சமீபத்தில் இப்படி ஒரு பரபரப்பான டெஸ்ட் மேட்சை ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். இந்த தொடரின் பாக்ஸ் ஆஃபிஸ் ஆட்டம் என்றால் அது லார்ட்ஸ் டெஸ்ட்தான் என அடித்து சொல்லலாம். வெற்றிக்காக இரு அணிகளும் எந்தவொரு எல்லைக்கும் செல்ல துணிந்தனர். ஸ்டோக்ஸ் ஆக்ரோசத்துடன் அணியை வழிநடத்தி, வீரர்களை 5 நாள் முழுக்க உத்வேகம் குறையாமல் பார்த்துக்கொண்டார். இரு அணியினரின் வசைபாடல்களும் தோளுரசல்களும் கடந்த கால ஆஸ்திரேலிய அணியை நினைவூட்டின.
இந்தியா இலக்கை நெருங்கி கொண்டிருந்த சமயத்தில், ஸ்லிப் திசையில் நின்றுகொண்டு இங்கிலாந்து வீரர்கள் உதித்த வார்த்தைகள் அனலைக் கிளப்பின. இந்த தொடர் இனி எந்த பாதையில் செல்ல போகிறது என்பதற்கு கட்டியம் கூறும் விதமாக அந்த வார்த்தை மோதல்கள் அமைந்தன.
கில் – ஸ்டோக்ஸ் கேப்டன்சியில் என்ன வித்தியாசம்?
இந்திய அணியின் கேப்டனும் ஆக்ரோசத்தை கையிலெடுத்தது என்பது உண்மைதான். ஆனால். அந்த ஆக்ரோசம் வெற்றுப் பேச்சாக இருந்ததே தவிர, வெற்றியை கொடுக்கவில்லை. இங்கிலாந்து தொடக்க பேட்டர் கிராலி நேரத்தை கடத்தும் விதமாக கையில் அடிபட்டது போல நடித்தது உண்மைதான். ஆனால், கேஎல் ராகுலே ஒத்துக்கொண்ட படி அது காலம்காலமாக கிரிக்கெட்டில் கைகொள்ளும் உத்திகளில் ஒன்றுதான். அதற்காக, கிராலியை முகத்துக்கு நேராக கில் கையை நீட்டி வசைபாடியதை இந்திய வர்ணனையாளர்களே ரசிக்கவில்லை.
அணி தத்தளித்து கொண்டிருக்கும் போது களத்துக்கு வந்த கில், சோம்பலுடன் பேட்டிங் செய்வது போல ஆடி ஆட்டமிழந்த விதம், ஒரு கேப்டனுக்கு அழகல்ல. நான்காம் இடத்தில் விளையாடி, அணியை வழிநடத்துவதாலே தான் கோலியாக மாறிவிட முடியாது என்பதை கில் உணர்ந்துகொண்டு, தனக்கென ஒரு பாணியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இது முழுக்கமுழுக்க பென் ஸ்டோக்ஸின் வெற்றி. ஒரே மூச்சில் 14 ஓவர்களை தொடர்ச்சியாக வீசியது, பந்துவீச்சு மாற்றங்களை உள்ளுணர்வின்படி செய்தது என ஒரு கேப்டனாக தன் 100 சதவீதத்தை களத்தில் கொடுத்தார். குறிப்பாக 4.5 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஆர்ச்சரை சூழலுக்கு ஏற்ப அரவணைத்தும் அதட்டியும் அவருடைய முழுத்திறனை வெளிக்கொணர்ந்த விதம் நம்பமுடியாததாக இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் தன் சக்திக்கு மீறி ஸ்டோக்ஸ் பங்களித்தார். இவ்வளவு அழுத்தத்தை தன் உடல் தாங்குமா, அடுத்த டெஸ்டில் விளையாட முடியுமா, தன் எதிர்காலம் என்னவாகும் என எதையும் யோசிக்காமல், கிரிக்கெட்டுக்கு முழுமையாக தன்னை ஒப்புக்கொடுத்தார். ஸ்டோக்ஸ் போன்ற சுயநலமில்லாத வீரர்கள் கிரிக்கெட்டில் மிகவும் அருகிவிட்டனர்.
இந்திய கேப்டன் கில் இந்த அம்சத்தில்தான் ஆட்டத்தை கோட்டைவிட்டுவிட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் ரூட் வந்தவுடனே பும்ராவை கொண்டு தாக்குதல் தொடுத்திருக்க வேண்டும். ஆனால், பும்ராவின் வேலைப்பளுவை கருத்தில் கொண்டு ஓய்வுகொடுத்தார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரூட், ஸ்டோக்ஸுடன் சேர்ந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். ரூட் மட்டும் இல்லையென்றால், இங்கிலாந்து அணி 192 ரன்களை நிச்சயம் எட்டியிருக்காது.
‘அடிப்படையான விஷயங்களில் செய்த தவறுகளே காரணம்’
இந்திய அணி இந்த டெஸ்டில் தோற்றதற்கு அடிப்படையான விஷயங்களில் செய்த தவறுகளே காரணம். பந்த் இல்லாத நிலையில் ஜுரெல் விக்கெட் கீப்பிங்கில் பைஸ் வகையில் எக்கச்சக்க ரன்களை கோட்டைவிட்டது பாதகமாக முடிந்துவிட்டது. முதல் இன்னிங்ஸில் ராகுல் சதமடிப்பதில் கவனத்தை குவித்து பந்த் ரன் அவுட்டானார்; சதமடித்து நன்றாக செட்டான பின்னர் ராகுல் ஆட்டமிழந்தார். இவை இந்திய அணிக்கு பேரிடியாக அமைந்தன.
லார்ட்ஸ் மைதானத்தில் 193 ரன்கள் என்பது உண்மையில் எட்டக்கூடிய ஒன்றுதான். டாப் ஆர்டரில் இருவர் அரைசதம் அடித்திருந்தாலே, ஆட்டம் இந்தியாவின் கைகளுக்கு எளிதாக வந்திருக்கும். ஆனால், இந்திய பேட்டர்கள், ஸ்கோர் கார்டு மீதான பதற்றத்தில் தங்கள் இயல்புக்கு மாறாக விளையாடி நடையைக்கட்டினர்.
ஜெய்ஸ்வால் தன் கரியரில் விளையாடிய மிக மோசமான புல் ஷாட் இதுவாகத்தான் இருக்கமுடியும். வழக்கமாக அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பவுன்சர்களை ஒன்று ஸ்லிப் திசையில் சீவிவிடுவார், இல்லை அப்பர் கட் விளையாடுவார். ஆனால், நான்காம் நாளில் உடல் எங்கோ இருக்க பந்தை மடக்கி அடிக்க முயன்று டாப் எட்ஜாகி ஆட்டமிழந்ததை பார்த்தோம்.
பட மூலாதாரம், Getty Images
‘இரண்டு புல் ஷாட்களால் ஆட்டம் பறிபோனது’
இந்த டெஸ்டை இந்தியா இழந்ததற்கு இரண்டு புல் ஷாட்கள் தான் காரணம் என சொல்லலாம். ஒன்று ஜெய்ஸ்வால் விளையாடியது; மற்றொன்று பும்ரா விளையாடியது. பும்ராவை நம்மால் குற்றம்சொல்ல முடியாது. சொல்லப்போனால் பும்ரா, சிராஜ் போன்ற டெயில் எண்டர்களிடம் எப்படி நேர் கோட்டில் விளையாட வேண்டும் என டாப் ஆர்டர் பேட்டர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதேசமயம், கில் தலைமையிலான இந்தியா, ஓர் இளம் அணிதான் என்பதை மறந்துவிட கூடாது. கோலி, ரோஹித், அஸ்வின் ஆகியோர் ஓய்வுபெற்ற நிலையில், இந்தியா இங்கிலாந்திடம் தாக்குப்பிடிக்காது என்றே பொதுப்பார்வை இருந்தது. ஆனால், முதல் டெஸ்டில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீண்டுவந்து பர்மிங்காம் டெஸ்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதை குறிப்பிட்டாக வேண்டும்.
அற்புதமாக பாட்னர்ஷிப் கட்டமைத்த ஜடேஜா
ஜடேஜா, இந்த தொடர் முழுக்க தன் பேட்டிங்கின் உச்சத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடுமையாக உழைத்து ஆட்டமிழக்காமல் 61 ரன்களை குவித்து, கடைசி வரை இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியிருந்தால், ஆட்ட நாயகன் விருது ஜடேஜாவுக்குதான் கிடைத்திருக்கும்.
ஜடேஜா சேர்த்த ரன்களை விட இன்னிங்சை அவர் கட்டமைத்த விதம் பிரமாதமாக இருந்தது. கடைசிக்கட்ட வீரர்களுடன் விளையாடுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். அவர்களை, ரொம்பவும் நம்பிவிடக் கூடாது. அதே சமயம், அவர்களை புறக்கணித்து விடவும் கூடாது. முதலில், அந்த டெயில் எண்டர் எப்படி விளையாடுகிறார் என்று சோதிப்பதற்காக, ஒன்றிரண்டு பந்துகளை கொடுத்துப் பார்க்க வேண்டும். அவர் எந்த பந்து வீச்சாளரை எளிதாக சந்திக்கிறார் என்று பார்த்து, அவருடைய ஓவரில் விளையாடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
முப்பது பந்துகளை நன்றாக எதிர்கொண்டு அவர் விளையாடிய பிறகு, அவருக்கு நிறைய பந்துகளை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அவருடன், அவ்வப்போது ஆட்டத்தின் போக்கு பற்றி விவாதிக்க வேண்டும். அது, அவருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தும். ஆனால், அதிகமாகப் பேசி, அவரைப் பதட்டத்தில் தள்ளிவிட்டு விடக்கூடாது.
ஓரளவுக்கு செட்டில் ஆனவுடன், அதீத தன்னம்பிக்கையில் பெரிய ஷாட்களை டெயில் எண்டர்கள் விளையாடத் தொடங்குவார். நேற்று பும்ரா செய்ததைப் போல. உடனடியாக, அவரை கடிந்து கொண்டு அவருடைய இயல்பான எழுச்சியை தடைபோடக் கூடாது. தொடர்ச்சியாக, அபாயகரமான ஷாட்களை விளையாடப் பார்த்தார் என்றால், அவருக்கு ஒரு சில ஓவர்கள் ஸ்ட்ரைக் கொடுக்க கூடாது. அவராகவே, நம் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்வார்.
இந்த முறையில் தான் பும்ரா, சிராஜ் ஆகியோருடன் பார்ட்னர் ஷிப்பை ஜடேஜா கட்டமைத்தார். அடுத்த டெஸ்டில் இந்தியா வென்று தொடரை சமன் செய்வதற்கு ஜடேஜாவின் ஃபார்ம் ரொம்பவும் முக்கியம். இளம் வீரர்கள் அடங்கிய இந்த அணியில் ஜடேஜா கீழ் வரிசை பேட்டிங்கிற்கு ஒரு வழிகாட்டியாக மாறியுள்ளார்.
குல்தீப் யாதவை சேர்க்காமல் விட்டது தொடங்கி நிறைய விமர்சனங்கள் கம்பீர் மீது வைக்கப்பட்டன. ஆனால், இப்போது பார்க்கும் போது சரியான அணியைத் தான் அணி நிர்வாகம் களமிறக்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தோல்வியை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என இந்திய அணி கடைசிவரை போராடிய விதம் நம்பிக்கை அளிக்கிறது. ஜடேஜா, சுந்தர், நிதிஷ் என மூன்று ஆல்ரவுண்டர்களும் ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சம்.
இந்த டெஸ்டில் நிகழ்ந்த தவறுகளை களைந்து அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால் இந்தியா நிச்சயம் அடுத்த டெஸ்டில் மீண்டு எழுந்துவிடும்.