பட மூலாதாரம், Getty Images
பிரிம்மிங்ஹாமில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 180 ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்து 244 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக இருக்கிறது.
இந்திய அணித் தரப்பில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் சிங் இருவரும் சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து தரப்பில் ஹேரி ப்ரூக், ஸ்மித் இருவரும் வரலாற்று பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை சரிவில் இருந்து மீட்டு கவுரமான நிலைக்கு இட்டுச் சென்றனர்.
ப்ரூக்-ஸ்மித் வரலாற்று பார்ட்னர்ஷிப்
இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் தடுமாறியது. புதிய பந்தில் சிராஜின் பந்துவீச்சில் ஜோ ரூட் (22), ஸ்டோக்ஸ் (0) இருவரும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்த நிலையில் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் 150 ரன்களுக்குள் முடிந்துவிடும் என கணிக்கப்பட்டது.
ஆனால், 85 ரன்னாக இருந்த போது 6-வது விக்கெட்டுக்கு சேர்ந்த ஸ்மித், ஹேரி ப்ரூக் பார்ட்னர்ஷிப் 303 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எடுத்து வரலாற்று சாதனை புரிந்தனர்.
24 வயதான இளம் பேட்டர் ஜேம் ஸ்மித் 184 (207 பந்துகள்) ரன்களுடன் 4 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேரி ப்ரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரின் வரலாற்றுப் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து அணிக்கு பெரிய உற்சாகத்தை அளித்தது. ஹேரி ப்ரூக் இந்திய அணிக்கு எதிரான தன்னுடைய முதல் சதத்தை அடித்த நிலையில், ஸ்மித் தன்னுடைய முதல் சதத்தை அடித்தார்.
இருவரும் 6வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேர்த்தது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். டெஸ்ட் அரங்கில் 6-வது விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்ட 9-வது ஜோடியாகும்.
பட மூலாதாரம், Getty Images
இன்னொரு கில்கிறிஸ்ட்
அதிலும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஆட்டமிழக்காமல் 184 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். இங்கிலாந்து விக்கெட் கீப்பராக டெஸ்ட் அரங்கில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோரை ஸ்மித் பதிவு செய்தார்.
இதற்கு முன் அலெக்ஸ் ஸ்டூவர்ட் 1997ல் நியூசிலாந்துக்கு எதிராக அடித்த 173 ரன்கள்தான் அதிகபட்சமாக இருந்தது. இதை ஸ்மித் முறியடித்தார். மேலும்,7வது பேட்டராகக் களமிறங்கி இந்திய அணிக்கு எதிராக அடித்த அதிகபட்ச ஸ்கோரையும் ஸ்மித் பதிவு செய்தார்.
24 வயதான ஸ்மித்தின் ஆட்டத்தைப் பார்த்த போது இங்கிலாந்து அணிக்கு 3 ஃபார்மெட்டுக்கும் கிடைத்துவிட்ட அற்புதமான விக்கெட் கீப்பர், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்டுக்கு இணையாக ஒப்பிடலாம் என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.
இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய ஸ்மித் 43 பந்துகளில் அரைசதத்தையும், 80 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்து இங்கிலாந்து வீரர்களில் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த 3 வது பேட்டராக மாறினார்.
பிரசித் கிருஷ்ணா ஓவரை விளாசிய ஸ்மித், ஷார்ட் பந்துகளை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார். ஜடேஜா, வாஷிங்டன் ஓவர்களையும் ஸ்மித் விட்டுவைக்கவில்லை. இருவரின் ஓவர்களிலும் தொடர்ச்சியாக இருமுறை இரு பவுண்டரிகளை ஸ்மித் விளாசினார்.
ஒருபுறம் ஸ்மித் இந்தியப் பந்துவீச்சை வெளுத்து ரன்களைச் சேர்க்க, மறுமுனையில் ஹேரி ப்ரூக் மிகுந்த கட்டுக்கோப்புடன் ஷாட்களை ஆடி 73 பந்துகளில் அரைசதத்தையும், 137 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார்.
முதல் செஷனில் காலை தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 32 ஓவர்களில் 160 ரன்கள் சேர்த்த நிலையில் மதிய உணவு இடைவேளையின்போது 47 ஓவர்களில் 249 ரன்களை வேகமாகச் சேர்த்தனர்.
மாலை தேநீர் இடைவேளையின் போது 355 ரன்களை சேர்த்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் சிறப்பாக ஒத்துழைத்து ஆடியதால், ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரையும் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, சுந்தர், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரைப் பயன்படுத்தியும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.
ஆடுகளமும் அதற்கு ஏற்றபடி தட்டையாக, எந்தவிதமான ஸ்விங்கிற்கும் ஒத்துழைக்காமல் இருந்தது, பந்தும் தேய்ந்துவிட்டதால், இந்திய பந்துவீச்சாளர்களின் முயற்சி வீணானது.
மாலையில் புதிய பந்து எடுத்த பின்புதான் விக்கெட் வீழ்த்தும் முயற்சியில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு வெற்றி கிடைத்தது. சிராஜ், ஆகாஷ் மீண்டும் அழைக்கப்பட்டதற்கு பலனும் கிடைத்தது. ஹேரி ப்ரூக் 158 ரன்னில் ஆகாஷ் பந்துவீச்சில் போல்டாகினார். 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேர்த்து இருவரின் பார்ட்னர்ஷிப் பிரிந்தது.
இந்த பார்ட்னர்ஷிப் பிரிந்த அடுத்த சில ஓவர்களில் இங்கிலாந்து அணியின் கடைசி வரிசை பேட்டர்கள் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
பட மூலாதாரம், Getty Images
பும்ரா இல்லாமலும் சாதித்த சிராஜ், ஆகாஷ்
பும்ரா இல்லாத நிலையில் பந்துவீச்சில் சிராஜ், ஆகாஷ் தீப் என்ன செய்யப் போகிறார்களோ? எவ்வாறு இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தப்போகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு இருவரும் சிறந்த பதிலை அளித்துள்ளனர்.
சிராஜ் 19.3 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 3.58 எக்னாமியுடன் பந்துவீசினார். ஆகாஷ் தீப் 88 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து 4.40 எகானமியுடன் பந்துவீசினார். இருவரின் பந்துவீச்சும் ஓரளவுக்கு கட்டுக்கோப்புடனும், விக்கெட் வீழ்த்தும் நேர்த்தியுடன் இருந்தது சிறப்பாகும்.
“நான் பொறுப்புகளையும், பணிச்சுமையையும் விரும்பக்கூடியவன்” என முகமது சிராஜ் போட்டிக்கு பின் ஜியோஸ்டார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். பும்ராவுடனும், முகமது ஷமியுடனும் பந்துவீசிய சிராஜ் அவர்களிடம் இருந்து ஏராளமான அனுபவங்களை பெற்றுள்ளார்.
பும்ராவுடன் 23 டெஸ்ட்களில் ஆடிய சிராஜ் 33.82 சராசரி வைத்துள்ளார். பும்ரா இல்லாமல் 15 டெஸ்ட்களில் ஆடிய சிராஜ் 25.20 சராசரியாகக் குறைத்துள்ளார். ஷமியுடன் 9 டெஸ்ட் போட்டிகளில் சேர்ந்து பந்துவீசிய சிராஜ் 34.96 சராசரியும், பும்ரா, ஷமியுடன் இணைந்து 6 டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசிய சிராஜ் 33.05 சராசரியும் வைத்துள்ளார்.
பும்ரா இல்லாமல், ஷமி இல்லாமல் சிராஜ் தலைமையில் பந்துவீச்சுஅமைந்தபோது, அவர் 12 போட்டிகளில் 22.27 சராசரி என அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
முகமது சிராஜ் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசக்கூடிய “க்விக் பவுலர்”, அவுட் ஸ்விங் நன்றாக வீசக்கூடியவர். இந்த வாய்ப்பு நேற்று சிராஜுக்கு கிடைத்தபோது அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. புதிய பந்து கிடைத்த போது 2வது நாள் மாலையில் ஒரு விக்கெட்டை சாய்த்த சிராஜ், நேற்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரூட், ஸ்டோக்ஸ் இருவரையும் அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றி தன்னுடைய பந்துவீச்சை நிரூபித்தார்.
அதேபோல ஆகாஷ் தீப் சிங்கும் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவராக இருக்கிறார். ப்ரூக்,ஸ்மித் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறியபோது, புதிய பந்து எடுத்தவுடன், ப்ரூக் விக்கெட்டை ஆகாஷ் சாய்த்தார். ஆகாஷ் தீப் வீசிய அந்த பந்து ஒரு பேட்டரால் விளையாட முடியாத அதிதுல்லியமான பந்தாகும். ப்ரூக் ப்ரண்ட் புட் எடுத்து வைக்க நினைக்கையில் திடீரென இன்ஸ்விங் ஆகி ஆப் ஸ்டெம்பை தட்டிச் சென்றது. இந்த விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்தது.
ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த போது இங்கிலாந்து அணி 387 சேர்த்திருந்தது. ஆனால் அடுத்த 20 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் விரைவாக சிராஜ், ஆகாஷ் வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
பிரசித் கிருஷ்ணா பரிதாபம்
முதல் டெஸ்டிலும் படுமோசமாகப் பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா, 2வது டெஸ்டிலும் அதே நிலை தொடர்கிறது. 2வது டெஸ்டில் 13 ஓவர்கள் வீசிய பிரசித் 73 ரன்களை வாரி வழங்கி ஓவருக்கு 5.53 ரன்ரேட்டில் மோசமாகப் பந்துவீசினார். டெஸ்ட் போட்டியில் ஓவருக்கு 5.50 ரன்கள் வழங்கிய இந்திய அளவில் 2வது மோசமான பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா இருக்கிறார்.
பிரசித் கிருஷ்ணா ஒரு ஓவரில் 3 பந்துகளை சரியான லைன் லென்த்தில் வீசிவிட்டு, அடுத்த 3 பந்துகளை தவறான லெனத்திலும், ஷார்ட் பிட்சாகவும், ஸ்லாட்டிலும் வீசும்போதும் நன்றாக வீசிய3 பந்துகள் வீணாகிறது.
வாஷிங்டன் சுந்தரும், ஜடேஜாவும் நேற்று இரு செஷன்களில் பந்துவீசியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இருவருமே ஓவருக்கு 4 ரன்களுக்கு குறைவில்லாமல் வாரி வழங்கினர். அதனால்தான் இங்கிலாந்தின் இரு பேட்டர்கள் இணைந்து விரைவாக 300 ரன்கள் சேர்க்க முடிந்தது.
ஜெய்ஸ்வால்-ராகுல் வேகம்
முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் வேகமாக ஆட்டத்தைத் தொடங்கி, பவுண்டரிகளாக அடித்து ரன்களைச் சேர்த்தனர்.
டி20 ஆட்டத்தைப் போன்று பவுண்டரிகளாக விளாசியதால், 45 பந்துகளில் விரைவாக 50 ரன்களை இந்திய அணி எட்டியது. ஜெய்ஸ்வால் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்திருந்த போது, டங் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்து வந்த கருண் நாயர்(7), ராகுலுடன்(28) சேர்ந்து ஆடி வருகிறார்.
இந்தியா முன்னிலை
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 89.3 ஓவர்களில் 407 ரன்களுக்கு நேற்று ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 180 ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்து 244 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக இருக்கிறது.
இன்றைய 4வது நாள் ஆட்டம், நாளைய கடைசி நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் இன்று மாலை தேநீர் இடைவேளை வரை இந்திய அணி பேட் செய்து பெரிய இலக்கு நிர்ணயித்து இங்கிலாந்திடம் வழங்கலாம். ஏனென்றால் கடந்த டெஸ்டில் 378 ரன்கள் இலக்கை இங்கிலாந்து பேட்டர்கள் அனாசயமாக அடைந்து வெற்றி பெற்றுவிட்டதால் இந்த டெஸ்டில் அதுவும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி குறைவான இலக்கை நிர்ணயிக்க வாய்ப்பு இல்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு