பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், சயீத் ஜாஃப்ரி
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கடந்த சில வாரங்களாகப் பாரசீக வளைகுடாவில் உள்ள அரபு நாடுகள், எண்ணெய் டேங்கர்களின் நடமாட்டத்தை அதிகரிப்பதன் மூலமும், மாற்றுப் பாதைகளைப் பெருமளவில் பயன்படுத்துவதன் மூலமும் தங்களின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலைக்கு மீட்டமைக்க முடிந்துள்ளது.
அதேவேளையில், அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை காரணமாக இரானின் ஏற்றுமதி மதிப்பு தொடர்ந்து பூஜ்ஜிய நிலையிலேயே நீடிக்கிறது.
சமீபத்திய போர் தொடங்கியதிலிருந்து ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்குவதை இரான் தனது முக்கிய பலமாகக் கொள்ள முயன்ற காலகட்டத்தில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த வியூக முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியில் தடைகளை உருவாக்குவதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான தனது பேர பலத்தை அதிகரிக்க இரான் முயன்றிருந்தது.
இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்பட்டால் பிற நாடுகளின் ஏற்றுமதியும் நிறுத்தப்படும் என்று இரானிய அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கைக்கும், அண்டை நாடுகளின் அதிகரித்த ஏற்றுமதிக்கும் இடையே தற்போதைய சூழ்நிலையில் பெரிய வித்தியாசம் உள்ளது.
அப்படியானால், இந்த மிரட்டலைச் செயல்படுத்தும் திறனை இரான் இழந்துவிட்டதா மற்றும் ஹோர்மூஸ் நீரிணை போக்குவரத்தின் மீது கட்டுப்பாடு பெறுவதில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதா, அல்லது சூழ்நிலை அதைவிட மிகவும் சிக்கலானதா?
ஹோர்மூஸ் நீரிணையில் என்ன மாறியுள்ளது?
கப்பல் கண்காணிப்பு அமைப்பான ‘கேப்ளர்’ (Kpler) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் 1 முதல் 28 வரையிலான காலகட்டத்தில் இப்பகுதியிலிருந்து நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 1.65 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட எரிவாயு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இரான் எண்ணெயைத் தவிர்த்துப் பார்த்தால், இது போருக்கு முந்தைய சராசரி அளவுக்கு இணையாக உள்ளது.
இந்த அளவில் சுமார் 99 லட்சம் பீப்பாய்கள் அல்லது 60 சதவீதப் பகுதி ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் சென்றுள்ளது. இதில் 23 சதவீதம் ஓமன் கடற்கரையிலும், முக்கியமாக புஜைராவிலும் (Fujairah) ஏற்றப்பட்டது, அதே நேரத்தில் 17 சதவீதம் செங்கடல் வழியாக வெளியேறியது.
கேப்ளர் அமைப்பின் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் முற்றுகை மீண்டும் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தில் ஹோர்மூஸ் நீரிணை வழியாக இரானின் எண்ணெய் போக்குவரத்து கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது. போருக்கு முன்பு இரான் நாளொன்றுக்குச் சுமார் 17 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்தது. இதைக் கணக்கில் கொண்டால், செப்டம்பர் மாதத்தில் இப்பகுதியின் ஏற்றுமதி போருக்கு முந்தைய அளவில் சுமார் 91 சதவீதத்தை எட்டியுள்ளது.
செங்கடலுக்குச் செல்லும் சௌதி அரேபியாவின் குழாய்கள் மற்றும் புஜைராவிற்குச் செல்லும் ஐக்கிய அரபு அமீரகத்தின் குழாய் இணைப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியதன் மூலமே இந்த மாற்றத்தின் ஒரு பகுதி சாத்தியமாகியுள்ளது. ஹோர்மூஸ் நீரிணையில் எண்ணெய் டேங்கர்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணையில் போக்குவரத்து அதிகரிக்க அமெரிக்காவின் வான் மற்றும் கடற்படைப் படைகளின் பங்கை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அபாய நிழலில் கடல் கடக்கும் பயணம்
பட மூலாதாரம், Getty Images
ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பை, அமெரிக்காவுடனான போரில் அழுத்தக் கருவியாக ஹோர்மூஸ் நீரிணையை பயன்படுத்தும் இரானின் வியூகத்தின் தோல்வியாகக் கருத முடியுமா?
சர்வதேச நெருக்கடி குழுவின் (International Crisis Group) மூத்த இரான் ஆய்வாளர் ஹமித்ரெசா அசிசி (Hamidreza Azizi), இரானின் அதிகாரத்தின் மீது இந்த புதிய சூழ்நிலை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து மதிப்பிடுகையில், ஹோர்மூஸ் நீரிணையில் பாதுகாப்பின்மையை உருவாக்குவதே தெஹ்ரானின் நோக்கம் என்றார்.
இரான் அதிகாரிகள் எதை “ஸ்மார்ட் கட்டுப்பாடு” (smart control) என்று அழைக்கிறார்களோ, அது போக்குவரத்தைத் தடைசெய்வதற்கும், அபாயத்தை அதிகரிப்பதற்கும், எரிசக்தி விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என்று அவர் பிபிசி பெர்சியனிடம் தெரிவித்தார்.
இந்தக் கோணத்தில் பார்த்தால், தாக்குதல்கள் அல்லது தாக்குதல் மிரட்டல்கள் காரணமாகக் கப்பல் உரிமையாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அபாயங்களை ஏற்கத் தயங்கக்கூடும்; இதன் மூலம் வர்த்தகம் கட்டுப்படுத்தப்படும்.
அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த இரான் ஒவ்வொரு கப்பலையும் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமில்லை. பயணச் செலவுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த நிறுவனங்களின் முடிவுகளும் இரானின் மதிப்பீட்டின் ஒரு பகுதியாகும்.
இதற்கிடையில், ஹோர்மூஸ் நீரிணையில் நிலவும் சூழலை மாற்றுவதில் அமெரிக்காவின் ராணுவ ஆதரவும் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
பாதுகாப்பு நிறுவனமான ‘இஓஎஸ் ரிஸ்க் குரூப்’ (EOS Risk Group) அமைப்பின் மூத்த உளவுத்துறை ஆய்வாளர் மார்ட்டின் கெல்லி, பிபிசி வெரிஃபை தளத்திடம் கூறுகையில், அமெரிக்காவின் ஆதரவானது முதன்மையாக “கப்பல்களுக்கு வான்வழி ஆதரவு” வழங்குவதாகவும், எச்சரிக்கைகளை விடுப்பது மற்றும் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் அல்லது படகுகள் போன்ற அச்சுறுத்தல்களை இடைமறித்து அழிப்பது போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியது என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், ஓமன் கடற்கரைக்கு அருகில் அமெரிக்கா பரிந்துரைக்கும் தெற்குப் பாதையைப் பின்பற்றி, வடக்குப் பாதையைப் பயன்படுத்த இரானின் அனுமதியைக் கோராத கப்பல்கள் இப்போதும் குறிவைக்கப்படுகின்றன.
இந்தச் சூழ்நிலையிலும் கூட, இந்த எண்ணெய் டேங்கர்கள் இரானால் தாக்கப்பட்டது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 21 அன்று உள்வரும் எண்ணெய் டேங்கர் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதாக பிரிட்டன் கடல்சார் வர்த்தகப் பணிகள் மையம் (UKMTO) தெரிவித்துள்ளது. செப்டம்பர் 23 அன்று சரக்குக் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சி என்னவென்றால், தாக்குதல்கள் இரானின் ராணுவத் திறன்கள் மாறாமல் அப்படியே இருப்பதைக் காட்டாவிட்டாலும், கப்பல்கள் தொடர்ந்து அபாயச் சூழலிலேயே இருக்கின்றன என்பதை இது காட்டுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷட்டில் எண்ணெய் டேங்கர்கள்
ஷட்டில் எண்ணெய் டேங்கர்களின் வலைப்பின்னல் தொடங்கப்பட்டதன் மூலம், வளைகுடா துறைமுகங்களுக்கும் ஹோர்மூஸ் நீரிணைக்கும் வெளியே உள்ள சரக்கு மாற்றும் புள்ளிகளுக்கும் இடையேயான பயணம் சாத்தியமாகியுள்ளது. இந்தக் கப்பல்கள் எண்ணெயை மற்ற எண்ணெய் டேங்கர்களுக்கு மாற்றுகின்றன, பின்னர் அவை நுகர்வோர் சந்தைகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்கின்றன.
இந்த வலைப்பின்னலில் குறைந்தது 63 மிகப் பெரிய எண்ணெய் டேங்கர்களை ‘கேப்ளர்’ நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. இவற்றுள் 35 கப்பல்கள் தோராயமாக ஒவ்வொரு 16 நாட்களுக்கு ஒருமுறை வழக்கமான போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. ஆகஸ்ட் மாதத்தில், ஹோர்மூஸ் வழியாகச் சென்ற கச்சா எண்ணெயில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை புஜைராவுக்கு அருகில் கப்பல்களுக்கு இடையே மாற்றப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) பங்களிப்பை விளக்கிய அசிசி, வர்த்தக அபாயங்களில் சிலவற்றை ஏற்றுக்கொள்வதில் அமீரக அரசின் பங்கை வலியுறுத்தினார்.
தற்போதைய அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தபோதிலும், இந்த ஆதரவு தொடர்ந்ததுடன் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஹமித்ரெசா அசிசி கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார முன்னெடுப்புகளும், அமெரிக்காவின் ராணுவ மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளும் இணைந்து ஹோர்மூஸ் நீரிணையில் தடைகளை ஏற்படுத்தும் இரானின் வியூகத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டுள்ளன” என்றார்.
ஆனால், தனித்துவமான சூழ்நிலைகள் மற்றும் இந்தச் சூழ்நிலையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் பல தரப்பினரின் பிரசன்னத்தைக் கருத்தில் கொள்ளும்போது, புதிய முன்னெடுப்புகளால் அனைவருக்குமான தீர்வுகளை வழங்க முடியவில்லை.
இந்தப் பயணச் செலவுகளை யார் செலுத்துவது?
பட மூலாதாரம், AFP via Getty Images
சரக்குகளை மற்ற கப்பல்களுக்கு மாற்றுவது, எண்ணெய் டேங்கர்களை ஏற்பாடு செய்வது மற்றும் ராணுவ ஆதரவை வழங்குவது ஆகியவை பிராந்திய வர்த்தகத்தின் செலவுகளை அதிகரித்துள்ளன. இந்தச் செலவுகளில் ஒரு பகுதியை அரசாங்கங்களும் ஏற்றுமதி நிறுவனங்களும் ஏற்கின்றன.
இந்த முறைகளின் நிலைத்தன்மையை மதிப்பிடுவதற்கு, இந்தச் செலவுகள் போக எவ்வளவு வருமானம் சேமிக்கப்படுகிறது என்பதைக் பார்ப்பதும் முக்கியமாகும்.
ஏற்றுமதியை அதிகரிக்க, வளைகுடாவில் இராக் எண்ணெயை வாங்குபவர்களுக்கு இராக் கணிசமான தள்ளுபடியை வழங்கியுள்ளது. ‘ப்ளூம்பெர்க்’ (Bloomberg) பார்த்த ஆவணங்களின்படி, இராக் அரசின் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனம், அக்டோபர் மாதச் சரக்குகளுக்கு ‘பஸ்ரா மீடியம்’ (Basrah Medium) கச்சா எண்ணெயைச் சந்தை நிலவரத்தை விட 34.5 டாலர் குறைவாகவும், ‘பஸ்ரா ஹெவி’ (Basrah Heavy) எண்ணெயை 37 டாலர் குறைவாகவும் வழங்கியுள்ளது.
கேப்ளர் அமைப்பின் தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் இராக் நாட்டின் ஏற்றுமதி நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 26 லட்சம் பீப்பாய்களை எட்டியுள்ளது. எனவே, இந்தக் கணிசமான தள்ளுபடிகள் அதிகரித்த விற்பனையோடு தொடர்புடையவை என்பதுடன், ஏற்றுமதி அளவைப் பராமரிப்பது என்பது ஒரு பீப்பாய்க்கான வருமானத்தைப் பராமரிப்பதைக் குறிக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன.
ஏற்றுமதியைப் பராமரிக்க ஆகும் செலவு குறித்து அசிசி கூறுகையில், “தள்ளுபடி வடிவில் ஏற்படும் செலவுகள் அல்லது அமீரகத்தின் விஷயத்தில் அபாயங்களைச் சமாளிக்கக் செய்யப்படும் செலவுகள் ஆகியவற்றை நீண்ட காலத்திற்குத் தொடர்வது கடினம். அமெரிக்காவைப் பொறுத்தவரை ராணுவ ஆதரவுக்கான செலவும் ஒரு பிரச்னையாக உள்ளது” என்றார்.
குறிப்பாக ஷட்டில் கப்பல்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், அவை இன்னும் எவ்வளவு காலத்திற்கு இயக்கப்படும் என்ற கேள்வி நிலவுவதையும் மார்ட்டின் கெல்லி வலியுறுத்துகிறார்.
நிதி மற்றும் செயல்பாட்டு அழுத்தங்கள் எந்தக் கட்டத்தில் சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் இந்த ஏற்பாடுகளைத் தொடர்வதைச் கடினமாக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இயல்பு நிலை எப்போது திரும்பும் என்று நாம் கூறலாம்?
எல்என்ஜி (LNG), எல்பிஜி (LPG), பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் நடமாட்டம் போருக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் கணிசமாகக் குறைந்துள்ளதாகக் ‘கேப்ளர்’ நிறுவனத்தின் மதிப்பீடுகள் காட்டுகின்றன.
செப்டம்பர் 28 அன்றுடன் நிறைவடைந்த ஏழாம் நாள் சராசரி நிலவரப்படி, ஹோர்முஸ் நீரிணையிலிருந்து நாளொன்றுக்கு தோராயமாக 1.35 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வெளியேறுவதை ‘கேப்ளர்’ பதிவு செய்துள்ளது. இது போருக்கு முந்தைய நிலைக்கு இணையாகும்.
இதே காலகட்டத்தில், பெட்ரோலியப் பொருட்கள் சுமார் 81 சதவீதம் குறைவாக இருந்தது.
கச்சா எண்ணெய் மற்றும் பிற சரக்குகளின் நிலைகளில் உள்ள இந்த வேறுபாடுகள் ஹோர்மூஸ் பகுதியின் சூழலை மேலும் சிக்கலாக்குகின்றன.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்திருப்பது வளைகுடாவிற்குள் வரும் கப்பல்களின் நிலையைப் பற்றிய முழுமையான சித்திரத்தைத் தரவில்லை.
தற்போதைய சமநிலையை மதிப்பிட்டு, வாஷிங்டன் இன்ஸ்டிடியூட்டின் ஆய்வாளரும் வளைகுடா விவகார நிபுணருமான சைமன் ஹென்டர்சன், பிபிசி பெர்சியனிடம் கூறுகையில்: “அமெரிக்கா தற்போது வளைகுடாவில் மிகப்பெரிய ராணுவப் பலத்தைக் கொண்டுள்ளதுடன், இரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வலுவான நிலையிலும் உள்ளது” என்றார்.
“ஓமனுக்கு அருகில் உள்ள தெற்கு வழித்தடம் வழியாக அது வளைகுடாவிலிருந்து பெரிய அளவில் எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடிந்துள்ளது. எனவே, இரான் பலவீனமான நிலையிலும் அமெரிக்கா வலிமையான நிலையிலும் இருப்பதாக நினைப்பது நியாயமானதே. ஆனால், அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டபடி, இந்த நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.”
கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையிலும், இரானின் ஏற்றுமதி மீது தொடர்ந்து தடைகள் அமலில் உள்ள நிலையிலும், மற்ற நாடுகளுக்குச் செல்லும் ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தும் தனது மிரட்டலைச் செயல்படுத்துவதில் இரான் கடுமையான சவாலை எதிர்கொள்கிறது.
அமெரிக்காவும் பிராந்திய நாடுகளும் பாதுகாப்பின்மைக்கு இடையேயும் ஒரு அளவிலான வர்த்தகத்தைப் பராமரிக்கத் பிடிவாதமாகச் செயல்பட்டு வந்துள்ளன.
இருப்பினும், பெட்ரோலியப் பொருள் ஏற்றுமதிக்கும் போருக்கு முந்தைய நிலைக்குமான இடைவெளியும், இறக்குமதி நிலை குறித்த நிச்சயமற்ற தன்மையும் இந்த முன்னேற்றம் ஹோர்மூஸ் நீரிணையின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளுக்கும் நீட்டிக்கப்படவில்லை என்பதைக் குறிக்கின்றன.
இரானின் அழுத்தக் கருவிகள் பலவீனமடைந்து வருவதாக முடிவுக்கு வர, இந்தப் போக்குவரத்துகள் இன்னும் எவ்வளவு காலம் தொடரும், என்ன விலையில் மற்றும் எத்தகைய ஆதரவுடன் தொடரும் என்பதைப் பொறுத்தே பார்க்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியானது ராணுவ ஆதரவையும் கூடுதல் செலவுகளை ஏற்பதையும் சார்ந்துள்ளது.
இந்தச் செலவுகள் எவ்வளவு காலம் அல்லது எந்த அளவுக்குத் தாக்குப் பிடிக்கப்படும் துல்லியமான மதிப்பீட்டைத் தற்போதுள்ள தரவுகளால் வழங்க முடியாது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்திருப்பது மட்டுமே இரானின் அழுத்தகம் கொடுக்கும் திறன் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப் போதுமானதல்ல.
இந்த அழுத்தத்தின் ஒரு பகுதி, வர்த்தகத்தைத் தொடர மறுபுறம் உள்ள அரசாங்கங்கள் செலுத்திவரும் செலவுகளில் அடங்கியிருக்கலாம். ஆனால், இந்தச் செலவுகள் இறுதியில் அவர்களின் அரசியல் முடிவுகளைப் பாதிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத ஒரு கேள்வியாகவே உள்ளது.
பட மூலாதாரம், Anna Barclay/Getty Images
கச்சா எண்ணெய் விலை இன்னும் ஏன் குறையவில்லை?
கேப்ளர் தரவுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியிருப்பதைக் காட்டினாலும், சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது என்று இதற்கான பொருளல்ல.
முதலாவதாக, இந்த நிலை நீடித்திருக்கும் என்று சந்தை இன்னும் நம்பவில்லை. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் போர் நிறுத்தம் இருந்தபோது, ஏற்றுமதி கிட்டத்தட்ட இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்த வேளையில், ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 70 டாலராகக் குறைந்தது.
ஆனால் இம்முறை, ஏற்றுமதி அளவு ஒரே சீராக இருந்தபோதிலும் விலைகள் அதிகமாகவே உள்ளன; மோதல் மீண்டும் வெடிக்கலாம் மற்றும் விநியோகத்தில் மேலும் தடைகள் ஏற்படலாம் என்ற அபாயத்தை சந்தை இன்னும் தீவிரமாகவே கருதுகிறது என்பதையே இது காட்டுகிறது.
இரண்டாவது காரணம், கையிருப்பு அளவில் ஏற்பட்டுள்ள கடுமையான சரிவு ஆகும். போர் தொடங்கிய பிறகு உலகின் எண்ணெய் கையிருப்பில் இருந்த 500 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது; அதே வேளையில், சீனாவின் கொள்முதலும் மீண்டும் அதிகரித்துள்ளது. இது சந்தையின் ‘பாதுகாப்பு வரம்பை’ குறைத்துள்ளது.
மூன்றாவதாக, டீசல் மற்றும் ஜெட் எரிபொருள் போன்ற பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி இன்னும் இயல்பான அளவை விடக் குறைவாகவே உள்ளது. அதாவது, கச்சா எண்ணெய் ஏற்றுமதி மட்டும் மீண்டும் தொடங்கியதால், ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது என்று அர்த்தமல்ல.
நான்காவதாக, இந்த ஏற்றுமதி நடவடிக்கைகளில் அதிக டேங்கர் கப்பல் கட்டணங்கள், கப்பலுக்குக் கப்பல் சரக்கு மாற்றம், மாற்றுப் பாதைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என கூடுதல் செலவுகளும் சிக்கல்களும் தொடர்ந்து நீடிக்கின்றன.
எனவே, ஹோர்மூஸ் நீரிணை வழியாக டேங்கர் கப்பல்களின் போக்குவரத்து அதிகரிப்பது மட்டும் எண்ணெய் விலையைக் குறைக்கப் போதுமானதாக இருக்காது. விநியோகத் தடைகள், குறைந்து வரும் கையிருப்பு மற்றும் அதிக போக்குவரத்துச் செலவு ஆகியவற்றுடன் தொடர்புடைய அபாயங்களைச் சந்தை இன்னும் கணக்கில் கொண்டே செயல்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு