பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எரின் பேட்டர்சன் என்கிற பெண்மனி தனது உறவினர்களின் உணவில் விஷக் காளான்களை வைத்துக் கொலை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கொலைகள் எவ்வாறு நடந்தன, மருத்துவர்கள் அதை எவ்வாறு கண்டுபிடித்தனர் என்பது குறித்த விரிவான தகவல்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவின் விக்டோரியா மாகாணத்தில் கிராமப்புரத்தில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனையில் கிறிஸ் வெப்ஸ்டர் பணியாற்றி வருகிறார். எரின் பேட்டர்சன் மருத்துவமனைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலே அவர்தான் குற்றவாளி என்பதை உணர்ந்துவிட்டார் மருத்துவர் கிறிஸ்.
அவர்தான் குற்றவாளி என்று தனக்கு நன்கு தெரிந்ததாகக் கூறும் அவர், “நான் சிறிது யோசித்தேன், பிறகு ‘ஆம், இவர்தான் செய்துள்ளார்’ என்ற முடிவுக்கு வந்தேன். அவர் ஒரு கொடூரமான நபர். அனைவருக்கும் விஷம் வைத்தது இவர்தான்” என பிபிசியிடம் தெரிவித்தார்.
அன்றைய தினம் எரின் வேண்டுமென்றே உணவில் விஷம் கலந்து பரிமாறிய நான்கு பேரில் இருவருக்கு, மருத்துவர் கிறிஸ் சிகிச்சை அளித்து வந்தார். எரின் ஜூலை 2023இல் அவரது வீட்டில் மதிய உணவுக்கு வந்தவர்களுக்கு உணவில் விஷக் காளான்களைச் சேர்த்துப் பரிமாறியுள்ளார்.
தனது உறவினர்களான, 70 வயதான டான், கெய்ல் மற்றும் கெய்லின் சகோதரி ஹெதர் வில்கின்சனை எரின் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹெதரின் கணவரும் உள்ளூர் பாதரியாருமான இயன் வில்கின்சனின் கொலை முயற்சி வழக்கிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இயன் பல வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
முதலில் ஹெதர் மற்றும் இயன் தீவிர இரைப்பை குடல் அழற்சி போன்ற அறிகுறிகளுடன் லியோன்கதா மருத்துவமனைக்கு வந்தபோது வெப்ஸ்டர் மற்றும் அவரது குழுவினர் உணவில் பெரிய அளவில் விஷம் கலக்கப்பட்டது தொடர்பான ஒரு வழக்காகவே இதைக் கருதினர்.
பட மூலாதாரம், The Age/Jason South
அன்றைய தினம் எரின் வீட்டில் ஒரு பிரியமான மதிய பொழுதை ஹெதர் விவரித்தார் என வெப்ஸ்டர் வழக்கு விசாரணையின்போது தெரிவித்தார்.
“ஒரு கட்டத்தில் நான் ஹெதரிடம் அவர் சாப்பிட்ட பீஃப் வெலிங்டன் எப்படி இருந்தது எனக் கேட்டதற்கு மிகவும் ரூசியாக இருந்தது எனக் கூறினார்” என மருத்துவர் வெப்ஸ்டர் தெரிவித்தார்.
எனவே பரிமாற்றப்பட்ட இறைச்சியின் மீது அவருக்கு சந்தேகம் விழுந்தது. எனவே அவர் ஹெதருக்கு திரவங்கள் வழங்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கையாக ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுக்காக மேம்பட்ட மருத்துவ வசதிகளைக் கொண்ட நகருக்கு அனுப்பி வைத்தார்.
அங்கிருந்து 90 நிமிட பயண தூரத்தில் டான்டெனாங் மருத்துவமனையில் டான் மற்றும் கெய்லுக்கு சிகிச்சையளித்த மருத்துவரிடம் இருந்து அழைப்பு வந்தபோது இவருக்குத் தூக்கி வாரிப்போட்டது.
இறைச்சியில் பிரச்னை இல்லை, காளானால்தான் பிரச்னை என மருத்துவர் அவரிடம் கூறினார். அவரது நோயாளிகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். அவர் உடனடியாக சிகிச்சைகளை மாற்றி செயலிழந்து வரும் அவர்களின் கல்லீரல்களைக் காபாற்றுவதற்கான சிகிச்சைகளைத் தொடங்கினார். சிறப்பு சிகிச்சை பெறுவதற்காக பெரிய மருத்துவமனைக்கு அவர்களை மாற்றும் வேலைகளைத் தொடங்கினார்.
இந்த நேரத்தில், ஒருவர் மருத்துவமனையின் முன்புறம் உள்ள மணியை அடித்தார்.
தனக்கு இரைப்பை பிரச்னை இருப்பதாகக் கருதுவதாக பெண் ஒருவர் பாதுகாப்பு சாளரத்தின் வழியாக அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
மருத்துவர் கிறிஸ் வெப்ஸ்டர் அந்தப் பெண்ணிடம் அவரது பெயரைக் கேட்டார். அவர் ‘எரின் பேட்டர்சன்’ எனக் கூறியதாக வெப்ஸ்டர் கூறினார்.
“எல்லாம் தெளிவாகிவிட்டது… இவர் தான் சமையல்காரர்.”
அவர் எரினை மருத்துவமனைக்குள் இட்டுச் சென்று, அவரும் அவரது விருந்தினர்கள் அனைவரும் உயிருக்கு அபாயகரமான காளான் விஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிப்பதாகக் கூறினார். அவரது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவில் சேர்க்கப்பட்ட பூஞ்சை எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் அவரிடம் கேள்விகளை எழுப்பினார்.
“அதற்கு வுல்வொர்த்ஸ் என்கிற ஒற்றை வார்த்தைதான் அவரது பதிலாக இருந்தது,” என்கிறார் அவர். “அதைக் கேட்டதும் என் மூளையில் திடீரென எல்லாமே தெளிவானது.”
அந்தத் தருணத்தில் எரினின் குற்றத்தை இரண்டு விஷயங்கள் உறுதி செய்ததாக விளக்குகிறார் மருத்துவர் வெப்ஸ்டர்.
முதலாவது அது மிகைப்படுத்தப்பட்ட பதிலாக இருந்தது. உள்ளூர் மக்கள் பலரும் செய்வதைப் போல காட்டுப் பகுதியில் காளானை சேமித்ததாக அவர் கூறியிருந்தால் மனதுக்குள் எச்சரிக்கை மணி அடித்திருக்காது. ஆனால் கடுமையான உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் பிரபலமான ஒரு மளிகைப்பொருள் அங்காடியில் இருந்து அந்தக் காளான் வந்ததாக அவர் கூறியது சந்தேகத்திற்குரியதாக இருந்தது.
இரண்டாவது காரணம், தான் மிகவும் நேசிக்கும் உறவினர்கள் என அவர் கூறிய இயன் மற்றும் ஹெதர் அவருக்கு சில மீட்டர் தொலைவில் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தபோதும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண் எந்த அக்கறையையும் கவலையையும் காட்டவில்லை.
“அவர்கள் இருக்கிறார்கள் என்பதைக்கூட அவர் கவனித்தாரா எனத் தெரியவில்லை,” என்கிறார் அவர்.
அடிப்படை மருத்துவ சோதனைகள் சிலவற்றைச் செய்வதற்காக எரினை செவிலியர்களிடம் சிறிதுநேரம் விட்டுவிட்டு, வில்கின்சன்களை டேன்டெனாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கச் சென்றார். அந்த முதிய தம்பதி ஆம்புலன்ஸில் ஏற்றப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்ததையும், ஆம்புலன்ஸ் கதவு மூடப்படும் தருணத்தில் ஹெதர் அவரது சிகிச்சைக்காக நன்றி கூறியதையும் அவர் நினைவுகூர்கிறார்.
அவர் சொல்ல வந்த விஷயத்தை முடிக்காமலே மீண்டும் “எனக்குத் தெரிந்துவிட்டது” என்றார்.
“உணர்ச்சிவசப்படாமல் இதைப் பற்றிப் பேசுவது மிகவும் கடினமாக இருக்கிறது. அவர் (ஹெதர்) வெகுசுலபமாக அதற்கு முற்றிலும் நேர்மாறாக நடந்துகொண்டு, ‘எதுவும் செய்யாததற்கு நன்றி’ என கூச்சலிட்டிருக்கலாம்.
அவரது மனதில் இருந்து வந்த நன்றியைவிட அந்தக் கூச்சல் ஏற்றுகொள்ள எளிதானதாக இருந்திருக்கலாம்,” என்கிறார் அவர்.
ஏனெனில், “நான் அவர்களுக்கு காளான் விஷம் வைக்கப்பட்டதை முன்பே கண்டுபிடிக்கவில்லை” என்று வருந்தினார்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால் அவர்களது இறுதி உரையாடலின் தீவிரத்தைச் சிந்திக்க அவருக்கு அப்போது நேரம் இருக்கவில்லை. அவசர சிகிச்சை அறைக்கு வேகமாக விரைந்த அவர், மருத்துவ ஆலோசனையையும் மீறி எரின் தன்னைத் தானே மருத்துவமனையில் இருந்து விடுவித்துக் கொண்டதைத் தெரிந்துகொண்டார்.
அவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்ற பிறகு, திகைப்பும் கவலையும் மேலிட மருத்துவர் வெப்ஸ்டர் காவல் துறைக்கு அழைக்க முடிவு செய்தார்.
“லியோன்கதா மருத்துவமனையில் இருந்து மருத்துவர் கிறிஸ் வெப்ஸ்டர் பேசுகிறேன். முன்னதாக இங்கு வந்துவிட்டு இப்போது மருத்துவமனையை விட்டுச் சென்றுவிட்ட நோயாளி ஒருவரைப் பற்றி எனக்குக் கவலையாக இருக்கிறது. அவர் உயிரை பறிக்கக்கூடிய காளான் விஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அபாயம் உள்ளது,” என வழக்கு விசாரணையின்போது ஓடவிடப்பட்ட தொலைபேசி பதிவில் அவர் சொல்வதைக் கேட்க முடிகிறது.
ஆபரேட்டரிடம் அவர் எரினின் பெயரை எழுத்துக்கூட்டி தெரிவித்துவிட்டு அவரது முகவரியையும் தருகிறார். “அவர் அப்படியே எழுந்து சென்றுவிட்டாரா?” என அவர்கள் கேட்கிறார்கள். “அவர் இங்கு ஐந்து நிமிடங்கள்தான் இருந்தார்,” என மருத்துவர் வெப்ஸ்டர் பதிலளிக்கிறார்.
வழக்கு விசாரணையின்போது, இந்தத் தகவலைக் கேட்டுத் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், தனது விலங்குகளுக்கு உணவு அளிப்பதற்காகவும் தேவையானவற்றை ஒரு பையில் எடுத்துக் கொள்ளவும் வீட்டுக்குச் சென்றதாகவும், மருத்துவமனைக்குத் திரும்புவதற்கு முன்பு சிறிது நேரம் படுத்திருந்ததாகவும் எரின் கூறினார்.
“நீங்கள் உயிரைப் பறிக்கக்கூடிய ஒரு விஷத்தை உட்கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறிய பின்னர், ஒருவர் வாழ்வில் கடைசியாகச் செய்யக்கூடிய விஷயமல்லவா இது?” என அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வைத்து அவரிடம் கேட்டார்.
அதற்கு எரின், “இது நீங்கள் கடைசியாக செய்யக்கூடிய விஷயமாக இருக்கலாம். ஆனால் நான் விஷயத்தை கேட்டதுமே இதைத்தான் செய்தேன்,” என சாட்சிக் கூண்டில் அமர்ந்து துணிச்சலாகப் பதிலளித்தார்.
பட மூலாதாரம், Getty Images
மருத்துவர் வெப்ஸ்டரின் புகார் கிடைத்தவுடன் காவல்துறையினர் அவரது வீட்டிற்கு விரைந்தனர். ஆனால், அவர்கள் தம் வீட்டை அடைவதற்குள் எரின் மருத்துவமனைக்குத் திரும்பிவிட்டார். எஞ்சியிருந்த உணவை தனது குழந்தைகள் உண்டதாக எரின் கூறியிருந்ததால் அவர்களையும் மருதுவமனைக்கு அழைத்து வர அவரைச் சம்மதிக்க வைக்க வெப்ஸ்டர் முயன்றார்.
“அவர்கள் பயப்படுவார்கள் என அவர் கவலைப்பட்டதாக,” வெப்ஸ்டர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். “அவர்கள் அஞ்சியபடி உயிருடன் இருக்கலாம் அல்லது இறந்து போகலாம் என நான் கூறினேன்.”
தான் தயங்கவில்லை என்றும் தன்னைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்ததாகத் தாம் நம்பிய மருத்துவரால் திணறடிக்கப்பட்டதாகவும் எரின் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதோடு, “அவருடைய சராசரி குரலே அப்படித்தான் என்பதை பின்னரே தெரிந்துகொண்டேன்” என்றும் அவர் கூறினார்.
அதன் பின்னர் மருத்துவர் வெப்ஸ்டர் சிறிது நேரத்தில் பணி முடிந்து கிளம்பிவிட்டார். ஆனால் எரின் மற்றும் அவரது குழந்தைகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில் டெத் கேப் விஷத்திற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் முன்னெச்சரிக்கையாக அவர்கள் 24 மணிநேரம் மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்ற தீர்ப்பு அளித்த நிம்மதி
பட மூலாதாரம், Getty Images
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூரிகளின் தீர்ப்பு கடந்த திங்கட்கிழமை (ஜூலை 7) அவரது தொலைபேசியில் தோன்றியபோது, மருத்துவர் வெப்ஸ்டர் நடுங்கத் தொடங்கினார்.
அவர் அரசுத் தரப்பின் முக்கிய சாட்சிகளில் ஒருவர் என்பதால், எதிர்பார்ப்பின் அழுத்தத்துடன் போராடிக்கொண்டிருந்தார்.
“ஜூரிகளுக்கு விஷயம் புரிய வேண்டும். இந்தப் புதிரின் ஒரு துண்டு அதன் இடத்தை விட்டு விலகியிருந்தால்கூட, அது வழக்கின் மொத்த திசையையும் மாற்றியிருக்கும்… விசாரணையின் அழுத்தத்தில் நான் நொறுங்க விரும்பவில்லை.”
தீமையின் உருவம் என அவர் அழைக்கும் எரின் பேட்டர்சனை அவரது செயலுக்குப் பொறுப்பேற்க வைத்ததில் தனது பங்கைச் சரியாகச் செய்ததில் அவரும் ஒரு ‘நிம்மதி’ கிடைத்ததாக அவர் கூறுகிறார்.
“நீதியின் பலன் கிடைத்த உணர்வு கிடைப்பதாக” அவர் தெரிவித்தார்.
இயன் வில்கின்சன் மற்றும் அவரது உடல்நலமற்ற மனைவியை ஆம்புலன்ஸில் அனுப்பிய பிறகு, உயிர் பிழைத்த ஒரே நோயாளியான இயன் விக்லின்சனை உயிரோடு பார்த்த பின்னர்தான் அவருக்கு நிறைவுற்ற உணர்வு கிடைத்தது.
ஹெதர் அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட விதம் பற்றிய நினைவு, இயன் தனது கால்களில் நிற்பதைப் பார்க்கும்போது முடிவுக்கு வந்ததாகக் கூறும் வெப்ஸ்டர் “அது சிறிது ஆறுதல் அளித்தது” எனத் தெரிவித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு