பட மூலாதாரம், Getty Images
லார்ட்ஸ் டெஸ்டில் இரு அணிகளும் மாறி மாறி உள்ளே வெளியே ஆட்டம் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு செசனில் இங்கிலாந்தின் கை ஓங்கினால் அடுத்த செசனில் இந்தியா முன்னுக்கு வருகிறது.
சம பலத்துக்கு சான்று கூறும்விதமாக இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்களும் சமமாக (387) முடிந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 8 முறை இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்களும் சமமாக முடிந்துள்ளன.
8–ல் 1 முறை மட்டுமே கடைசியாக பேட்டிங் செய்த அணி வென்றிருக்கிறது என்பது இந்தியாவுக்கு பாதகமான ஓர் உபரி தகவல்!
அட்டகாசமாக பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் – பந்த்
நீரும் நெருப்பும் ஒன்றாக சேர்ந்து பேட்டிங் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது கேஎல் ராகுல்–பந்த் இருவரின் பார்ட்னர்ஷிப். மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் பந்த்தின் காயமடைந்த விரலை குறிவைத்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் வியூகம் வகுத்தார்.
பந்த்திற்கு எதிராக வழக்கத்துக்கு மாறாக பீல்டர்களை வளையத்துக்குள் நிற்கவைத்து அவர் தாக்குதல் தொடுத்தார். ஆர்ச்சர் வீசிய நாளின் முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகள் விளாசினாலும், பிறகு சூழலை புரிந்துகொண்டு முதல் சில ஓவர்களுக்கு பந்த் பொறுமையை கடைபிடித்தார்.
ஆர்ச்சரின் பந்துவீச்சில் மிகச் சொற்பமான பந்துகளையே பந்த் எதிர்கொண்டார். காயமடைந்த சக வீரருக்காக ஆர்ச்சரின் பெரும்பாலான பந்துகளை ராகுல் சந்திக்க துணிந்தார்.
பட மூலாதாரம், Getty Images
முதல் நாள் ஆட்டத்தில் பும்ராவை எதிர்கொள்ள தயங்கிய ரூட்டுக்கு போப் கை கொடுத்தது நினைவுக்கு வருகிறது. கார்ஸை கொண்டு பந்த் மீது பவுன்சர் தாக்குதல் நடத்தினார் ஸ்டோக்ஸ். அந்த பந்துகளை எதிர்கொள்ளும் போது பந்த் வலியால் அவதிப்பட்டதை பார்க்க முடிந்தது. ஆனால், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் இங்கிலாந்தின் பவுன்சர் வியூகம் ஒருகட்டத்தில் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை.
ஒருபக்கம் பந்த் தன் பாணியில் ஆவேசமாக பவுண்டரியும் சிக்ஸரும் பறக்கவிடும் போது, மறுபுறம் ராகுல் தன் கிளாஸ் என்னவென்பதை காட்டினார்.
இருவருடைய ஆட்டம் முழுவதும் நேரெதிரான டெக்னிக் கொண்டதாக இருந்தது. பந்த், வலியை பொருட்படுத்தாமல் முன்னும் பின்னும் நகர்ந்து பந்துவீச்சாளர்களின் லெங்த்தை குலைத்து ரன் குவித்தார்.
ராகுல் பந்தை நேரம் கொடுத்து உள்ளே வரவழைத்து கடைசி நொடியில் விளையாடி ரன் சேர்த்தார். pull ஷாட் விளையாடும் முறையிலும் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க முடிந்தது. பந்த் தன் முழு பலத்தையும் கொடுத்து பவுன்சர் பந்துகளை பறக்கவிட்ட போது, ராகுல் எவ்வித சிரமமும் இன்றி மேலிருந்து கீழாக சாமர்த்தியமாக (Top to bottom) பந்தை pull செய்தார். சந்தேகமே இல்லாமல் சொல்ல முடியும், இந்த தொடரில் டெக்னிக்கலாக மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ராகுல்தான்.
பட மூலாதாரம், Getty Images
இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்த பென் ஸ்டோக்ஸ்
உணவு இடைவேளைக்கு சில பந்துகள் மட்டும் இருந்த நிலையில் 248 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டும் இழந்து இந்தியா வலுவான நிலையில் இருந்தது. அப்போது ராகுல் 98 ரன்களுடன் எதிர்முனையில் (Non striker end) இருந்தார்.
Lunch–க்கு முன்பாக ராகுலுக்கு சதமடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பஷீர் பந்தில் இல்லாத ரன்னுக்கு அவசரப்பட்டு ஓடி, ஸ்டோக்ஸ் கையால் ரன் அவுட்டானார் பந்த். சதத்தை எட்டுவது என்பது ஒரு வீரருக்கு முக்கியமான ஒன்றுதான். நீண்ட நேர உழைப்பின் ஊதியம் சதம் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அணியின் நலனை கருத்தில் கொள்ளாமல் தனிமனித சாதனைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஏற்பட்ட இழப்பு இந்த விக்கெட்.
பட மூலாதாரம், Getty Images
முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ரூட் 99 ரன்களுடன் இருக்கும் போதும் 1 ரன்னுக்கு அவசரப்படவில்லை என்பது இரு அணியினரின் முன்னுரிமைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறது.
ஃபார்மில் இருக்கிறாரோ இல்லையோ ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரரை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு இந்த ரன் அவுட் ஒரு உதாரணம்.
இரைக்காக சிறுத்தை பதுங்குவதை போல காத்திருந்த அவர், பந்த் ஓடிய அடுத்த நொடியே விக்கெட் என்று மனதில் குறித்துக் கொண்டார் என்பது போல இருந்தது அவருடைய வேகமான த்ரோவும் அதன் பிறகான அவருடைய கொண்டாட்டமும். முழு உடற்தகுதியில் இருக்கிறாரா என்பது விவாதமான நிலையில், 100 பந்துகளுக்கு மேல் பேட்டிங்கின் போது எதிர்கொண்டு, முக்கியமான ரன் அவுட் ஒன்றை செய்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, கூடவே கேப்டன்சியும் செய்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்!
பட மூலாதாரம், Getty Images
கை கொடுத்த ஜடேஜா
சதமடித்து அடுத்த சில பந்துகளில் கவனத்தை தொலைத்து விக்கெட்டை ராகுல் பறிகொடுத்தார். கேஎல் ராகுலுக்கு நிகரான திறமை கொண்ட பேட்ஸ்மேன்கள் இன்று கிரிக்கெட் உலகில் மிகவும் குறைவு. ஆனாலும் முக்கியமான கட்டத்தில் சோம்பலாக விளையாடி விக்கெட்டை இழக்கும் பலவீனம் இருப்பதால்தான் அவருடைய சராசரி 40–க்கும் குறைவாக இருக்கிறது. ஒரு உச்சபட்ச பேட்ஸ்மேன் சதத்தை எட்டிய பிறகு அவ்வளவு எளிதாக விக்கெட்டை பறிகொடுக்கமாட்டார்.
ராகுல் விக்கெட்டுக்கு பிறகு தடுமாறிய இந்திய அணியை ஜடேஜா–நிதிஷ் ரெட்டி இணை தூக்கி நிறுத்தியது. ஒரு டெஸ்ட் போட்டியின் தலையெழுத்தை மூன்றாம் நாள் ஆட்டம்தான் தீர்மானிக்கும் என்பார்கள்.
இருவரில் ஒருவர் விரைவில் ஆட்டம் இழந்திருந்தாலும் இந்தியாவுக்கு பின்னடைவாக முடிந்திருக்கும். ரன்னுக்கு அழைக்கும் போது இருவருக்கும் இடையே சரியான புரிதல் இல்லாதது துலக்கமாக வெளிப்பட்டது. 2,3 முறை ரன் அவுட் வாய்ப்புகளில் இருந்து தப்பினார்கள். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பேட்டிங்கில் அசத்திய நிதிஷ் ரெட்டி, சரியான கால்பாடம் (Footwork) இல்லாவிட்டாலும் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து விளையாடினார். ஸ்டோக்ஸ் வீசிய ஒரு அட்டகாசமான பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பட மூலாதாரம், Getty Images
ஜடேஜாவின் 72 ரன்கள் இந்த ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கு முக்கியமான ரன்கள் எனலாம். ஆனால், ஏனோ இந்த டெஸ்டில் இந்தியா வென்றாலும் ஜடேஜாவின் பங்களிப்பை பற்றி யாரும் பேசப்போவதில்லை. ஸ்டோக்ஸ் எந்தளவுக்கு தன் அணிக்கு பங்களிக்கிறாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இந்தியாவுக்கு ஜடேஜா உதவுகிறார். ஆனால் அவர் பெயர் என்றும் தலைப்பு செய்தியாக மாறுவதில்லை.
ஜடேஜா–சுந்தர் பார்ட்னர்ஷிப்பின் போது, எல்லாருடைய கண்களும் சுந்தர் மீதுதான் இருந்தன. ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான டெக்னிக்கை கொண்டவர் சுந்தர். இந்திய அணி அவருக்கு இன்னும் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.
அதேநேரம், ஜடேஜாவின் பேட்டிங் சோடை போனது என்று சொல்லிவிட முடியாது. வேகப்பந்து வீச்சுக்கு பின்னால் செல்ல வேண்டும்; சுழற்பந்து வீச்சுக்கு முன்னால் நகர வேண்டும் என்பது பேட்டிங்கின் அடிப்படை என்பார்கள். அதை கனக்கச்சிதமாக நேற்று ஜடேஜா செய்ததை பார்க்க முடிந்தது. இப்படி சரியாக செய்வதிலேயே ஒரு மெக்கானிக்கல் தன்மை வந்து, அவருடைய பேட்டிங் வசீகரத்தை இழந்துவிடுகிறதோ என்றுகூட சில சமயம் தோன்றுகிறது.
பட மூலாதாரம், Getty Images
சுவாரசியம் இழந்த ஆட்டம்
கடைசிக் கட்டத்தில் சுந்தர் ஏன் அடித்தாடாமல் விட்டார் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒன்று ரிஸ்க் எடுத்து அடித்தாடி இருக்கலாம். இல்லை, tail ender–களை நம்பி ஸ்டிரைக் கொடுத்து கிடைக்கும் ஒன்றிரண்டு ரன்களை சேர்த்து அணி லீட் எடுக்க உதவியிருக்கலாம்.
கடைசி கட்டத்தில் தெளிவான திட்டத்துடன் அவர் விளையாடியது போல தெரியவில்லை. முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. உயிரைக் கொடுத்து அதிவேகத்தில் பந்துவீசிய போதும் அதிர்ஷ்டம் கைகொடுக்காததால் ஆர்ச்சரால் நேற்று 1 விக்கெட்தான் எடுக்க முடிந்தது.
சுழற்பந்து வீச்சாளர் பஷீர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறியதால் ரூட் சுழற்பந்து வீசவேண்டிய நிலை ஏற்பட்டது. காயம் இடது கையில் (Non bowling arm) என்பதால் நான்காவது இன்னிங்சில் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கலாம்.
நாளின் இறுதியில் இங்கிலாந்தை 2-3 ஓவர்கள் பேட்டிங் செய்ய வைத்துவிட வேண்டும் என்ற இந்தியாவின் வியூகம் பலிக்கவில்லை. பும்ராவின் முதல் ஓவரில் கிராலி தன்னுடைய முழு நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி நேரத்தை இழுத்தடித்து, ஒரு ஓவரோடு ஆட்டம் முடிவடைய செய்துவிட்டார்.
இந்த சேட்டைகள் எல்லாம் கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான் என்றபோதும் இந்திய கேப்டன் கில், கிராலியிடம் தன் சீற்றத்தை வெளிப்படுத்தினார். சமயத்தில் கில்லின் ஆக்ரோஷமான வார்த்தைப் பிரயோகம் கோலியை நினைவூட்டியது. இந்த டிராமா மூன்றாவது நாளின் இறுதியில் இந்த டெஸ்டுக்கு ஒரு விறுவிறுப்பை கொண்டுவந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் சமநிலை பெற்றிருப்பதால் இன்றைய நான்காவது நாள் ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினம் சிறப்பாக செயல்படும் அணியின் கையே இந்த டெஸ்டில் ஓங்கும் என்று கூறலாம்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு