சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே தினத்தை முன்னிட்டு, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நலநிதியுதவி வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டும் கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும் 171 நலிந்த தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிதியுதவி அளிக்கும் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் ஜூலை 4-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, 171 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.1.71 கோடி நிதியுதவி வழங்க உள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.