பட மூலாதாரம், IMD
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நவம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை வரையிலான நேரத்தில் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், குறிப்பாகச் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இடையிடையே அதன் வேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரையும், சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகக் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், @ANI
தீவிரப் புயலாக வலுப்பெற்ற முரசு
வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியிலும் அதனை ஒட்டிய மேற்கு மத்தியப் பகுதியிலும் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ‘முரசு’ புயலாக உருவானது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், நவம்பர் 2-ஆம் தேதி அதிகாலை தீவிரப் புயலாக வலுப்பெற்றது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நவம்பர் 2-ஆம் தேதி காலை 2.30 மணி நிலவரப்படி, புயல் அதற்கு முந்தைய ஆறு மணி நேரத்தில் மணிக்கு சுமார் 20 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்திருந்தது.
சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்குக் கிழக்கு-தென்கிழக்கே 290 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டிருந்தது.
மச்சிலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 320 கிலோமீட்டர், காவலிக்கு தென்கிழக்கே 310 கிலோமீட்டர், ஓங்கோலுக்கு தென்கிழக்கே 330 கிலோமீட்டர் தொலைவிலும் அது இருந்தது. விசாகப்பட்டினத்துக்கு தெற்கே சுமார் 470 கிலோமீட்டர் தொலைவில் புயல் நிலைகொண்டிருந்தது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் முரசு புயல், நவம்பர் 2-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கும் நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தெற்கு ஆந்திரக் கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே, ஓங்கோலுக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அப்போது மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம்.
புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் பல இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். நவம்பர் 4ஆம் தேதியும் சில இடங்களில் கனமழை பெய்யலாம்.
நெல்லூர், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும். தெற்கு ஆந்திராவின் தாழ்வான கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகும் அபாயமும் உள்ளது.
பட மூலாதாரம், @APSDMA
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
முரசு புயல் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும், அதன் தாக்கத்தால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 2-ஆம் தேதிக்கான மாவட்ட வாரியான எச்சரிக்கையின்படி, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். நவம்பர் 3-ஆம் தேதியும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடரலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
கடலோரப் பகுதிகளில் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்
வடக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நவம்பர் 1-ஆம் தேதி பிற்பகல் முதல் காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நவம்பர் 2-ஆம் தேதி மாலை முதல் நவம்பர் 3-ஆம் தேதி காலை வரை காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டராகவும், அவ்வப்போது 80 கிலோமீட்டராகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நவம்பர் 3-ஆம் தேதி பிற்பகல் முதல் காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டராகவும், அதிகபட்சம் 60 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும்.
’4 முதல் 6 மீட்டர் உயர அலைகள் எழக்கூடும்’
தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையின் கூற்றுப்படி நவம்பர் 1-ஆம் தேதி பிற்பகல் முதல் நவம்பர் 4-ஆம் தேதி காலை வரை வடக்கு தமிழகக் கடலோரப் பகுதிகளிலும் புதுச்சேரியிலும் கடல் மிகக் கொந்தளிப்பாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் 4 முதல் 6 மீட்டர் உயரம் வரை அலைகள் எழக்கூடும். கடல் கொந்தளிப்பு காரணமாகப் பார்வைத்திறனும் குறைய வாய்ப்புள்ளது. நவம்பர் 4-ஆம் தேதிக்குப் பிறகு கடல் நிலைமை படிப்படியாகச் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதனால் வடக்கு தமிழகக் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 4-ஆம் தேதி காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீன்பிடிப் பணிகள் அனைத்தையும் முழுமையாக நிறுத்தி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக அருகிலுள்ள துறைமுகம் அல்லது கரைக்குத் திரும்ப அரசு அறிவுறுத்தியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
பொதுமக்கள் செய்ய வேண்டியவை
புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள்களையும் வெளியிட்டுள்ளது.
- கடலோரச் சாலைகள், கடல் சுவர்களிலிருந்து விலகி இருங்கள்: கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட கடலோரச் சாலைகளில் உயரமான அலைகளும் கடல் கொந்தளிப்பும் காரணமாக நீர் தெறிக்கக்கூடும். கடற்கரை நடைபாதைகள், கடல் சுவர்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருக்க வேண்டும்.
- நீர் தேங்கிய பகுதிகளைத் தவிருங்கள்: நீரின் ஆழம் தெரியாத நீர் தேங்கிய சாலைகளிலும் தாழ்வான சுரங்கப்பாதைகளிலும் நடக்கவோ வாகனங்களை ஓட்டவோ வேண்டாம்.
- அத்தியாவசியப் பொருட்களைத் தயாராக வைத்திருங்கள்: போதுமான குடிநீர், தேவையான மருந்துகள், அவசர விளக்குகள், டார்ச் லைட்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருக்க வேண்டும். பவர் பேங்குடன் சார்ஜ் செய்யப்பட்ட கைப்பேசியையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
- மழைநீர் வடிகால்களைச் சுத்தம் செய்யுங்கள்: மாடி மற்றும் பால்கனிகளில் உள்ள வடிகால் வாய்களைச் சுத்தம் செய்து, மழைநீர் தடையின்றி வெளியேறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
- தளர்வான பொருட்களைப் பாதுகாப்பாகக் கட்டி வையுங்கள்: பலத்த காற்றில் பறந்து செல்லக்கூடிய பொருத்தப்படாத தகரத் தகடுகள், விளம்பரப் பலகைகள் மற்றும் எடை குறைந்த வெளிப்புறப் பொருட்களைப் பாதுகாப்பாகக் கட்டி வைக்க வேண்டும்.
- அதிகாரபூர்வ தகவல்களைப் பின்பற்றுங்கள்: தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்புத் துறை, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), உங்கள் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வெளியிடும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
- கடற்கரைகளுக்கும் கடலோரச் சாலைகளுக்கும் செல்ல வேண்டாம்: கடல் கொந்தளிப்பாக இருக்கும் நேரத்தில் பொழுதுபோக்கு, புகைப்படம் எடுத்தல் அல்லது சுற்றிப் பார்ப்பதற்காகக் கடற்கரைகள், துறைமுக நடைமேடைகள், கடலோரச் சாலைகளுக்குச் செல்லக்கூடாது.
- கடலுக்குள் செல்ல வேண்டாம்: மீனவர்கள் நவம்பர் 4ஆம் தேதி காலை வரை கடலுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- மின்கம்பங்கள், மின்கம்பிகளைத் தொட வேண்டாம்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரத்தில் தெருவிளக்குகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் அறுந்து விழுந்த மின்கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். மின்கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் அவற்றைத் தொடாமல் மின்வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
- பலவீனமான கட்டடங்களில் தங்க வேண்டாம்: பாதுகாப்பற்ற கூரைகள், பலவீனமான குடிசை வீடுகள் அல்லது இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாரிகள் அறிவுறுத்தினால், உள்ளூர் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.
- வதந்திகளைப் பகிர வேண்டாம்: சரிபார்க்கப்படாத வானிலைத் தகவல்களையோ அச்சத்தை ஏற்படுத்தும் செய்திகளையோ சமூக ஊடகங்களில் பகிரவோ மற்றவர்களுக்கு அனுப்பவோ கூடாது.
அவசர உதவி எண்கள்
புயல் தொடர்பான அவசர உதவி தேவைப்படுவோர் மாநில அவசர உதவி எண்ணான 1070 அல்லது மாவட்ட அவசர உதவி எண்ணான 1077 ஆகியவற்றைத் தொடர்புகொள்ளலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.
புயலின் நகர்வு, காற்றின் வேகம், மழை எச்சரிக்கை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் வெளியிடும் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு