• Sat. Jul 5th, 2025

24×7 Live News

Apdin News

வேலூர் புரட்சி: சாதி, மதம் கடந்து ஒன்றுபட்ட இந்தியர்கள் ஆங்கிலேயரிடம் தோற்றது ஏன்? ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Jul 5, 2025


வேலூர் புரட்சி 1806

பட மூலாதாரம், கா.அ.மணிக்குமார்

‘சதியின் ஆழத்தையும் எல்லையையும் எவரும் அறிந்திருக்கவில்லை; ஒரு தீக்குழம்பின் மீது நிற்பது போன்ற அனுபவத்தை ஆங்கிலேயர் பெற்றனர்; தொடர்ந்து எத்தகைய ஆபத்துகள் எவ்வளவு விரைவில் வரும் என்பது யாருக்கும் தெரியவில்லை’ என்று வேலூர் கோட்டையை மீண்டும் கைப்பற்றுவதில் பங்கெடுத்த ஒரு இராணுவ அதிகாரி தெரிவித்தார். தென் இந்தியாவில், வேலூர்ப் புரட்சி ஏற்படுத்தியிருந்த பதற்றமும் அச்சமும் ஆங்கிலேயர் மனதிலிருந்து நீங்க வெகுகாலமானது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்ச்சி வெறும் இந்திய வீரர்களின் கிளர்ச்சியாய் மட்டுமே பார்க்கப்படுவது அதன் கூறுகளை முழுமையாக இந்தியர் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்படாததன் விளைவே என்பதைச் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1806-இல் வேலூர் புரட்சியின் பின்னணி

தென் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்த பிறகு ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவன வணிகர்கள் அப்போது நிலவிய திடமற்ற அரசியல் சூழலைப் பயன்படுத்தி தங்களது அரசியல் ஆதிக்க மேலாண்மையை நிலை நிறுத்த முயன்றனர். அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய தென் தமிழக பாளையக்காரர்கள் பூலித் தேவன் (நெற்கட்டும்செவல்: (1755-67), வேலு நாச்சியார் (சிவகெங்கை: 1780-96) வீர பாண்டிய கட்டபொம்மன் (பாஞ்சாலங்குறிச்சி-1790-99), மருது சகோதரர்கள் (சிவகெங்கை-1801) ஆகியோரை தங்களது பிரித்தாளும் சூழ்ச்சியாலும் பீரங்கி பலத்தாலும் வென்றனர்.

ஹைதர் அலிக்குப் பின் ஆங்கிலேயரை தொடர்ந்து எதிர்த்த மைசூர் சுல்தான் திப்புவுடன் இரகசிய தொடர்பு வைத்திருந்ததாக ஆற்காட்டு நவாப் மீது குற்றம் சுமத்தி அவரை அரியணையிலிருந்து அகற்றினர். இதன் விளைவாக செங்கல்பட்டு, சேலம், தஞ்சாவூர் மாவட்டங்களோடு வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. தென் தமிழகப் பகுதிகளில் தங்கள் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு கோட்டைகளை இடித்து படைகளைக் கலைத்து ஆங்கிலேயருக்கு விசுவாசமாயிருந்த பாளையக்காரர்கள், அல்லது அவர்களது வாரிசுகளை சென்னை மாகாண அரசு 1802ஆம் ஆண்டு ஜமீன்தார்களாக பிரகடனம் செய்தது.

By admin