• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

வயலின் இசைக்கலைஞர் எல். சுப்பிரமணியம் அவர்களின் சாதனைகள்

Byadmin

Sep 17, 2024


எல். சுப்பிரமணியம் அவர்கள், ஒரு திறமையான வயலின் இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளராவார். பாரம்பரிய கர்நாடக இசையில் பயிற்சிப்பெற்று விளங்கிய எல். சுப்ரமணியம் அவர்கள், கிளாசிக்கல் மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசையிலும் புகழ்பெற்று விளங்கினார். சுமார் 150க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள எல். சுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி மேலும் விரிவாகக் காண்போம்.

பிறப்பு:ஜூலை 23, 1947

இடம்:சென்னை, தமிழ்நாடு, இந்தியா

பணி:வயலின் இசையமைப்பாளர்

நாட்டுரிமை:இந்தியா

பிறப்பு

எல். சுப்ரமணியம் அவர்கள், 1947  ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 23  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் லக்ஷ்மி நாராயணாவுக்கும், சீதாலஷ்மிக்கும் மகனாக ஒரு இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

 ஆரம்ப வாழ்க்கை

இவருடைய தந்தை மற்றும் தாய், தமிழ் வம்சாவளியை சார்ந்த திறமையான இசைக் கலைஞர்கள் என்பதால், தனது தந்தையின் கீழ் இசைப்பயிற்சியைத்  தொடங்கிய அவர், தன்னுடைய ஆறு வயதில் மேடையேறினார். இளம் வயதிலிருந்தே இசை மற்றும் அறிவியலில் சிறப்புப்பெற்று விளங்கிய சுப்ரமணியம் அவர்கள், சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தார். தன்னுடைய கல்வியில் மருத்துவராக பதிவு செய்தாலும், முழு நேரமும் தன்னை இசையில் ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அமெரிக்காவிலுள்ள “கலிஃபோர்னியா இன்ஸ்டியுட் ஆஃப் ஆர்ட்ஸில்” மேற்கத்திய பாரம்பரிய இசைத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இசைப் பயணம்

இந்திய கர்நாடக இசையில் புகழ்பெற்று விளங்கிய “செம்பை வைத்தியநாத பாகவதருடனும்” மற்றும் மிருதங்கத்தில் புகழ் பெற்று விளங்கிய “பாலக்காடு மணி ஐயருடனும்” பல மேடைகளில் தன்னுடைய இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். பின்னர், மீரா நாயர் இயக்கிய “சலாம் பாம்பே” மற்றும் “மிஸ்ஸிஸிப்பி மசாலா” போன்ற திரைப்படங்களுக்கும், சில ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 1983 ல் வயலின் மற்றும் புல்லாங்குழலுடன் சேர்ந்து ஒரு மேற்கத்திய பாணியில் இசையை வெளிபடுத்தினார். அத்தோடு மட்டுமல்லாமல், நியூ யார்க், பீஜ்ஜிங் போன்ற வெளிநாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளைத் தன்னுடைய இசையில் வெளிபடுத்தியுள்ளார்.

புகழ்பெற்ற சான் ஜோஸ் பாலே கம்பெனி, ஆல்வின்அயலே, அமெரிக்க டான்ஸ் தியேட்டர் மற்றும் மரின்ஸ்கி பாலே போன்ற நடன, இசை நிறுவனங்களில் தன்னுடைய இசைத் திறமையை வெளிபடுத்தியுள்ளார். 1999 ல் வெளியிடப்பட்ட “குளோபல் ஃப்யூஷன்” என்ற ஆல்பம் எல். சுப்ரமணியம் அவர்களுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அவர் மேலும் கர்நாடக இசையில் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

திருமண வாழ்க்கை

எல். சுப்பிரமணியம் அவர்கள், விஜி சுப்பிரமணியம் என்பவரை மணந்தார். ஆனால், அவர் பிப்ரவரி 9, 1995 ஆம் ஆண்டு இறந்து விடவே, நான்கு ஆண்டுகள் கழித்து இந்திய பின்னணிப் பாடகரான கவிதா கிருஷ்ணமூர்த்தி என்பவரை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பிந்து சுப்பிரமணியம் என்ற மகளும் மற்றும் அம்பி சுப்பிரமணியம், நாராயண சுப்பிரமணியம் என்ற மகன்களும் உள்ளனர்.

விருதுகள்

  • 1972ல் சிறந்த “மேற்கத்திய இசைக் கலைஞர் விருது” சென்னை ஐ.ஐ.டி மூலமாகவும், “வயலின் சக்ரவர்த்தி விருது” சென்னை கவர்னர் மூலமாகவும் வழங்கப்பட்டது.
  • 1981ல் “கிராமிய விருதுக்கு” பரிந்துரை செய்யப்பட்டார்.
  • 1988 ல் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.
  • 1990ல் “கிரியேட்டிவ் இசை விருது” சங்கீத நாடக அகாடமியால் வழங்கப்பட்டது.
  • 1998ல் “லோட்டஸ் ஃபெஸ்டிவெல் விருது” லாஸ் ஏஞ்சல் நகரில் வழங்கப்பட்டது.
  • 2001ல் கேரளா அரசால் “மனவியம் விருது” வழங்கப்பட்டது.
  • 2001ல் மத்திய அரசால் “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது.
  • 2012ல் லிம்கா சாதனை புத்தகத்தின் “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.

 

நன்றி : itstamil.com

The post வயலின் இசைக்கலைஞர் எல். சுப்பிரமணியம் அவர்களின் சாதனைகள் appeared first on Vanakkam London.

By admin