.
ஹோட்டல் இயக்குநர்களில் ஒருவர் தமக்கு ஒரு தையல் இயந்திரத்தைக்கூட வழங்கியதாகவும், அதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்ட முடிவதாகவும் அவர் கூறுகிறார்.
“நான் ஏதோ நல்ல காரியம் செய்திருக்க வேண்டும்; அதனால்தான் மக்கள் எனக்கு இவ்வளவு அன்பாக உதவி செய்யும் இந்த இடத்தில் இருக்கிறேன் என்று என் தாய் எப்போதும் கூறுவார்” என்கிறார் அவர்.
ஆனால், இந்த உதவிகள் அனைத்தும் தாம் ஓர் இடத்தில் முடங்கிக் கிடக்கிறோம் என்ற உணர்வைத் தணிக்கவில்லை.
இந்த மன அழுத்தம் தனது உடல்நலத்தையும் பாதிப்பதாக ரணசிங்க கூறுகிறார். “எனக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது” என்கிறார் அவர்.
“உண்மையை சொல்வதானால் அவருக்கு என்ன வழி இருக்கிறது என்றே எனக்குத் தெரியவில்லை” என்கிறார் ஆக்லாந்தைச் சேர்ந்த குடியேற்றச் சட்ட நிபுணர் அலஸ்டர் மெக்கிள்மாண்ட்.
ரணசிங்கவுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை மிகவும் மோசமானது என்றும், அது உண்மையான குடியேற்றச் சட்ட வழக்கறிஞரிடமிருந்து நிச்சயமாக வந்திருக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
குடியேற்றச் சட்டத்தின் அபாயங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாமலேயே, விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கப் பணம் வசூலிக்கும் ‘குடியேற்ற ஆலோசகர்கள்’ என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் பலர் இந்தத் துறையில் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இமிக்ரேஷன் அண்ட் செக்ரட்டேரியல் சர்வீசஸ் நிறுவனத்துக்குக் கட்டணமாக ஆயிரக்கணக்கான நியூசிலாந்து டாலர்களைச் செலுத்தியுள்ளதாக ரணசிங்க கூறுகிறார்.
பிபிசி சில்வியான் காலன்ட்டைத் தொடர்புகொண்டது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை.
“இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி அவர் புகலிடம் கோரியுள்ளதால், அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்பும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றே நியூசிலாந்து அதிகாரிகள் கருதுகின்றனர். அதனால்தான் பயண இடைநிறுத்த விசாவை வழங்க அவர்கள் மறுக்கக்கூடும் என்று மெக்லிமாண்ட் கூறுகிறார்.
நியூசிலாந்து தனது அண்டை நாடான ஆஸ்திரேலியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதால், ரணசிங்க ஆஸ்திரேலியா வழியாகப் பயணிக்கவும் அனுமதிக்க விரும்பாது என்று அவர் கூறுகிறார். பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவும் இதேபோன்ற முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
“அவர் வெளியேற வேண்டுமென்றால், ஏதாவது ஒரு நாட்டின் வழியாகப் பயணிக்க வேண்டும். ஆனால், அந்த ஆபத்தை ஏற்க எந்த நாடும் விரும்பாது” என்கிறார் அவர்.
ரணசிங்கவிடமிருந்து பல பயண இடைநிறுத்த விசா விண்ணப்பங்களைப் பெற்றதாக நியூசிலாந்து குடியேற்றத் துறை பிபிசியிடம் தெரிவித்தது. “நியூசிலாந்து வழியாகப் பயணிக்கும் உண்மையான நோக்கம் அவருக்கு இருப்பதாக நாங்கள் நம்பவில்லை” என்பதால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாகவும் அந்தத் துறை கூறியது.
ரணசிங்க தன்னைக் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லலாம் என்று முன்வந்தபோதுகூட, ஏன் பயண இடைநிறுத்த விசா வழங்கப்படவில்லை என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த குடியேற்றத் துறை அமைச்சரின் அலுவலகப் பிரதிநிதி, இத்தகைய நடவடிக்கைகள் ஒருவர் புகலிடம் கோருவதைத் தடுக்காது என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம், தனிப்பட்ட நபர்களின் விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது என்று கூறியது.
மேலும், ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்யும் குடியுரிமை இல்லாதவர்கள், ‘1958ஆம் ஆண்டின் குடியேற்றச் சட்டம்’ மற்றும் ‘1994ஆம் ஆண்டின் குடியேற்ற விதிமுறைகள்’ ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.
இதற்கிடையே, ரணசிங்கவுக்கு உதவ முடியுமா என்பதை அறிய அவரது குடும்பத்தினர் இலங்கை அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு முயற்சி செய்து வருகின்றனர். “முடிந்த எல்லா வழிகளிலும் முயற்சி செய்துவிட்டோம். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை” என்று அவரது சகோதரர் கூறுகிறார்.
குக் தீவுகளில் இருந்து ரணசிங்க இலங்கைக்குத் திரும்புவதற்கு உதவுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்தது.
“நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட நியூசிலாந்து அதிகாரிகளும் இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர்” என்று அமைச்சகம் கூறியுள்ளது.
ஆனால், ரணசிங்கவின் சகோதரர் மிகுந்த கவலையில் உள்ளார்.
“அவரது மனநிலை சரியாக இல்லை” என்று அவர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவிக்கிறார்.
“ஒருமுறை நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, என்னை உயிருடன் வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்ல அவர்கள் விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் எனது உடலையாவது இலங்கைக்கு அனுப்பி வைக்கட்டும் என்று அவர் என்னிடம் கூறினார்.”
கேதகி மசிலாமணி மற்றும் ஜூலியானா கான் ஆகியோரின் கூடுதல் தகவல்கள்.
முக்கிய குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு