இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலை கடைகள் மூலம் (ரேசன் கடைகள்) வழங்கப்படும் உணவு தானியங்களின் ஒதுக்கீட்டில் மாற்றங்கள் கொண்டு வர இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2013-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்கு திருத்தங்களை மேற்கொள்ள மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஆலோசித்து வருவதாக மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களைப் பாதிக்கும் என்றும் அதனால் அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“சுமார் எழுபது லட்சம் ஏழைக் குடிமக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் தமிழ்நாட்டின் எண்ணங்கள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாட்டின் நலனுக்குகந்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று நம்புகிறேன்,” என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன?
மத்திய அரசு கடந்த மாதம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைவு மசோதா ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த வரைவு மசோதா தொடர்பாக பொதுமக்கள் ஜூலை 13-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மத்திய அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் பெற்று வரும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அளவு மாற்றியமைக்கப்பட உள்ளது.
தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அது குடும்பத்தில் ஒருவருக்கு தலா 7 கிலோ வீதம் அதிகபட்சமாக 35 கிலோ வரை மட்டுமே பெற முடியும் வகையில் சட்டத்தைத் திருத்த முன்மொழியப்பட்டிருந்தது.
‘தற்போதுள்ள குடும்பம் சார்ந்த ஒதுக்கீட்டு முறை, மிகவும் நலிவடைந்த குடும்பங்களுக்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக அமைக்கப்பட்டிருந்தாலும், குடும்பத்தின் அளவைப் பொறுத்து இது குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. சிறிய குடும்பங்கள் தனிநபர் அடிப்படையில் அதிக அளவிலான ஒதுக்கீட்டைப் பெறுகின்றன. மாறாக, பெரிய குடும்பங்கள் குறைவான தனிநபர் ஒதுக்கீட்டையே பெறுகின்றன,” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அந்த அறிவிப்பில், “ஒரே வகையைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதும், உணவு தானியங்களை சரியான முறையில் ஒதுக்கீடு செய்வதுமே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், X/PMO India
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் உணவு தானியங்கள் பெறப்பட்டு நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்த உணவு தானியங்கள் மத்திய அரசின் ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் மூலம் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டில் வெவ்வேறு வகையான குடும்ப அட்டைகள் இருந்தாலும் மூன்று வகை அட்டைகளே பிரதானமாக உள்ளன.
முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகள் (பிஹச்ஹச்) – இந்த மாதம் 20 கிலோ அரிசி வரை வழங்கப்படுகிறது.
முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகள் – அந்தியோதயா அன்ன யோஜனா (பிஹச்ஹச்- ஏஏஒய்) – இந்தக் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வரை வழங்கப்படுகிறது.
முன்னுரிமை பெறாத குடும்ப அட்டைகள் (என்பிஹச்ஹச்) – இந்தக் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீடு அளவு என்பது கிடையாது. இவர்கள் தேவையான அளவு அரிசிக்கு கட்டணம் செலுத்தி பெற வேண்டும்
“தற்போது குடும்பம் எனக் கணக்கிடப்பட்டு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனை குடும்ப உறுப்பினர் அடிப்படையில் மாற்றினால் குடும்பங்களுக்குத் தேவையான உணவு தானியங்களின் அளவு கிடைக்காமல் போகலாம். நகர்ப்புறங்களைவிட பெரும்பாலும் கிராமப்புறங்களில் தான் இந்த அட்டை வைத்திருக்கும் குடும்பங்கள் அதிகளவில் இருக்கின்றன,” என்கிறார் நியாய விலைக் கடை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளரான தினேஷ் குமார்.
தமிழ்நாடு அரசு இந்த வரைவு மசோதாவை எதிர்ப்பது ஏன்?
தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 ஆக மட்டுமே இருப்பதாக முதலமைச்சரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ள நிலையில் இத்திருத்தம், மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களுக்குச் சென்றடையும் உணவு தானியங்களின் அளவைக் கணிசமாகக் குறைக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின்படி தமிழ்நாட்டில் 18,64,600 அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) குடும்ப அட்டைகளும் 69,26,983 பயனாளிகளும் உள்ளனர்.
பட மூலாதாரம், Prashanth Vishwanathan/Bloomberg via Getty Images
படக்குறிப்பு, பொது விநியோகத் திட்டம் (கோப்புப் படம்)
சமூகத்தின் மிகவும் நலிவடைந்த பிரிவினரிலிருந்து மாற்றுத்திறனாளிகள், வயதான மாற்றுத்திறனாளிகள், உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வாதாரத்திற்கு நிலையான வருமானம் இல்லாத அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோர் தலைமையில் செயல்படும் குடும்பங்கள், பழங்குடியினக் குடும்பங்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர் என்றும் முதல்வர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதன் உரிமைகள் திட்டமிட்டே எளிமையானதாகவும், நிபந்தனையற்றதாகவும், குடும்ப அடிப்படையிலானதாகவும் வடிவமைக்கப்பட்டன. இத்தகைய உரிமையை, தலா ஒரு நபருக்கான பங்காக மாற்றி, குடும்ப அளவில் அதற்கு உச்சவரம்பு விதிப்பது, குறைந்த எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டுள்ள மாநிலங்களை, குறிப்பாக, ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களைத் தண்டிப்பதாக அமையும்.” என்றும் முதலமைச்சர் விஜய் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின்படி, இந்த மாற்றங்கள் நிறைவேறினால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடமிருந்து வழங்கப்படும் ஒதுக்கீடு 65,261 மெட்ரிக் டன் என்பதிலிருந்து 42,040 மெட்ரிக் டன்னாகக் குறைந்துவிடும் நிலை உள்ளது.
தமிழ்நாடு பெரும்பாலும் அரிசியை முதன்மை உணவாகக் கொண்ட ஒரு மாநிலமாகும் எனக் கூறப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும், “இங்குள்ள ஒட்டுமொத்த மக்களும் காலை அல்லது இரவு சிற்றுண்டியாக இட்லி, தோசை, பொங்கல் மற்றும் மதிய உணவாக அரிசி சாதத்தையே பெரும்பான்மையாக உட்கொள்கின்றனர். அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி அவர்களின் அன்றாட மூன்று வேளை உணவிற்கும் ஒரு தவிர்க்க முடியாத முக்கிய அங்கமாக விளங்குவதோடு, வெளிச்சந்தையில் இருந்து வேறு எந்தவொரு உணவுப் பொருளினாலும் அதனை ஈடு செய்ய முடியாது.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களைக் கைவிட்டு பழைய ஒதுக்கீட்டு முறையையே பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், STR/NurPhoto via Getty Images
படக்குறிப்பு, பொது விநியோகத் திட்டம் (கோப்புப் படம்)
புதிய மாற்றங்கள் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும்?
மத்திய அரசு விதிகளின்படி, பிஹச்ஹச் மற்றும் ஏஏஒய் குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசால் கட்டணமில்லாமல் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. என்பிஹச்ஹச் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் தமிழ்நாடு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவு உணவு தானியங்களை கட்டணமில்லாமல் வழங்குகிறது. மத்திய அரசு ஒதுக்கீடு போக கட்டணம் பெற்று வழங்கப்பட வேண்டிய உணவு தானியங்களுக்கான செலவை தமிழ்நாடு ஏற்றுக்கொள்கிறது.
இந்த மாற்றங்கள் மிகவும் பின் தங்கிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானியான கோபிநாத். இவர் ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு, பொது விநியோகத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஏஏஒய் குடும்ப அட்டைதாரர்கள் நிலையான வருமானம் இல்லாமல் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதால் அவர்களுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.” என்றார்.
“தற்போது எத்தனை குடும்ப உறுப்பினர்கள் இருந்தாலும் 35 கிலோ வழங்கப்படுகிறது. உறுப்பினர் வாரியாகப் பிரித்தால் அது குறைந்துவிடும். குடும்பங்களுக்கான உணவு தானிய ஒதுக்கீடு குறையும், அவர்களின் செலவும் அதிகரிக்கும். இதனால் அவர்கள் கூடுதல் செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்,” என்றார் கோபிநாத்.
தமிழ்நாட்டில் சுமார் 97% தானிய நுகர்வு அரிசியிலிருந்து மூலம் மட்டுமே கிடைப்பதாகத் தெரிவிக்கிறார் கோபிநாத். “ஒன்று மக்களுக்குச் செலவு அதிகரிக்கும். ஆனால் ஒதுக்கீட்டில் மாற்றங்கள் ஏற்படுகிறதென்றபோது தமிழ்நாடு அரசு தற்போது உள்ள ஒதுக்கீட்டு முறையையே பின்பற்ற விரும்பினால் அதற்கான கூடுதல் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.” என்றார்.