பள்ளி மீது மோதிய விமானப்படை விமானம் – ஆமதாபாத் பாணியில் வங்கதேசத்திலும் ஒரு விபத்து
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பள்ளி மீது மோதி விமானப்படை பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர், 100க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் தீக்காயத்துடன் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
தங்களது விமானம் விபத்துக்குள்ளானதை வங்கதேச ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
பயிற்சிக்காக உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்குக் கிளம்பியதாகவும், புறப்பட்டவுடன் இயந்திர கோளாறு ஏற்பட்டதாகவும், விமானி இந்த விபத்தில் இறந்ததாகவும் வங்கதேச ராணுவம் தெரிவித்துள்ளது.
விபத்து மற்றும் பெரும் சேதத்தைத் தவிர்க்க, விமானத்தின் விமானி லெப்டினன்ட் எம்.டி. தௌகிர் இஸ்லாம், விமானத்தை அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியிலிருந்து குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிக்குக் கொண்டு செல்ல எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான கட்டடத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வந்ததாக ஒரு ஆசிரியர் கூறினார்
“ஒரு பயிற்சி போர் விமானம் கட்டடத்தில் நேரடியாக மோதியது. அது தொடக்கப்பள்ளி கட்டடம். கட்டடத்தின் வாயில் முற்றிலுமாக தீப்பிடித்தது,” என்று ஓர் ஆசிரியர் கூறினார்.
தனது கண்களுக்கு முன்பாக விமானம் பள்ளி கட்டடத்தில் மோதியதாக ஒரு மாணவர் தெரிவித்தார்.
“எங்களுக்கு ஒரு தேர்வு இருந்தது. தேர்வுக்குப் பிறகு நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். விமானம் என் கண்களுக்கு முன்பாக கட்டடத்தின் மீது மோதியது,” என 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் தனது நண்பர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் வாசிகள் மற்றும் ராணுவ வீரர்களும் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.
மற்றொரு காணொளியில், படுகாயமடைந்தவர்களை ராணுவ வீரர்களும் உள்ளூர் வாசிகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதைக் காட்டுகிறது.
விமான விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு