பட மூலாதாரம், Getty Images
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் வேலை செய்ய வேண்டும் எனும் இடத்தில் நீங்கள் வாழ்ந்து வருகிறீர்களா? அல்லது தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ள வேலையில் நீங்கள் இருக்கிறீர்களா?
அப்படியெனில், உங்கள் வாகனத்திற்கு பி.ஹெச். பதிவு எண்ணை வைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அது என்ன பி.ஹெச். நம்பர் பிளேட்? யாரெல்லாம் அதைப் பெற முடியும்? அதைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? இதனால் ஏதேனும் பின்னடைவுகள் உண்டா?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இங்கே அறியலாம்.
பி.ஹெச் நம்பர் பிளேட் என்பது என்ன?
பி.ஹெச். பதிவு எண்களை இந்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது.
புதிய தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமே இந்த எண் வழங்கப்படும். ஆனால், வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கு இந்தப் பதிவு எண் வழங்கப்படாது.
இந்த எண்ணை அடையாளம் காண்பது வெகு சுலபம். வழக்கமான பதிவு எண் போன்றே இதுவும் இருக்கும் என்றாலும், அதில் BH என்ற எழுத்துகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். அதாவது பி.ஹெச் என்பதன் அர்த்தம் இந்தியா என்பதுதான்.
வழக்கமாக நம்பர் பிளேட்களில் எழுதப்படும் வாகனங்களின் பதிவு எண்களில் இருந்து இது சற்று வேறுபடுகிறது. நம்பர் பிளேட்டில் பிஹெச் எனும் எழுத்துக்குப் பிறகு, அந்த வாகனத்தின் பதிவு எண் எழுதப்பட்டு இருக்கும். மேலும் வாகனம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
வாகனம் பதிவு செய்யப்பட்ட ஆண்டு (YY), பின்னர் BH, அதற்கு அடுத்ததாக 4 இலக்கப் பதிவு எண் மற்றும் அதையடுத்து A முதல் Z வரையில் வாகனம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் இரண்டு எழுத்துகள் எழுதப்பட்டிருக்கும்.
உதாரணத்திற்கு 22 BH 9999 AA என்பது வாகனத்தின் எண்ணாக இருந்தால், அந்த எண் பிஹெச் வரிசை எண்ணில் 2022ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. அடுத்த 4 இலக்க எண் அந்த வாகனத்தின் பதிவு எண். AA என்பது அந்த வாகனம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கிறது.
வழக்கமான நம்பர் பிளேட்களில் BH என்பது மட்டும் இருக்காது. அவற்றில் மாநிலப் பதிவு குறித்தான எழுத்துகள் இருக்கும். இந்த BH வரிசை எண்ணில் என்ன சிறப்பு?
இந்த வாகனப் பதிவில் சில சிறப்புப் பலன்கள் உள்ளன. அதாவது, இந்த எண் இந்தியா முழுவதற்கும் செல்லுபடியாகும். வேறு மாநிலங்களுக்கு நீங்கள் இடம்பெயரும்போது அதை மறுபதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இத்துடன், பதிவு எண்ணால் வேறு மாநிலங்களில் இடையூறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
பிஹெச் நம்பர் பிளேட்டின் பலன்கள்
பட மூலாதாரம், Getty Images
மாநில பதிவு எண் கொண்ட வாகனத்துடன் நீங்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தால், 12 மாதங்களுக்குள் அந்தப் புதிய மாநிலத்தின் பதிவு எண்ணுக்கு மாற்ற வேண்டும்.
அப்படிச் செய்யவில்லையெனில், போக்குவரத்து விதிகளை மீறியதாகப் பொருள். இதனால், உங்கள் வாகனத்தின் காப்பீடு ரத்து செய்யப்படலாம்.
போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி உங்கள் காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் ரத்து செய்யலாம். ஆனால், பிஹெச் எண் இருக்கும்போது, ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்குச் செல்லும்போது வாகனப் பதிவு எண்ணை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே, இந்தப் பிரச்னையை நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.
பி.ஹெச். பதிவு எண்ணைப் பெற்றுவிட்டால், வேறு மாநிலத்திற்கு அதற்கான மறுபதிவைச் செய்யாமல் செய்வதால் வாகனத்தின் காப்பீடு செல்லுபடியாகுமா, காப்பீட்டுத் தொகையைப் பெற முடியுமா என்பவை குறித்துக் கவலைப்பட வேண்டாம்.
வழக்கமான நம்பர் பிளேட்டுடன் ஒருவர் புதிய காரை வாங்கும்போது, அதன் நீளம், எஞ்சினின் திறன் மற்றும் வகையைப் பொறுத்து ஒருவர் வழக்கமாக 15 ஆண்டுகளுக்கு சாலை வரி செலுத்த வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால், பிஹெச் நம்பர் பிளேட்டை பெறும்போது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே சாலை வரியைச் செலுத்த வேண்டும். அதன் பிறகு, ஒவ்வோர் இரண்டு ஆண்டுக்கும் சாலை வரியைச் செலுத்த வேண்டும்.
இதனால் ஏற்படும் மற்றொரு பயன், இந்த வாகனத்தை வேறு மாநிலத்தில் உள்ளவர்களுக்கு எளிதாக விற்க முடியும். ஏனெனில், அந்த எண் இந்தியா முழுவதற்கும் செல்லுபடியாகும்.
இந்த பி.ஹெச். பதிவு எண்ணுக்கு பதிவு செய்யும் வசதி, 26 மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் உள்ளதாக 2023ஆம் ஆண்டில் பத்திரிகைத் தகவல் பணியகம் (PIB) வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த மாநிலங்களில் உள்ள மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், ராணுவப் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் அல்லது நிர்வாக சேவைப் பணியாளர்கள் என அனைவரும் இந்த எண் கொண்ட நம்பர் பிளேட்டுகளுக்காக விண்ணப்பிக்கலாம்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களின் நிறுவனம் குறைந்தது நான்கு மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எப்படிப் பதிவு செய்வது?
பட மூலாதாரம், parivahan.gov.in
பி.ஹெச். பதிவு எண்ணுக்குப் பதிவு செய்யும் நடைமுறை மிகவும் எளிமையானது. இதைப் பெறுவதற்கு நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
அதற்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் வாஹன் (VAHAN) இணையதளத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது ஏதேனும் அங்கீகாரம் பெற்ற வாகன வியாபாரியின் உதவியை நாடலாம்.
இதைப் பெறுவதற்கு, தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் படிவம் 60 (Form 60) என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்காக நிறுவனத்தின் அடையாள அட்டை, பணிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கோரப்படும் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.
அதன் பிறகு, அதிகாரிகள் தகுதி சரிபார்ப்பை மேற்கொள்வார்கள். பி.ஹெச். எண்ணுக்கான ஆர்.டி.ஓ ஒப்புதல் கிடைத்தவுடன், அதற்கான மோட்டார் வாகன வரியைச் செலுத்த வேண்டும். பின்னர் VAHAN இணையதளம் உங்கள் வாகனத்திற்கான பிஹெச் எண்ணை நிர்ணயிக்கும்.
பி.ஹெச் எண்ணைப் பெறுவதால் ஏற்படும் பயன்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அதனால் ஏற்படக்கூடிய பின்னடைவுகள் என கவலைப்படும் அளவுக்குப் பெரிதாக எதுவும் இல்லை என்றே வாகனம் தொடர்பான நிபுணர்கள்.
வேறு சிக்கல்கள் இருக்குமா?
வாகனம் கடனில் வாங்கப்பட்டிருந்தால், வங்கியிடம் இருந்து தடையில்லா சான்றிதழைப் பெற வேண்டியிருக்கலாம். பி.ஹெச். எண் பதிவைப் பொறுத்தவரை வங்கிகளின் கொள்கை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எனினும், வருங்காலத்தில் ஒருவர் பி.ஹெச் எண் வேண்டாம், வழக்கமான பதிவு எண்ணே போதும் என்று நினைத்தால், அதைப் பெறுவதற்கான நடைமுறை நீண்டது மற்றும் சிக்கலானது. மேலும், வரி விகிதங்களும் சிறிது அதிகமாக இருக்கலாம்.
உதாரணத்துக்கு, 10 லட்சம் ரூபாய் விலை கொண்ட வாகனங்களுக்கு 8% வரி என வைத்துக் கொள்வோம். 10-12 லட்சம் விலை கொண்ட வாகனங்களுக்கு 10% வரி. 20 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களுக்கு 12% வரி.
இவை, பெட்ரோல் கார்களுக்கான வரி விகிதங்கள். டீசல் கார்களுக்கு 2% கூடுதலாக வரி விதிக்கப்படும். மின்சார வாகனங்களுக்கு 2% குறைவாக வரி விதிக்கப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு