படக்குறிப்பு, வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திடமிருந்து பணத்தை எடுக்கும்போது, வழக்கமாக நிலவும் மிக முக்கியமான சிக்கல் அதில் ஏற்படும் காலதாமதம்தான்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), வருங்கால வைப்பு நிதித் தொகையை எடுப்பதற்கான விதிகளில் விரைவில் மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. அதன்படி, ‘இபிஎஃப்ஓ 3.0’ திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்கும்போது, வழக்கமாக நிலவும் மிக முக்கியமான சிக்கல் அதில் ஏற்படும் காலதாமதம்தான்.
இதுவரை நடைமுறையில் இருந்த காகித ஆவணங்கள் சார்ந்த செயல்முறைகள் அதிக நேரத்தை எடுத்து வந்தன. ஆனால், இனி வரும் காலங்களில் பணத்தை எடுப்பது இன்னும் எளிதாக மாறும். யுபிஐ கட்டண நுழைவாயில் மூலம் உங்கள் வருங்கால வைப்பு நிதித் தொகையை நேரடியாக வங்கிக் கணக்குக்கு மாற்றும் வகையில், இபிஎஃப்ஓ சீர்திருத்தங்களைச் செய்ய உள்ளது. இதன் மூலம் காகித ஆவணங்கள் சார்ந்த பணிகள் குறைவதோடு, மிகக் குறைந்த நேரத்தில் பணத்தைப் பெற முடியும்.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இனி யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் உடனடியாகப் பணத்தை எடுக்க முடியும், இது அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.
வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பல உறுப்பினர்களிடையே, “தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? முழுமையாக 100 சதவிகிதத் தொகையை எடுக்க அனுமதி உள்ளதா?” என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இபிஎஃப்ஓ 3.0-ல் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கடந்த ஆண்டிலிருந்தே அரசு பேசி வருகிறது.
இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கடந்த ஆண்டிலிருந்தே அரசு பேசி வருகிறது. முன்னதாக, இந்தத் திட்டம் ஜனவரி 2026-ல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது. அதன்பிறகு, மே மாத இறுதியில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஜூன் மாதத்தில் இது நடைமுறைக்கு வரும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இருப்பினும், இந்த வசதி இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.
இபிஎஃப்ஓ 3.0-ல் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள், பணத்தை எடுக்கும் செயல்முறையை முற்றிலும் காகிதமற்றதாக மாற்றும். இதன் மூலம், கணக்குதாரர்கள் யுபிஐ அல்லது யுபிஐ வசதி கொண்ட ஏடிஎம் மூலமாகத் தங்கள் இபிஎஃப் இருப்பில் 50 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரையிலான தொகையை எடுத்துக்கொள்ள முடியும்.
இதில் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, உங்கள் கணக்கில் எப்போதுமே உங்களின் இபிஎஃப் பங்களிப்பில் 25 சதவிகிதத் தொகையை ‘பஃபர்’ தொகையாக வைத்திருக்க வேண்டும். உங்களின் மொத்த இபிஎஃப் நிதியிலிருந்து 50 முதல் 75 சதவிகிதம் வரையிலான தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இதுதவிர, அவசரத் தேவைகளுக்காகப் பணத்தை எடுக்க, ஏற்கெனவே இருந்த ஒரு லட்சம் ரூபாய் என்ற வரம்புக்குப் பதிலாக, ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான ‘ஆட்டோ செட்டில்மெண்ட்’ வரம்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மருத்துவச் சிகிச்சை, கல்வி, திருமணம் அல்லது வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் போன்ற தேவைகளுக்காக மூன்று நாட்களுக்குள் இந்தத் தொகையை எடுத்துக்கொள்ள முடியும்.
வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுப்பது ஏன் எளிதாகப் போகிறது?
பட மூலாதாரம், Mansukh Mandaviya/X
படக்குறிப்பு, அடுத்த மாதம் முதல் இபிஎஃப்ஓ 3.0 நடைமுறைக்கு வரும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் கணக்கில் உள்ள எவ்வளவு தொகையை வங்கிக் கணக்குக்கு மாற்ற முடியும் என்பதைப் பார்க்க முடியும். இந்தத் தொகையை ‘உமங்’ (Umang) செயலி வழியாகச் சரிபார்க்கலாம்.
அதன் பிறகு, ஒரு கியூஆர் கோடு உருவாக்கப்படும்; அதன் மூலம் இபிஎஃப் தொகையை நேரடியாக வங்கிக் கணக்குக்கு மாற்ற முடியும். வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்ட தொகையை ஏடிஎம் மூலமாக எடுத்துக்கொள்ளலாம்.
முன்பு, வருங்கால வைப்பு நிதித் தொகையை எடுப்பதற்குப் பணிக்காலம் தொடர்பான வெவ்வேறு விதிகள் இருந்தன. சில குறிப்பிட்ட பிரிவினருக்கு ஏழு ஆண்டுகள் வரை பணி அனுபவம் தேவைப்பட்டது. ஆனால் இப்போது, அனைத்துப் பிரிவினருக்கும் இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டு, அது 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
முன்பு, ஊழியரின் பங்களிப்பு மற்றும் அதன் மீதான வட்டித் தொகையை மட்டுமே எடுக்க முடிந்தது. இனிமேல், பணியாளரின் பங்களிப்புடன் கூடுதலாக, நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் அதன் மீதான வட்டித் தொகையையும் எடுக்க முடியும்.
முந்தைய கட்டமைப்பில், வருங்கால வைப்பு நிதித் தொகையை எடுப்பதில் கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் தற்போது, எந்த நேரத்திலும் 75 சதவிகிதம் வரை பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
முன்பு வேலையில்லாத ஒருவர் பகுதியளவு மட்டுமே பணத்தை எடுக்க முடிந்தது, ஆனால் இனி வேலை இழந்தவுடன், உடனடியாக 75 சதவிகிதம் வரை பிஎஃப் இருப்பைத் திரும்பப் பெற முடியும்.
மீதமுள்ள 25 சதவிகிதத் தொகையை, வேலையில்லாத நிலை தொடங்கி 12 மாதங்களுக்குப் பிறகு பெற்றுக்கொள்ளலாம்.
முன்பு, ஓய்வுக்குப் பிறகு மட்டுமே முழுத் தொகையையும் எடுக்க முடிந்தது. ஆனால் புதிய கட்டமைப்பில், 55 வயதுக்குப் பிறகு, உடல் உறுப்புகள் செயலிழத்தல், பணிநீக்கம், விருப்ப ஓய்வு அல்லது நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறுதல் போன்ற சூழல்களில் முழுத் தொகையையும் பெற்றுக்கொள்ள முடியும்.
பழைய முறைக்கும் இபிஎஃப்ஓ 3.0-க்கும் இடையிலான வேறுபாடுகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வருங்கால வைப்பு நிதிப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
இபிஎஃப்ஓ 3.0-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான மிக முக்கியமான காரணமாகக் கூறப்படுவது, கணக்குதாரர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதாகும்.
தற்போதைய நடைமுறையில், வருங்கால வைப்பு நிதித் தொகையைப் பெறுவதற்கு இபிஎஃப்ஓ இணையதளத்திலோ அல்லது அலுவலகத்திலோ கோரிக்கை மனுவைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு, கே.ஒய்.சி சரிபார்ப்பு நடைபெறும். நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். இந்த செயல்முறை முடிவதற்கு குறைந்தது 10 நாட்கள் ஆகின்றன. ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை எடுக்க வேண்டுமெனில், ஆவணங்கள் கையால் சரிபார்க்கப்படும். ஒருவேளை ஆவணங்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால், அந்தச் செயல்முறையில் காலதாமதம் ஏற்படலாம்.
இபிஎஃப்ஓ 3.0 அமலுக்கு வந்த பிறகு, எவ்வளவு தொகையை எடுக்க முடியும் என்ற இருப்பை ‘உமங்’ செயலியில் பார்த்துக் கொள்ளலாம். அதிலிருந்து ஒரு கியூஆர் கோடு உருவாக்கப்பட்டு, யுபிஐ வழியாகப் பணம் பரிமாற்றம் செய்யப்படும். ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான தொகையை உடனடியாகச் செட்டில்மெண்ட் செய்ய முடியும் என்பதால், வங்கிக் கணக்கில் பணம் வந்து சேருவதில் தாமதம் இருக்காது.
இருப்பினும், இதற்கு உங்களது அனைத்து விவரங்களும், அதாவது, பான் எண் மற்றும் வங்கிக் கணக்கு ஆகியவற்றின் கே.ஒய்.சி சரியாகப் புதுப்பிக்கப்பட்டிருப்பது அவசியமாகும்.