• Sun. Sep 29th, 2024

24×7 Live News

Apdin News

‘லப்பர் பந்து கதையை இருபது நிமிடம் தான் கூறினேன்’- இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து

Byadmin

Sep 29, 2024


ஹரிஷ் கல்யாண்- தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ எனும் திரைப்படம் ,எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

இதற்காக  பார்வையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்பிய படக் குழுவினர், சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் வெற்றி சந்திப்பினை ஒருங்கிணைந்தனர்.

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், தினேஷ், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், ஜென்சன் திவாகர், டி எஸ் கே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் இசையில் உருவான இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரித்திருந்தார்.

உள்ளூர் துடுப்பாட்டத்தை மையப்படுத்தி தயாரான இந்தத் திரைப்படம் கடந்த இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியானது.

வெளியான உடன் படத்தை பற்றிய சாதகமான விமர்சனங்கள் வெளிவர தொடங்கியதும் மக்களின் பேராதரவு அதிகரித்தது.

இந்நிலையில் வெற்றி சந்திப்பில் பங்கு பற்றிய இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேசுகையில், ” தயாரிப்பாளரை சந்தித்து முதலில் காதல் கதை ஒன்றை கூறினேன்.

அதனை வேண்டாம் என்று மறுத்து விட்டார். மண் சார்ந்த எளிய மனிதர்களின் வாழ்வியலுடன் கூடிய கதையை சொல்லுங்கள் என சொன்னபோது உடனடியாக இருபதே நிமிடத்தில் இப்படத்தின் கதையை சொன்னேன்.

அதிலும் மாமனார் மருமகன் ஈகோ மோதல், இருவரும் துடுப்பாட்ட வீரர்கள் ,ஒருவர் பந்துவீச்சாளர் ,மற்றவர் மட்டையாளர், என சில முக்கியமான விபரங்களை மட்டும் குறிப்பிட்டேன்.

இதில் கவரப்பட்ட தயாரிப்பாளர் உடனடியாக படத்தினை இயக்கும் வாய்ப்பினை வழங்கினார். உள்ளூர் துடுப்பாட்டத்தை பற்றிய கதை என்பதால் பொருத்தமான தலைப்புக்காக காத்திருந்தோம்.

எம்முடைய உதவியாளர்கள் தான் றப்பர் பந்தினை மையப்படுத்திய கதை என்பதால் படத்திற்கு றப்பர் பந்து என்றே தலைப்பை சூட்டலாம் என்றனர்.

நான் அதில் சிறிய திருத்தத்தை மேற்கொண்டு லப்பர் பந்து என பெயரிட்டேன்.

இந்தக் கதையில் இரண்டு நாயகர்கள் என்று சொன்னவுடன் தினேஷும், ஹரிஷ் கல்யாணும் சம்மதித்தார்கள்.

அதற்காக அவ்விருவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்தத் திரைப்படத்தின் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை பரிசாக அளித்த ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், தமிழக மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

By admin