• Sat. Jul 26th, 2025

24×7 Live News

Apdin News

IND vs ENG 4வது டெஸ்ட்: ஜோ ரூட் சச்சின் சாதனையை நெருங்கினார் – இந்தியா தோல்வியை தவிர்க்க முடியுமா?

Byadmin

Jul 26, 2025


ஜோ ரூட்

பட மூலாதாரம், Stu Forster/Getty Images

ஆண்டர்சன்–சச்சின் தொடரில், இந்த டெஸ்டில்தான் இங்கிலாந்து பெரும்பாலான செஷன்களை கைப்பற்றியிருக்கிறது. செஷன்களை அதிகம் கைப்பற்றியும் தொடரில் பின்தங்கியுள்ள இந்திய அணி, தொடரில் முதல்முறையாக பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்றாம் நாளில் பேட்டிங்கிற்கு சாதகமான சீதோஷ்ண நிலை நிலவியதை இங்கிலாந்து அணி பயன்படுத்திக்கொண்டது. இனி, இந்த டெஸ்டை இங்கிலாந்து பறிகொடுப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. அதேபோல இந்தியா வெல்வதற்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த தொடரில் முதல்முறையாக முன்றாம் நாள் முடிவிலேயே ஆட்டம், எந்த திசையில் செல்லப் போகிறது என்பதை யூகிக்க முடிகிறது.

இரண்டாம் நாளை இங்கிலாந்துக்கு தாரைவார்த்த இந்தியா, முன்றாம் நாளிலும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இன்னிங்ஸ் மீண்டும் தொடங்கியவுடன் ரூட்டும் போப்பும் எந்த சிரமமுமின்றி ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். நேற்றும் லைன் அண்ட் லென்த்தில் கோட்டைவிட்ட பும்ரா, கால் பக்கமாக தொடர்ச்சியாக பந்துவீசி அடிவாங்கினார். ஆடுகளம் முழுக்கவும் பேட்டிங்கிற்கு சாதகமாக தட்டையாக மாறியதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

விக்கெட்டுக்கு வாய்ப்பு இருப்பது போல தெரியவில்லை என்றால், குறைந்தபட்சம் ரன் வேகத்தையாவது கட்டுக்குள் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், விக்கெட் கிடைக்காத அதிருப்தியில், விவேகத்தை தொலைத்து கண்டதையும் முயன்று ரன்களை வாரி இறைத்தனர். ரன் ரேட்டை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு முனையில் ஜடேஜாவை விரைவாக கொண்டுவந்திருக்க வேண்டும். ரூட், போப் இருவரும் வலக்கை பேட்ஸ்மேன்கள் என்பதால், அதுவொரு நல்ல உத்தியும் கூட. ஆனால், இந்திய கேப்டன் கில் அதையும் செய்யவில்லை.

பும்ரா

பட மூலாதாரம், Stu Forster/Getty Images

சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதில் கோட்டை விட்ட கில்

சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்பான இந்திய அணியின் அணுகுமுறை இந்த தொடர் முழுக்கவே, மோசமாக உள்ளது. ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ், தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இங்கிலாந்து அணி, 68 ஓவர்கள் விளையாடிய பிறகு, நேற்று வாஷிங்டன் சுந்தர் பந்துவீச அழைக்கப்படுகிறார். இதற்கும் லார்ட்ஸ் டெஸ்டில் அட்டகாசமாக பந்துவீசி, தனது கரியரின் சிறந்த பந்துவீச்சை அவர் பதிவுசெய்திருந்தார்.

By admin