ஹோர்மூஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்கான பாதை குறித்து ஓமனுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக இரான் தெரிவித்துள்ளது.
“அது இறுதி கட்டத்தில் உள்ளது” என்று குறிப்பிட்ட இரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் கூடுதல் தகவல்கள் எதையும் வழங்கவில்லை.
இருப்பினும், நீரிணை வழியிலான பாதுகாப்பான போக்குவரத்திற்கு ஓமனுடனான ஒப்பந்தம் உத்தரவாதம் அளிக்காது என்று எச்சரித்த பாகாய், இரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையால் சூழல் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இந்த முன்மொழிவு குறித்து அமெரிக்காவும் ஓமனும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
பிப்ரவரியில் இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதில் இருந்து, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் வழக்கமாக கடந்து செல்லும் ஹோர்மூஸ் நீரிணையை இரான் பெருமளவில் முடக்கியுள்ளது.
நீரிணை “மிக விரைவில்” திறக்கப்படாவிட்டால் இரான் “மிகக் கடுமையாகத் தாக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.
இந்த வார இறுதியில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதற்கு வழிவகுக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் முன்னேறியுள்ளதாக மூத்த அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து அவரது கருத்துகள் வந்துள்ளன. இருப்பினும் இரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அவ்வாறு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தொடர்ந்து சொல்லி வருகிறது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, முன்மொழியப்பட்ட பாதை குறித்து வெளியுறவுத் துறை எந்த குறிப்பிட்ட விவரங்களையும் வெளியிடவில்லை
நீரிணையை மீண்டும் திறப்பது இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தர்களுக்கும் இடையிலான விவாதங்களில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்து வருகிறது.
“கப்பல் பாதையின் புவியியல் ஒருங்கிணைப்புகள்” ஓமனுடன் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில், இரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இரானின் அதிகாரப்பூர்வ இர்னா செய்தி முகமையின் கூற்றுப்படி “ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பற்றதாக மாற்றும் காரணிகள் அமெரிக்க தரப்பில் இன்னும் உள்ளன, குறிப்பாக கடற்படை முற்றுகை மற்றும் இரான் மற்றும் அதன் நலன்களுக்கு எதிரான பிற ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கின்றன,” என்று அவர் கூறினார்.
புதிய பாதை தற்காலிகமானது என்றும் இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை திறந்திருக்கலாம் என்றும் இரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி பின்னர் இர்னாவிடம் தெரிவித்தார். அவர் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.
வியாழக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில் உலகளாவிய அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய் 0.3% குறைந்து 79.24 டாலர் (58.84 பவுண்டு) ஆக இருந்ததால் எண்ணெய் விலைகள் சற்று சரிந்தன.
உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவுக்கான முக்கிய பாதையான இதன் வழியிலான கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், மோதலின் போது எரிசக்தி விலைகள் கடுமையாக ஏற்ற இறக்கத்தைக் கண்டன.
போர் தொடங்கியதிலிருந்து, நீரிணை வழியிலான போக்குவரத்து குறைந்துள்ளது. இந்த பாதையை கடக்கும் அனைத்து கப்பல்களும் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று இரான் கூறியதுடன் இந்த உத்தரவைப் புறக்கணித்த கப்பல்களை அது தாக்கியுள்ளது.
நீரிணையைக் கடக்க விரும்பும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கப் போவதாக இரான் விடுத்த அச்சுறுத்தலே இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கிய கருத்து வேறுபாடுகளில் ஒன்றாகும்.
ராய்ட்டர்ஸிடம் பேசிய ஒரு மூத்த இரானிய அதிகாரியின் கூற்றுப்படி, நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களின் சரக்குகளின் மதிப்பில் 5% முதல் 7% வரை கட்டணமாகப் பெற இரான் விரும்புகிறது. ஓமன் சுமார் 3% கட்டணம் குறித்து விவாதித்து வருகிறது. அதே சமயம், அமெரிக்கா எந்தக் கட்டணமும் இருக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது.
முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் ஹோர்மூஸ் நீரிணை வழியாக வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் மீதான கட்டுப்பாட்டை இரானுக்கு வழங்கும் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து கேட்பதற்காக பிபிசி வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொண்டுள்ளது.
ஜூன் மாதத்தில், இரானும் அமெரிக்காவும் சண்டையை நிறுத்துவதையும், ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும், 60 நாட்களுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே பரஸ்பர தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியதால், இந்த ஒப்பந்தம் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளைப் போலவே விரைவாக முறிந்தது.
பிராந்தியத்தில் உள்ள இரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா கடற்படை முற்றுகையை தொடர்ந்து வருகிறது, அதே நேரத்தில் செங்கடலில் உள்ள செளதி அரேபியாவின் துறைமுகங்கள் மீது ஜூலை 20 முதல் இரானின் ஆதரவு பெற்ற ஹூத்திகளால் மற்றொரு முற்றுகையிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28 அன்று இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் பரவலான தாக்குதல்களைத் தொடங்கின, அதற்கு பதிலடியாக இரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க கூட்டணி நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், ஹோர்மூஸ் நீரிணையைத் திறம்பட மூடியது.
இரான் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி எதிர் தரப்பின் முதல் தாக்குதலில் கொல்லப்பட்டார், அவருக்குப் பிறகு அவரது மகன் மொஜ்தபா காமனெயி அவரது பதவிக்கு பொறுப்பேற்றார்.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, ஒரு விளம்பரப் பலகையில் சித்தரிக்கப்பட்டுள்ள இரானிய அதி உயர் தலைவர் ஆயதுல்லா மொஜ்தபா காமனெயி, தனது தந்தையைக் கொன்ற தாக்குதலுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றவில்லை
போரின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில இளைய காமனெயி காயமடைந்தார், அன்றிலிருந்து அவர் பொதுவெளியில் தோன்றவில்லை.
காமனெயியுடனான தொடர்பு “தற்போதைய சூழலில் கடினமாக உள்ளது” என்று இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் புதன்கிழமை தெரிவித்தார்.
அரசு ஊடகங்களின் கூற்றுப்படி “எவ்வாறாயினும், அவரது இருப்பு நமக்கு ஒரு மிகப் பெரிய வலிமையின் ஆதாரமாகும், இதனால் நாம் தொடர முடியும்,” என்று பெசெஷ்கியன் கூறினார்.
கடந்த மாதம் தனது தந்தையின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளாத இளைய காமனெயி, எழுத்துப்பூர்வ அறிக்கைகள் மூலம் தொடர்பு கொண்டு வந்தார். ஆனால் அவரது குறைவான மக்கள் தொடர்பு பிற மூத்த அதிகாரிகளுடனான அவரது உறவுகள் பற்றிய ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
தான் அவருடன் பயனுள்ள சந்திப்புகளை நடத்த முடிந்ததாகவும், “அன்பு மற்றும் மிகவும் சரியான தர்க்கத்தை” எதிர்கொண்டதாகவும் பெசெஷ்கியன் வலியுறுத்தினார்.
“துரதிர்ஷ்டவசமாக, சில தீய எண்ணம் கொண்ட நபர்கள் அவரைப் பற்றி வித்தியாசமாக விவரிக்கவும், அவரைப் பற்றிய வேறுபட்ட பிம்பத்தை வழங்கவும் தற்போதைய சூழ்நிலை அனுமதிக்கிறது,” என்று அவர் கூறினார்.