பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், லாரா கோஸி
- பதவி, பிபிசி செய்திகள்
-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேட்டோ நாடுகள் மூலம் யுக்ரேனுக்கு “உயர் தர ஆயுதங்களை” அனுப்பப் போவதாக அறிவித்துள்ளார்.
50 நாட்களுக்குள் யுக்ரேன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.
“யுக்ரேனால் தனது இலக்குகளை அடைய முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்”என்று வாஷிங்டனில் நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் கூறினார்.
“நேட்டோ வழியாக யுக்ரேனுக்குத் தேவையானவற்றை பெருமளவில் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான செலவை ஐரோப்பிய நாடுகள் ஏற்கும்”என்பதை ருட்டே உறுதிப்படுத்தினார்.
“ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ள யுக்ரேன் எதிர்பார்க்கும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை, ஐரோப்பிய நாடுகள் யுக்ரேனுக்கு அனுப்பும். பின்னர், அந்த நாடுகளுக்கு அமெரிக்கா மாற்று ஆயுதங்களை வழங்கும்” என்று டிரம்ப் தெரிவித்தார்.
யுக்ரேனுக்கு அனுப்பப்படும் ஆயுதங்கள் குறித்து ரூட்டேவோ அல்லது டிரம்போ விரிவாகக் கூறவில்லை, ஆனால் ஒப்பந்தத்தில் “ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள்” அடங்கும் என்று ரூட்டோ கூறினார்.
இருப்பினும் பில்லியன் டாலர் மதிப்புள்ள “உயர்மட்ட ஆயுதங்கள்” யுக்ரேனை வலுப்படுத்த “போர்க்களத்தில் விரைவாக” விநியோகிக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
“நான் இன்று விளாடிமிர் புதினாக இருந்திருந்தால், யுக்ரேன் பற்றிய பேச்சுவார்த்தைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வேன்,” என்று ருட்டே கூறியபோது, டிரம்ப் தலையசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“ரூட்டேவுடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்புடன் பேசினேன். யுக்ரேனை ஆதரிக்கவும், வன்முறையை நிறுத்தி, நீடித்த மற்றும் நியாயமான, அமைதியை நிலைநாட்ட இணைந்து பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்த அவருக்கு நன்றி கூறுகிறேன்” என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
“ரஷ்ய தாக்குதல்களிலிருந்து மக்களுக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு அளிக்கவும், எங்கள் நிலைகளை வலுப்படுத்தவும் தேவையான வழிமுறைகள் மற்றும் தீர்வுகளை அதிபருடன் விவாதித்தோம். அமைதியை அடைய முடிந்தவரை பயனுள்ள முறையில் பணியாற்றத் தயாராக இருக்கிறோம்”என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Reuters
இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?
யுக்ரேனுடன் 50 நாட்களுக்குள் சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யாவின் மீதமுள்ள வர்த்தக பங்காளிகளை குறிவைத்து அமெரிக்கா 100% இரண்டாம் நிலை வரிகளை விதிக்கும் என்று டிரம்ப் கூறினார்.
இதனால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் தங்களது பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பினால், அவற்றுக்கு வரி செலுத்த வேண்டும்.
உதாரணமாக, இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியப் பொருட்களை வாங்கும் அமெரிக்க நிறுவனங்கள், அந்தப் பொருட்கள் அமெரிக்காவை அடையும் போது 100% இறக்குமதி வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்.
இதனால், பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக மாறும். அதனைத் தொடர்ந்து, அமெரிக்க வணிகங்கள் அவற்றை மலிவாக வாங்க, வேறு இடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் விளைவாக இந்தியாவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
அதாவது, ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதே இதன் நோக்கம் . கோட்பாட்டளவில், ரஷ்யாவால் மற்ற நாடுகளுக்கு எண்ணெய் விற்பதன் மூலம் பணம் ஈட்ட முடியாவிட்டால், யுக்ரேன் போருக்கு நிதியளிக்க குறைவான பணம் இருக்கும்.
எண்ணெய் மற்றும் எரிவாயு ரஷ்யாவின் வருவாயில் மூன்றில் ஒரு பங்கையும், ஏற்றுமதியில் 60%க்கு மேலும் பங்களிக்கின்றன. எனவே, 100% வரி விதிப்பு என்பது ரஷ்யாவின் நிதியை கணிசமாகப் பாதிக்கக்கூடும்.
ரஷ்ய பங்குச்சந்தைகளில் உயர்வு
ஆனால், இந்த அறிவிப்புக்குப் பிறகு ரஷ்யாவின் பங்குச் சந்தை குறியீடு கடுமையாக உயர்ந்தது. கடந்த வாரம் ரஷ்யா குறித்து “முக்கிய அறிவிப்பை ” வெளியிடுவதாக டிரம்ப் கூறியிருந்ததால், அவர் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.
வரிகள் மற்றும் நேட்டோ ஆயுத ஒப்பந்தம் பற்றிய விவரங்கள் குறைவாக இருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு முதல் முறையாக யுக்ரேனுக்கு புதிய ராணுவ உபகரணங்களை வழங்குவதாக திங்கட்கிழமையன்று உறுதியளித்தார்.
விளாடிமிர் புதின் மீதான டிரம்பின் விமர்சனங்கள் கடுமையாகி வருவதால், இந்த அறிவிப்பின் தொனி குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
புதின் மீது டிரம்ப் அதிருப்தி
பிப்ரவரி 2022 இல் யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்க ரஷ்யா எடுத்த முடிவிற்கு யுக்ரேனும் சில விஷயங்களில் பொறுப்பேற்க வேண்டும் என்று டிரம்ப் மறைமுகமாகக் குறிப்பிட்டார். இவ்வாறு அவர் கூறுவது இது முதல் முறையல்ல.
ஆனால், மோதலை எளிதில் தீர்க்க முடியும் என ஒரு காலத்தில் நம்பிய அவர், அதை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்னேற்றம் இல்லாததால் விரக்தியடைந்ததாகத் தோன்றியது.
புதினுடனான உறவு குறித்து கேட்கப்பட்ட போது, “இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது பற்றி நாங்கள் நிறையப் பேசுகிறோம்” என்று டிரம்ப் கூறினார். ஆனால், புதினுடனான “நல்ல தொலைபேசி அழைப்புகளைத்” தொடர்ந்து, யுக்ரேன் மீது பேரழிவு தரும் வான்வழித் தாக்குதல்கள் நடப்பதாகவும், அவை தீவிரமாகவும், அதிகரித்து வருவதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.
“நான் அவரை கொலைகாரன் என்று அழைக்க விரும்பவில்லை, ஆனால் அவர் ஒரு கடினமான மனிதர். பல ஆண்டுகளாக அவர் கிளிண்டன், புஷ், ஒபாமா, பைடன் ஆகியோரை ஏமாற்றியுள்ளார். ஆனால், அவர் என்னை ஏமாற்றவில்லை. ஒரு கட்டத்தில் பேச்சு பலனளிக்காது, செயல் தான் தேவை” என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே இரண்டு சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், இதுவரை வேறு எந்த சந்திப்புகளும் திட்டமிடப்படவில்லை. இதற்கு ரஷ்யா யுக்ரேனை குற்றம் சாட்டியுள்ளது.
யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி, தற்போது யுக்ரேனில் அமெரிக்க தூதர் கீத் கெல்லாக்கை சந்தித்து வருகிறார். திங்கட்கிழமை அவர் அந்த “பயனுள்ள சந்திப்பை” பாராட்டி, டிரம்பின் ஆதரவுக்கு “நன்றி” தெரிவித்தார்.
கிரெம்ளின் இந்த அறிவிப்பு குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், மாஸ்கோவிலிருந்து வரும் கருத்துகள் ஓரளவு நிம்மதியைக் குறிப்பதாகத் தோன்றியது.
வரி அறிவிப்பை “ஏமாற்று வேலை” என்று என்று அழைத்த கிரெம்ளின் ஆதரவு நிபுணரும், புதினின் முன்னாள் உதவியாளருமான செர்ஜி மார்கோவ், இது டிரம்ப் “யுக்ரேனில் அமைதியை அடைய முயற்சிப்பதை கைவிட்டுவிட்டார்” என்பதைக் குறிக்கிறது என்றும் கூறினார்.
“இன்று டிரம்ப் யுக்ரேனைப் பற்றி சொன்னதெல்லாம் இதுதான் என்றால், இது பெரிய பேச்சாக இருந்தாலும் அதில் எந்த பயனும் இல்லை,” என்று செனட்டர் கான்ஸ்டான்டின் கோசச்சேவ் கூறினார்
50 நாட்களில், “போர்க்களத்திலும், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் மனநிலையிலும் பல மாற்றங்கள் நிகழலாம்”என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயகக் கட்சி வரவேற்பு
டிரம்பின் முடிவு, போட்டியாளரான ஜனநாயகக் கட்சியினர் உட்பட விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.
“ஐரோப்பிய பங்காளிகளின் முதலீடுகளால், யுக்ரேனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்பும் முடிவு, புதினின் கொடூரத் தாக்குதல்களில் இருந்து எண்ணற்ற யுக்ரேனிய உயிர்களைக் காப்பாற்றும்”என்று சக்திவாய்ந்த செனட் வெளியுறவுக் குழுவின் உயர்மட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜீன் ஷாஹீன் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை, “நல்ல முடிவு, ஆனால் தாமதமானது” என்று குறிப்பிட்ட அவர், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, புதினை சம்மதிக்க வைக்க, அமெரிக்கா யுக்ரேனுக்கு நீண்டகால, நிலையான பாதுகாப்பு உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
யுக்ரேனைச் சேர்ந்த 39 வயதான யுக்ரேனிய பல் மருத்துவர் டெனிஸ் போடில்சுக், டிரம்பை சம்மதிக்க வைத்த ஐரோப்பிய தலைவர்களைப் பாராட்டினார்.
“இறுதியாக ஐரோப்பிய அரசியல்வாதிகள் தங்கள் பொறுமையாலும், நம்பிக்கையாலும் டிரம்பை எங்கள் பக்கம் சற்று நகர்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே அவர் எங்களுக்கு உதவ விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது”என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
கூடுதல் தகவல்: டியர்பைல் ஜோர்டான்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு