• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

“ஹோட்டல் உரிமையாளரை அவமதித்த நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” – காங். எம்.பி ஜோதிமணி | Nirmala Sitharaman to apologize for insulting hotel owner – Congress MP Jothimani

Byadmin

Sep 13, 2024


கரூர்: “அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை அவமதித்ததற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கோவை அன்னபூர்ணா உணவகம் தமிழகத்தின் பிரசித்திபெற்ற உணவகங்களில் ஒன்று. அதன் நிறுவனர் சீனிவாசன் மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும் தன்மையாக முன்வைக்கிறார். ஜிஎஸ்டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் சீனிவாசன் பேசிய வீடியோ வைரலாகிறது. வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்துகொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை.

ஆனால், அதைச் செய்யாமல் அவரை மன்னிப்புக் கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம்; அருவருப்பானதும் கூட. அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்புக் கேட்பதற்கு? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்புக்கு வருந்துகிறேன். பாஜக, பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி.

நீங்கள் பாஜகவுக்கு அள்ளிக் கொடுத்தாலும், அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி, வாய் பொத்தி நிற்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு.அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும். சீனிவாசனுக்கு எனது அன்பும், ஆதரவும்,” என்று ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.



By admin