10
* இலங்கை அரசு’ என்ற கட்டமைப்புப் பொறிமுறையின் நீட்சி!
* 2009 இற்கு முன்னரும் பின்னரும் தொடரும் அச்சுறுத்தல்கள்!
* சிவில் செயற்பாட்டாளர்களை மௌனிக்க வைக்கும் உத்தி:
* தமிழர்களையும் முஸ்லிம்களையும் வன்முறையாளர்களாகக் காண்பிக்கும் அரசியல் போக்குகள்!
— — —
இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில், பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரும், இராணுவப் புலனாய்வாளர்களும், பொலிஸாரும் தமிழ்ச் செயற்பாட்டாளர்களைத் தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருகின்றனர்.
கட்சி அரசியல் சார்பற்ற சிவில் மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகள், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட “அரசியல் உரிமைக்கான நியாயம்” எனும் உலகளாவிய ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டவையாக இருந்தபோதிலும், இந்தக் ”கண்காணிப்பு” மற்றும் ”விசாரணை” முறைகள் தொடர்கின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான 17 வருடகால சூழலில், ஈழத்த தமிழர்கள் தங்களின் சுய அடையாளங்களையும் வரலாற்றுத் தடங்களையும் தக்கவைப்பதற்கான படைப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, மரபுரிமை, கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களைப் பேணக்கூடிய, தார்மீக அரசியல் தத்துவார்த்தங்களை சிவில் – ஜனநாயக வழிகளில் நிலை நிறுத்துவதற்கான செயன்முறைகளை முன்னெடுப்பது அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும்.
ஐநா மனித உரிமைகள் சபையின் இலங்கை குறித்த தொடர்ச்சியான அறிக்கைகள் மற்றும் உலகளாவிய மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகளின் பரிந்துரைகளில், வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கப்படும் அமைதியான சிவில் மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகளை இலங்கை இராணுவ மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தடுத்து நிறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ கூடாது என்பது உறுதியாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
கலை இலக்கியப் படைப்புச் சுதந்திரமும், சிவில் உரிமைகளும் ஒரு ஜனநாயக நாட்டின் முதுகெலும்பாகும் என்ற ஐ.நா.வின் இந்தத் தெளிவான நிலைப்பாட்டிற்கு முரணாகவே தற்போதைய கள யதார்த்தம் அமைந்துள்ளது.
இத்தகையதொரு அடக்குமுறைப் பின்னணியிலேயே, ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் துயரங்களையும் அரசியல் நியாயங்களையும் கலை, இலக்கிய மற்றும் பண்பாட்டுப் பரிமாணத்தில் பதிவு செய்த சுயாதீனத் திரைப்படமான ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்பட இயக்குநர் மதிசுதா மற்றும் குழுவினர் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் இயக்குநர், அதில் நடித்த உள்ளூர் தமிழ் நடிகர்கள், இலங்கையின் பயங்கரவாதக் குற்றத் புலனாய்வுத் துறையினரால் தொடர்ச்சியாக விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருவது, தமிழ் சிவில் சமூகத்தினரிடையே பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள், தமிழ் மக்களின் கூட்டுரிமை, கூட்டு நினைவுகூரல் மற்றும் கலை இலக்கிய – படைப்புச் சுதந்திரத்தின் மீதான நேரடி அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த அரசியல் நகர்வுகளில் இருந்து ஒரு வரலாற்று உண்மை மிகத் தெட்டத்தெளிவாகப் புலனாகிறது.
அதாவது, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய மற்றும் ஆட்சி உரிமை சார்ந்த அரசியல் நியாயப்பாடுகளையும், அவர்களின் பூர்வீக மரபுரிமை விவகாரங்களையும், சிங்கள-பௌத்த பேரினவாத மேலாதிக்க (Sinhala-Buddhist Hegemony) கட்டமைப்பிற்குள் மடைமாற்றம் செய்ய வேண்டும் என்ற ஒற்றை இலக்கு, வெறும் தற்காலிக சிங்கள அரசியல் தலைவர்களையோ அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளையோ சார்ந்த விடயம் அல்ல.
மாறாக, “இலங்கையின் ஒற்றையாட்சி அரசு” (Unitary State of Sri Lanka) என்ற நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்பும், அதன் ஆழமான நிறுவன சட்ட-திட்டங்களுமே இதற்கான பிரதான காரண-காரியங்கள் என்பது பட்டவர்த்தனமாகிறது.
ஏனெனில், “சோசலிசம்”, “முறைமை மாற்றம்” என்ற முற்போக்கு முழக்கங்களுடன், இலங்கைத்தீவின் பாரம்பரிய தேசிய இருகட்சி கட்சி அரசியல் முறைமையை வீழ்த்திவிட்டு, 2024 ஆம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் புதியதொரு அரசியல் சக்தியாக ஆட்சிப் பீடமேறிய ஜே.வி.பி அரசாங்கத்தின் கீழ் கூட, 2009 போர்க்கால மற்றும் அதற்குப் பின்னரான அதே அடக்குமுறைச் சூழல் தற்போதும் தொடர்கிறது.
இத் தொடர்ச்சியானது, இது குறிப்பிட்ட ஒரு அரசாங்கத்தின் கொள்கை அல்ல, மாறாக “இலங்கை அரசு” (The Sri Lankan State) என்ற அந்த ஆழமான அரசமைப்புக் கட்டமைப்பின் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரல் (State Agenda) என்பதை பகிரங்கப்படுத்துகிறது.
இதன் பின்னணியில் உள்ள அரசியல் -மூலோபாயம் (Geopolitical Strategy) மிக நுட்பமானது. ஈழத்தமிழர்கள் தங்களின் கூட்டுரிமை, கூட்டு நினைவுகூரல் உரிமை (Right to Collective Memory), அரசியல் அடையாளங்கள் மற்றும் மரபுரிமை நிறுவுதல் போன்ற எந்தவொரு தார்மீக சிவில் – ஜனநாயக செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
தமிழ் மக்களை அரசியல் உணர்வற்ற, வெறும் நுகர்வு மற்றும் பொழுதுபோக்குச் சமூகமாக (Passive and apolitical entertainment society) மாத்திரமே தேக்கி வைத்திருக்க வேண்டும் என்ற மையக் கருத்துடனான இராணுவப் பொறிமுறைத் திட்டமிடல் (Deep State Military Apparatus) ஒன்று வடக்கு-கிழக்கில் மிகத் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறது.
இதற்கு ஏதுவாகவே, அவ்வப்போது தேர்தல் அரசியல் மூலம் ஆட்சிக் கட்டிலில் அமரும் சிங்கள அரசியல் அரசாங்கங்கள் தங்களின் கட்டமைப்பு ரீதியான ஒத்துழைப்பை வழங்குகின்றன.
அந்தத் தடையற்ற கூட்டு ஒத்துழைப்பையே தற்போதைய NPP எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தங்களின் தந்திரோபாயக் கட்சி அரசியல் நகர்வுகள் மற்றும் அமைதியான அடக்குமுறைகள் (Subtle Repression) ஊடாகத் தொடர்ந்து வழங்கி வருகின்றது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற தமிழ் மாவட்டங்களில், பொழுதுபோக்கு அம்சங்கள் ஊடாகத் தேசிய சிந்தனையை மடைமாற்றம் செய்யும் திட்டமிட்ட அரசியல் போக்குகள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பல யூரியூபர்ககள் ஊடாக புகுத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய இக்கட்டான பின்னணியிலும், தங்களின் இன உணர்வை வெளிப்படுத்திச் செயற்படும் கலை, இலக்கிய மரபுரிமைப் படைப்பாளர்களையும், ஒரு சில யூரியூபர்களையும் புறந்தள்ளிவிட முடியாது.
ஆகவே, இவ்வாறான குறிப்பிட்ட சிலரையும் கட்டுப்படுத்த முற்படும் அரச பொறிமுறைக் கட்டமைப்புக்கு எதிராக, கட்சி அரசியலைக் கடந்து சிவில் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒருமித்த குரலில் ஜனநாயக வழியில் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்.
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் கொழும்பு சுங்கத் திணைக்களத்தால் தடுக்கப்பட்ட சம்பவத்தையும் இத்தகைய பின்னணியோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
சிவில் சமூகச் செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந் Rajkumar Rajeevkanth போன்றவர்கள், இத்தகைய விவகாரங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்துவதில் முன்னின்று உழைத்து வருகின்றனர்.
ஆகவே, அனைத்து சிவில் அமைப்புகளும் வேறுபாடுகளைக் கடந்து கைகோர்த்து நிற்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இச் சூழல்களின் தொடர்ச்சியாகவே, வவுனியாவைச் சேர்ந்த கலை, இலக்கிய மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான வனிதா சேனாதிராஜா, தங்குமிடம் ஒன்றில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட செய்தி, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இது தற்கொலையாக கூறபட்டாலும், சம்பவத்தின் பின்னணியில் சந்தேகங்கள் இல்லாமலில்லை.
ஆகவே, சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
இதேவேளை, இரத்தினபுரி, பலாங்கொடை, உடகந்த தோட்டப் பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவில் சிலை உடைக்கப்பட்ட சம்பவமும், அதில் தொடர்புடைய பெரும்பான்மையின குழுக்களையும் கைது செய்யப் பொலிஸார் தயக்கம் காட்டி வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதேவேளை, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான நீதித்துறையின் நியாயமான தீர்ப்புகளுக்குப் பின்னரான சூழலில், புதியதொரு கூர்மையான அரசியல் போக்கு உருவாகி வருவதைக் காண முடிகிறது.
இச்சம்பவங்களை முன்னிறுத்தி, தமிழ் – முஸ்லிம் சமூகங்களை வன்முறைக் கலாசாரத்தோடு தொடர்புபடுத்திச் சித்திரிக்க முற்படும் மேலாதிக்க அரசியல் உத்திகள் (Hegemonic Narratives) மீண்டும் மேலெழுந்து வருகின்றன.
ஏனெனில், தாக்குதல்களின் பின்னணியில் இயங்கிய பிரதான சூத்திரதாரிகள், சூழ்நிலைச் சதிகாரர்கள் (Masterminds Behind the Conspiracy) மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த முழுமையான விசாரணைகள் இன்னும் இறுதி நிலையை எட்டவில்லை என்ற பரவலான விமர்சனம் சமூகத்தில் தொடர்கிறது.
இச் சதிப் பின்னணியில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சில தரப்புகள், 2009 போர்க்காலத்திலும் அதற்குப் பின்னரான சூழலிலும், அரச கட்டமைப்பினால் “தேசிய பாதுகாப்பின் காவலர்களாக” அடையாளப்படுத்தப்பட்டு, புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் பலன்களைப் பெற்றுக் கொண்டவர்கள் என்ற வலுவான அரசியல் வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
அரச கட்டமைப்பு மற்றும் அதன் ஆழமான பாதுகாப்புப் பிரிவுகள் (Deep State Apparatus) இத்தகைய உள்விவகாரத் தொடர்புகளையும், நிறுவன ரீதியான குறைபாடுகளையும் பகிரங்கமாக ஒப்புக்கொள்வதையோ அல்லது சுயவிமர்சனம் செய்துகொள்வதையோ பெரும்பாலும் தவிர்த்தே வருகின்றன.
பிற்குறிப்பு
PTA எனப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு ஐநா பலமுறை அழுத்தங்களை விடுத்துள்ள போதிலும், தற்போதைய அநுர அரசாங்கம் கூட அச்சட்டத்தை நடைமுறையில் நீக்கத் தயங்கி மாற்று வடிவங்களில் தக்கவைக்க முற்படும் அரசியல் பின்னணியில், இந்தத் தொடர் விசாரணைகள் மற்றும் கண்காணிப்புகள் குறித்துப் பலத்த சந்தேகங்கள் எழுகின்றன…
அ.நிக்ஸன்-