• Mon. May 18th, 2026

24×7 Live News

Apdin News

17 வருடங்கள் கடந்தும் போர் குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை – நடிகர் நிழல்கள் ரவி கவலை!

Byadmin

May 18, 2026


யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள அரசின் அடக்குமுறையை எதிர்த்து தமிழ் இனம் 30 ஆண்டுகள் உரிமைக்காக ஆயுதம் தூக்கி போராடியது.

கடந்த 2009 மே 18 அன்று சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் அந்த யுத்தமானது மௌனிக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகின. இந்த யுத்தத்தில் பல போர் குற்றங்கள் இடம்பெற்றன. ஆனால் 17 வருடங்கள் கடந்தும் இதுவரை அதற்கான நீதி கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட இனம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட வண்ணமே உள்ளது. இவை அனைத்தும் முடிவுக்கு வந்தால்தான் முள்ளிவாய்க்கால் மண்ணில் பலியாகிய இலட்சக்கணக்கான உயிர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையும். தயவுசெய்து தமிழ் இனத்தை வாழ விடுங்கள்.

எனது தொப்புள்கொடி உறவுகள் உயிர்களை, உடைமைகளை இழந்து நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஈழத்தமிழ் உறவுகளுக்காக எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்பதை அந்த உறவுகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் எடுத்துக்கூற விரும்புகிறேன். என்றும் ஈழத்தமிழர்களின் நிழலாக இந்த நிழல்கள் ரவி இருப்பார் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

The post 17 வருடங்கள் கடந்தும் போர் குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை – நடிகர் நிழல்கள் ரவி கவலை! appeared first on Vanakkam London.

By admin