பட மூலாதாரம், Getty Images
வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் என்பது, வருமான வரி செலுத்துவோருக்கான பரபரப்பான மாதமாக இருக்கும். ஏனென்றால், ஜூலை 31ஆம் வருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்வதற்கான கடைசி தேதியாக இருக்கும்.
ஆனால் 2024-2025 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து, கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது வருமான வரித்துறை.
வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான படிவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதைப் பதிவேற்றம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல் தொடர்பாக நாம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார், சென்னையைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் (CA) ரேணுகா முரளி.
1. வருமான வரி தாக்கல் செய்யாமல் இருப்பது
“வருமான வரி என்பது ஒரு நிதியாண்டில் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் ஈட்டிய வருமானத்தின் மீது மத்திய அரசால் விதிக்கப்படும் நேரடி வரியாகும். இந்திய வருமான வரிச் சட்டம் 1961இன்படி, எந்தெந்த வருமானங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன” என்று கூறிய ரேணுகா முரளி அவற்றைப் பட்டியலிட்டார்.
- சம்பள வருமானம்: வேலைவாய்ப்பின் ஒரு பகுதியாகப் பெறப்படும் ஊதியங்கள், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள்.
- வீட்டுச் சொத்தில் இருந்து வருமானம்: நமக்குச் சொந்தமான வீடுகள் அல்லது சொத்துகளை வாடகைக்கு விடுவதன் மூலம் வரும் வருவாய்
- வணிகம் அல்லது தொழில் இருந்து கிடைக்கும் லாபம் மற்றும் ஆதாயங்கள்: வணிக உரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் ஈட்டும் வருமானம் அல்லது நிகர லாபம்
- அசையும்/அசையா சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபங்கள் (Capital Gain). இது குறுகிய கால மற்றும் நீண்ட கால ஆதாயங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன
- பிற மூலங்களில் இருந்து கிடைக்கும் வருமானம்: வட்டி, ஈவுத் தொகை (Divident) மற்றும் மேற்கூறிய வகைகளின் கீழ் வராத அனைத்து வகையான வருவாய்
பட மூலாதாரம், Getty Images
வரி விகிதம் என்பது ஒரு நிதியாண்டில் வரி செலுத்துவோர் மத்திய அரசுக்கு வரியாகச் செலுத்தும் வருமானத்தின் சதவிகிதத்தைக் குறிக்கிறது. வரி விகிதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் மத்திய அரசின் வருமான வரித்துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
வருமான வரி தாக்கல் செய்வதற்கு என 7 விண்ணப்பங்கள் உள்ளன. வருமான வரித்துறையின் இணையதளத்தில் அவை கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் தங்களுக்கு ஏற்ற வகையைத் தேர்வு செய்து, அந்தப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம் அல்லது பதிவிறக்கம் செய்து, விவரங்களைப் பூர்த்தி செய்து மீண்டும் பதிவேற்றலாம்.
“வருமான வரி தாக்கல் செய்வது மிகவும் அவசியமானது. நாட்டின் வளர்ச்சிக்கு என்பதைத் தாண்டி தனிமனிதர்களுக்கும் இது முக்கியம். உதாரணத்திற்கு ஒரு வெளிநாட்டிற்குச் செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, வருமான வரி தாக்கல் செய்திருக்கிறீர்களா என்பது கணக்கில் கொள்ளப்படும்” என்கிறார் ரேணுகா முரளி.
2. அனைத்து விதமான வருமானங்களையும் கணக்கில் காட்டாமல் இருப்பது
“சாமானியர்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் இது தெரியாமல் நடக்கும் தவறாக இருக்கும். உதாரணத்திற்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு வரி கிடையாது எனப் பலரும் நினைக்கிறார்கள். 10,000 ரூபாயை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள், அதில் ஓர் ஆண்டுக்கு 10 சதவிகிதம் லாபம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் அந்த 10%, அதாவது 1000 ரூபாய் வருமானத்திற்கும் வரி உண்டு” என்கிறார் ரேணுகா முரளி.
தொடர்ந்து பேசிய அவர், “அதை நீங்கள் பணமாக வெளியே எடுக்காமல், வேறு ஏதாவது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தாலும் வரி உண்டு. அதேபோல, வைப்புத் தொகைகளுக்கும் வங்கி தரப்பில் இருந்து டிடிஎஸ் பிடிக்கப்பட்டு இருக்கும். ஆனால், அதைக் குறிப்பிடாமல் விட்டிருப்பார்கள். இது போன்றவற்றில், வருமான வரித்துறையிடம் இருந்து ‘நோட்டீஸ்’ வர வாய்ப்புள்ளது. எனவே அனைத்து வகையான வருமானங்களையும் தெளிவாகக் குறிப்பிடுவது அவசியம்” என்கிறார்.
ஒருவரின் வருமான வரித் தாக்கலில் குறைகள் கண்டறியப்பட்டால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139(9) இன் கீழ் வருமான வரித் துறை உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பும்.
அதற்குப் பதிலளிக்க மற்றொரு நபரை (ஒரு பட்டயக் கணக்காளர்) நீங்கள் அங்கீகரிக்கலாம் அல்லது நீங்களே செய்யலாம். படிவத்தில் உள்ள தவறை ஆன்லைனில் சரிசெய்வதன் மூலம் ‘நோட்டீஸ்’-க்கான பதிலைச் சமர்ப்பிக்கலாம். இதற்கான கால அவகாசம் 15 நாட்கள். இருப்பினும், கூடுதல் கால அவகாசத்திற்கான கோரிக்கையும் ஏற்கப்படும்.
ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் ‘நோட்டீஸ்’-க்கு நீங்கள் பதிலளிக்கத் தவறினால், உங்கள் வருமானம் செல்லாததாகக் கருதப்படலாம். எனவே வருமான வரிச் சட்டத்தின்படி, அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அது வழிவகுக்கும்.
வங்கிக் கணக்குகள் அனைத்திலும் ஆதார், பான் விவரங்கள் இணைக்கப்பட்டு இருப்பதைக் குறிப்பிடும் ரேணுகா, “நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது, உங்கள் சொத்துகளும் ஆண்டு வருமானமும் சரிபார்க்கப்படும். அதில் ஏதேனும் பிரச்னை என்றால், நோட்டீஸ் தொடங்கி, பல்வேறு சட்டச் சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்” என்கிறார்.
3. தவறான அல்லது தகுதியற்ற கழிவுகளைக் கோருதல்
பட மூலாதாரம், Getty Images
வரி செலுத்துவோர் தங்கள் வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் குறைத்துக் கொள்ள அனுமதிக்கும் பல விதிகளை வருமான வரிச் சட்டம் வழங்குகிறது. அதாவது, வரி கழிவு (Deduction) என்பது வரி செலுத்துவோரின் வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் குறைக்கும் ஒரு வழியாகும். ஆனால் இதற்குச் சில நிபந்தனைகளும் உள்ளன.
கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி போன்ற துறைகளில் சேமிப்பு, முதலீடுகள் மற்றும் செலவினங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தக் கழிவு முறை உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 80C, 80D, 80E என பல பிரிவுகள் உள்ளன. உதாரணத்திற்கு, 80C என்பது ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS), வருங்கால வைப்பு நிதிகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதற்கும், கல்விக் கட்டணம் மற்றும் வீட்டுக் கடன் அசல் தொகை செலுத்துவதற்கும் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான கழிவை அனுமதிக்கிறது.
“அதேநேரத்தில் 80C-இன் கீழ் அதிகபட்ச வரம்பு 1.5 லட்சம் கிடைக்கிறது எனும்போது, அந்த முழுத் தொகையையும் க்ளைம் (Claim) செய்ய வேண்டும் என நினைப்பது தவறு. உதாரணத்திற்கு நீங்கள் 50,000 ரூபாயை எல்ஐசி காப்பீட்டுத் திட்டத்திலும், 30,000 ரூபாயை பொது சேமநல நிதியத்திலும் (Public Provident Fund) முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால், 80,000 ரூபாயை மட்டுமே 80C பிரிவின் கீழ் க்ளைம் செய்ய வேண்டும்” என்கிறார் ரேணுகா முரளி.
இந்த நிதி ஆண்டுக்கான ஐடிஆர் படிவம்-1இல், புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் ரேணுகா, “நீங்கள் 1.5 லட்சமும் க்ளைம் செய்கிறீர்கள் என்றால், அதற்கான முழு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. எல்ஐசி காப்பீடு என்றால், யார் பெயரில், எவ்வளவு தொகை என்பதைக் குறிப்பிட வேண்டும். நீங்கள் க்ளைம் செய்த தொகைக்கும், சமர்ப்பித்துள்ள ஆதாரங்களுக்கும் வேறுபாடுகள் இருந்தால் வருமான வரித்துறையின் நோட்டீஸ் வரும்” என்கிறார்.
4. மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி எண்
பட மூலாதாரம், Getty Images
“ஒரு பட்டயக் கணக்காளரின் ஆலோசனைப்படி வருமான வரி தாக்கல் செய்வது அல்லது சுயமாக வருமான வரித்துறையின் இணையதளத்தில் சென்று தாக்கல் செய்வது, என எதுவாக இருந்தாலும் உங்களது பிரதான மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி எண்ணை மட்டுமே பயன்படுத்துங்கள். நீங்கள் சரியாக தாக்கல் செய்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்த இது உதவும்” என்கிறார் ரேணுகா.
அதேபோல, “உங்களுக்கு எவ்வளவு ‘ரிட்டர்ன்’ வரும் அல்லது நீங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டுமா போன்ற அறிவிப்புகளும், தவறுகள் கண்டறியப்பட்டால் வருமான வரித்துறையின் நோட்டீஸ்கூட அந்த மின்னஞ்சலுக்கே அனுப்பப்படும்” என்பதால் இதில் கூடுதல் கவனம் தேவை என்கிறார் அவர்.
5. வருடாந்திர தகவல் அறிக்கை (ASI) மற்றும் 26ஏஎஸ் படிவத்தை சரிபார்ப்பது
பட மூலாதாரம், Getty Images
படிவம் 26ஏஎஸ் என்பது வரி செலுத்துவோரின் பல்வேறு வருமான ஆதாரங்களில் இருந்து டிடிஎஸ் (TDS) அல்லது டிசிஎஸ் (TCS) ஆகக் கழிக்கப்படும் எந்தவொரு தொகையின் விவரங்களையும் வழங்கும் ஒரு அறிக்கையாகும்.
இது வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், ஈவுத்தொகை, ரீஃபண்ட் (Refund) விவரங்கள், ஜிஎஸ்டி பதிவுகளின் அடிப்படையிலான விற்றுமுதல் (Turnover) போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், படிவம் 26ஏஎஸ்- உங்கள் பான் எண்ணுடன் தொடர்புடைய அனைத்து வரி தொடர்பான தகவல்களின் ஒருங்கிணைந்த பதிவை வழங்குகிறது.
“பலரும் ஐடிஆர் பூர்த்தி செய்யும்போது, தங்களது வருடாந்திர தகவல் அறிக்கை (ASI) மற்றும் 26ஏஎஸ் படிவத்தைச் சரிபார்ப்பது இல்லை. இந்த அறிக்கை மற்றும் படிவம்தான் உங்களது பல்வேறு பணப்பரிமாற்றம் மற்றும் வரி செலுத்துவது தொடர்பான முழுமையான ஆவணமாகும். இதைச் சமர்பிப்பதற்கு முன்பு முழுமையாகச் சரிபார்க்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார் ரேணுகா முரளி.
இது தவிர, ஒருவர் தனது வருமானம் உள்ளிட்ட தகவல்களுக்கு ஏற்ப ஐடிஆர் விண்ணப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். தவறான ஐடிஆர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தால், அது செல்லாது. அபராதத்திற்கு வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் ரேணுகா முரளி, “பெரும்பாலும் ஒரு பட்டயக் கணக்காளரின் உதவியைப் பெற்று வருமான வரி தாக்கல் செய்வது சிறந்தது” என்கிறார்.
“வருமான வரி ஏய்ப்புக்கும் வருமான வரி மேலாண்மைக்கும் வித்தியாசம் உள்ளது. முழு வருமானத்தை அரசுக்குத் தெரிவிக்காமல் மறைப்பது வரி ஏய்ப்பு. வரி மேலாண்மை என்பது சரியான முறையில் வரி கழிவுகளைப் பயன்படுத்தி பலன்களைப் பெறுவது. இரண்டுக்குமான வித்தியாசத்தை மக்கள் புரிந்துகொண்டு, வரி தாக்கல் செய்ய வேண்டும்” என்கிறார் ரேணுகா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு