படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மனதார மன்னிப்புக் கோரிய ஜோனா வியட்ரிஸ்க்கட்டுரை தகவல்
எழுதியவர், எல்லா கிப்ளிங்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ஹைராக்ஸ் உடற்பயிற்சிப் போட்டியின் போது, ஆடையில் மலம் கழித்த நிலையிலும் தொடர்ந்துப் போட்டியிட்டதற்காக விமர்சனங்களை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீராங்கனை ஜோசன்னா வீட்ஸிக், இச்சம்பவத்திற்கு பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த உள்ளரங்க உடற்பயிற்சிப் போட்டியின் போது நடந்த இந்த சம்பவத்திற்குத் தனது “மனமார்ந்த மன்னிப்பை” தெரிவித்துள்ள ஜோசன்னா வீட்ஸிக், தான் “வேறு ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்” என்றும், போட்டியிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆடை அழுக்கடைந்த பிறகும் ஜோசன்னா வீட்ஸிக் தொடர்ந்து போட்டியிட்ட காணொளி இணையத்தில் வெளியாகிப் பரவலான சுகாதார கவலைகளை எழுப்பியது. இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தைக் கையாண்ட விதத்திற்காக ‘ஹைராக்ஸ்’ அமைப்பின் இணை நிறுவனரான மோரிட்ஸ் ஃபர்ஸ்டே மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
வியாழக்கிழமை வீட்ஸிக் வெளியிட்ட அறிக்கையில், “எனது நடவடிக்கை என்னையும் தாண்டிப் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அறிவேன். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தன் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து, பெய்ஜிங் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை வீட்ஸிக், தனது வெற்றியைத் துறப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகப் பதிவில் வீட்ஸிக் கூறுகையில், “பெய்ஜிங் போட்டியின் போது நடந்த சம்பவத்திற்காகச் சீன மக்கள், எனது சக போட்டியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஹைராக்ஸ் அமைப்பாளர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு தான் “முழு உடற்தகுதியோடும் ஆரோக்கியத்தோடும்” இருந்ததாகவும், தனக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்க “எந்தக் காரணமும் இருக்கவில்லை” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
“நடந்ததை திரும்பிப் பார்க்கும்போது, போட்டியிலிருந்து வெளியேறாமல் தொடர்ந்த அந்த முடிவிற்காக வருந்துகிறேன். நான் வேறொரு முடிவை எடுத்திருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். போட்டியைத் தொடர நான் எடுத்த முடிவிற்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்; இதனால் ஏற்பட்ட சங்கடங்களுக்கும் இடையூறுகளுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வீட்ஸிக் மேலும் கூறினார்.
அதேவேளையில், தங்களிடம் “தெளிவான உயிரி-கழிவு மேலாண்மை மற்றும் மருத்துவ நடைமுறைகள் அமலில் உள்ளதாக” ஹைராக்ஸ் நிர்வாகம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
“எதிர்பாராத ஒரு சூழல் ஏற்பட்டதால், விதிகளைச் செயல்படுத்துவதிலும் புரிந்துகொள்வதிலும் குழப்பம் நிலவியது” என்றும் அது விளக்கியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குப் போட்டி நடைமுறைகள் மேலும் மேம்படுத்தப்படும்” என்று ஃபர்ஸ்டே உறுதியளித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹைராக்ஸ் 2017-இல் ஜெர்மனியில் தொடங்கப்பட்டது; இது சமீபத்திய ஆண்டுகளில் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வீட்ஸிக்கின் அடையாளம் இணையத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வீராங்கனையை திட்டுபவர்கள் அல்லது மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இனிவரும் எந்தவொரு ஹைராக்ஸ் போட்டியிலும் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும் என்று ஹைராக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் சமூகத்தில் வன்முறை மிரட்டல்களுக்கோ அல்லது ஒரு விளையாட்டு வீரருக்குத் தீங்கு விளைவிக்கத் தூண்டுவதற்கோ எந்த இடமும் இல்லை” என கண்டிப்புடன் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு ‘ஹைராக்ஸ்’ போட்டியிலும், பங்கேற்பாளர்கள் ஒரு கிலோமீட்டர் ஓட்டம், ஸ்லெட் தள்ளுதல், பர்பி ஜம்ப்கள், உள்ளரங்கத்தில் படகோட்டுவது மற்றும் மணல் மூட்டையைச் சுமந்துகொண்டு செய்யும் லஞ்சஸ் உள்ளிட்ட தீவிர உடற்பயிற்சிகளை மாறிமாறிச் செய்யவேண்டும்.
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விளையாட்டு, குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து தற்போது உலகெங்கிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் அறிமுகமானது.
அதேவேளையில், ‘எச்சில் துப்புதல், மூக்கு சிந்துதல், குப்பைகளைப் போடுதல் மற்றும் தண்ணீரை வீணடித்தல்’ போன்ற செயல்களுக்கு தண்டனை அல்லது அபராதம் விதிக்கும் ஹைராக்ஸ், கடந்த வார இறுதியில் பெய்ஜிங்கில் நடந்த போட்டியின் போது அந்த வீராங்கனை தனது ஆடையில் மலம் கழித்த நிலையிலும் போட்டியைக் கண்காணித்த நடுவர்கள் ஏன் தலையிட்டு அவரைத் தடுக்கவில்லை என சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.