மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள், நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதன்மூலம் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சி நடப்பதாக கூறியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் அனைத்து மாநிலங்களின் நலன்களும் பாதுகாக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கூறிவருகின்றனர்.
மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் திமுகவின் நோக்கம் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஏஎன்ஐ செய்தி முகமை, லைவ் லா ஆகியவற்றின்படி, லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850-ஆக அதிகரிக்க அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு ஏப்ரல் 16ஆம் தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஆனால் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தமிழகத்திலுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து மாநில நலன்கள் பாதிக்கப்படும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது என்ன?
மத்திய அரசு தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்க முயன்றால், தமிழ்நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய போராட்டத்தைச் சந்திக்கும் என்றும், மாநிலமே ஸ்தம்பிக்கும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
”தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், எவ்வித ஆலோசனையுமின்றி அவசரமாக நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர முயல்வது ஜனநாயக விரோதமானது” என்று அவர் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியுள்ளார்.
மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தென்னிந்திய மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதிகளைக் குறைப்பதும், வட மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்குவதும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
”எங்களைத் தடுத்து பார்க்க நினைத்தால், 1950 மற்றும் 60-களில் மொழிப் போராட்டம் கண்ட அதே தி.மு.க-வை இந்தியா மீண்டும் பார்க்கும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
தெலங்கானா முதலமைச்சரின் கருத்து
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் மக்களவைத் தொகுதி மறுவரையறை ஆகிய இரண்டும் வெவ்வேறானவை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் தெளிவாகத் தெரியும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார்.
”பெண்கள் இடஒதுக்கீட்டை ஒரு சாக்காகப் பயன்படுத்தி மக்கள் தொகை அடிப்படையிலான தேசிய அளவிலான மக்களவைத் தொகுதி மறுவரையறையைத் திணிக்க முயல்வது, மிகக் குறுகிய காலத்திற்கு பாஜகவிற்கு உதவக்கூடும். ஆனால், இது தென்னிந்திய மற்றும் சிறிய மாநிலங்களுக்கு அநீதி இழைப்பதாக அமைந்தால், நீண்ட கால அளவில் நமது நாட்டை அது பலவீனப்படுத்தும்” என ரேவந்த் ரெட்டி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
தேசத்தின் பரந்த மற்றும் நீண்ட கால நலனைக் கருத்தில் கொண்டு, மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் வெறும் மக்கள் தொகை விகிதாச்சார மாதிரியைத் தவிர்த்து பிற மாதிரிகளைப் பரிசீலிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
கேரளா, கர்நாடகா மாநில முதலமைச்சர்கள் ஏற்கனவே தொகுதி மறுவரையறைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்,
மறுபுறம் பாரதிய ஜனதாவும் அதன் கூட்டணி கட்சிகளும் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்து தேர்தல் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
”பல ஆண்டுகளாக இடஒதுக்கீடு கோரி வரும் பெண்களின் கோரிக்கை நிறைவேறவிருக்கும் அருமையான தருணம், அதை முதலமைச்சரால் ஜீரணிக்கமுடியவில்லை” என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளை 50% உயர்த்த உள்ளதாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது எனவும் தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கை 39இல் இருந்து 59 வரை உயர வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறியுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறையை வைத்து விஷமப் பிரசாரம் செய்து வருகிறார். மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்து விடக்கூடாது என்பது மட்டும் தான் திமுகவின் எண்ணம்” என தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாக கூறப்படும் மசோதாவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது இன்னமும் வெளிப்படையாக தெரியவில்லை.
இருப்பினும் மசோதாவின் நகலை பார்த்ததாக கூறும் அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் இதை குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”பிரதமர் மற்றும் அமைச்சர்களின் உறுதிமொழிகளுக்கு மாறாக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதுள்ள இடங்களின் விகிதாச்சாரம் பராமரிக்கப்படும் என்பதை உறுதி செய்ய இந்த மசோதாவில் எதுவும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்