கேரளாவில் ரூ.3.24 கோடி வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூர் பாஜக நிர்வாகிகள் 2 பேரை கட்சியிலிருந்து நீக்கி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் என்ற இடத்தில் கடந்த ஜூன் 13-ம் தேதி நகைக் கடை அதிபரிடம் இருந்து ரூ.3.24 கோடி பணம் வழிப்பறி செய்யப்பட்டது தொடர்பாக கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருவாரூரை சேர்ந்த பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் துரை அரசு, நகர பாஜக இளைஞரணி தலைவர் ஸ்ரீராம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவர்களை போலீஸார் தேடி வந்தனர். இதில், துரை அரசு போலீஸில் சரணடைந்தார். ஸ்ரீராமை நேற்று முன்தினம் கேரள போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, பாஜகவை சேர்ந்த இருவரும் சட்ட விரோத நடவடிக்கையிலும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் நடந்து கொண்டதால், அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.