பட மூலாதாரம், Alex Pantling – FIFAFIFA via Getty Images
கட்டுரை தகவல்
எழுதியவர், ஃபில் மெக்நல்டி
பதவி, தலைமை கால்பந்து எழுத்தாளர், நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக வென்றுள்ளது. அர்ஜென்டினாவுக்கு எதிரான பரபரப்பான இறுதிப்போட்டியில் ஃபெர்ரான் டோரஸின் கூடுதல் நேர கோல் அர்ஜென்டினாவின் கனவுகளை தகர்த்தது. ஒரு கட்டத்தில் 10 வீரர்களுடன் ஆட நேரிட்டது அர்ஜென்டினாவுக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது.
ஐரோப்பிய பட்டத்தை வென்ற ஸ்பெயின், இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியன் அந்தஸ்துடன் இருந்த அர்ஜென்டினாவுக்கு எதிராக சிறந்த வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால் அர்ஜென்டினாவோ, பெரும்பாலும் மோசமான தந்திரங்களையே கையாண்டது. ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்வதற்குச் சற்று முன்பு அந்த அணி வீரர் என்சோ ஃபெர்னாண்டஸ் களத்தில் இருநது வெளியேற்றப்பட்டார்.
ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில், மாற்று வீரர் நிக்கோ வில்லியம்ஸ் தலையால் முட்டிய பந்தைப் பெற்ற டோரஸ் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெசுக்கு மிக நெருக்கத்தில் இருந்து சக்தி வாய்ந்த ஷாட் மூலம் கோலடித்து ஸ்பெயினின் நாயகனாக உருவெடுத்தார்.
கோலே இல்லாமல் வெகுநேரம் நீடித்த இந்த ஆட்டம் ரசிகர்களின், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியது. அதே சமயம், ஆட்டத்தின் விறுவிறுப்புக்கு அப்பால், இது ஆரவாரமும் சூப்பர் ஸ்டார்களும் கோலாகலமாகக் கலந்துகொண்ட ஒரு உலகக் கோப்பை நிகழ்வாக இருந்தது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹெலிகாப்டரில் நியூ ஜெர்சிக்கு வந்தார். அதே நேரத்தில், ஷகிரா, மடோனா மற்றும் ஜஸ்டின் பீபர் ஆகியோர் உலகக் கோப்பை இடைவேளை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அது 27 நிமிடங்கள் வரை நீடித்தது.
பல குறுக்கீடுகள் மற்றும் அதைத் தொடர்ந்த அந்த நீண்ட இடைவேளையுடன், ஆட்டம் ஒருபோதும் சீராகவோ அல்லது சரளமாகவோ இருக்கவில்லை. முதல் பாதியில் லமின் யமால் மற்றும் மிக்கேல் ஒயர்சபல் ஆகியோர் கோலை நோக்கி அடித்த பந்துகளை அர்ஜென்டினா கோல்கீப்பர் மார்டினெஸ் தடுத்து நிறுத்தினார்.
பட மூலாதாரம், Carl RecineGetty Images
நடுவர் ஸ்லாவ்கோ வின்சிக்கின் மென்மையான போக்கை ஸ்பெயின் தொடர்ந்து குறை கூறியது. குறிப்பாக டானி ஓல்மோவுக்கு எதிராக முரட்டுத்தனமான ஆட்டத்தை கையாண்ட அலெக்சிஸ் மக் அலிஸ்டர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத போது அது வெளிப்பட்டது. 40 நிமிடங்களுக்குப் பிறகு ஒயர்சபலை கீழே விழச் செய்தமைக்காக ஸ்பெயின் வீரர் லிசாண்ட்ரோ மார்டினெசுக்கு முதல் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிறிது நேரத்திலேயே காயத்துடன் வெளியேறினார்.
கூடுதல் நேரத்தில், ஏற்கெனவே மஞ்சள் அட்டை பெற்றிருந்த பெர்னாண்டஸ், ஸ்பெயின் தற்காப்பு வீரர் பாவ் குபார்சிக்கு எதிராக முரட்டுத்தனத்தை வெளிப்படுத்த இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டி, களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன் பிறகு ஆட்டம் மேலும் சூடுபிடித்தது.
10 வீரர்களுடன் அர்ஜென்டினா ஆட நேரிட, அந்த அணிக்கு கோல்கீப்பர் மார்டினெஸ் நாயகனாகத் திகழ்ந்தார். ஆட்டத்தின் வழக்கமான நேரத்தின் இறுதி விநாடிகளில், லமின் யமாலின் ஃப்ரீ-கிக்கை அற்புதமாகத் தடுத்து, ஸ்பெயின் வெற்றி கோல் அடிப்பதை அவர் தடுத்தார்.
பட மூலாதாரம், Lars BaronGetty Images
வில்லியம்ஸ் தலையால் முட்டி கோலடிக்க மேற்கொண்ட மற்றொரு முயற்சியை சிறப்பாக செயல்பட்டு தடுத்து, அவர் மீண்டும் தன் திறமையைக் காட்டினார். அடுத்தபடியாக நிக்கோலஸ் ஒட்டமெண்டிக்கு எதிராக மாற்று வீரரான மிக்கேல் மெரினோ செய்த ஃபவுலுக்காக வில்லியம்ஸ் அடித்த கோல் நிராகரிக்கப்பட்டது.
நாக்-அவுட் சுற்றுகளில் எகிப்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக பின்தங்கிய நிலையில் இருந்து பின்னர் மீண்டெழுந்து வந்து அர்ஜென்டினா வீழ்த்தியது. ஆனால், இறுதிப்போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக அர்ஜென்டினாவில் அதனை சாதிக்க முடியவில்லை. இதனால், இரண்டாவது முறையாக ஸ்பெயின் அணி ஆடவர் உலகக் கோப்பையை வென்றது.
ஒரே நேரத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் நாடு என்ற பெருமையை அவர்கள் பெறுகிறார்கள்.
பட மூலாதாரம், Michael Regan – FIFAFIFA via Getty Images
ஸ்பெயின் அணியின் ஆட்டம் எப்படி?
ஸ்பெயினின் உலகக் கோப்பை பயணம், கேப் வெர்டேவுக்கு எதிரான கோல் இல்லாத டிராவுடன் தொடங்கி, கால்பந்தின் மிகப்பெரிய பரிசை இரண்டாவது முறையாக வென்ற பெருமையுடன் முடிந்தது.
இந்தப் போட்டித் தொடரில் தங்களை படிப்படியாக வளர்த்துக்கொண்டு, அரையிறுதியில் மிகவும் சாதகமான அணியாகக் கருதப்பட்ட பிரான்ஸை ஸ்பெயின் தோற்கடித்தது. இறுதிப் போட்டியில் சரியான கால்பந்து வழிமுறைகள் மூலம் வெல்ல முயற்சி செய்த ஸ்பெயின் அணிக்கு இது முற்றிலும் தகுதியான வெற்றியாகும்.
ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபியூண்டே, பாராட்டத்தக்க அமைதியுடன் அணியை வழிநடத்தியுள்ளார்; யூரோ 2024 இறுதிப் போட்டியில் பெர்லினில் இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றபோதும் அவரே அணியை வழிநடத்தினார். அர்ஜென்டினாவின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு மத்தியிலும் அவரது அணி அந்த நிதானத்தைக் காட்ட வேண்டியிருந்தது.
பட மூலாதாரம், GettyImages-2286801896
ஃபெர்னாண்டஸ் வெளியேற்றப்பட்ட பிறகு, ஸ்பெயினுக்கு வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்காப்பில் அவர்கள் அரிதாகவே சிரமப்பட வேண்டியிருந்தது. அதேநேரத்தில் மாற்று வீரராக வில்லியம்ஸ் களமிறக்கப்பட்டது ஸ்பெயினுக்கு உண்மையான தாக்குதல் திறனை அளித்தது.
போட்டித்தொடர் முழுவதும் காணப்பட்ட சில விறுவிறுப்பான போட்டிகளுக்கு இந்த இறுதிப் போட்டி ஈடாகவில்லை, ஆனால் உலகக் கோப்பைக்குத் தகுதியான வெற்றியாளர்களே கிடைத்தனர்.
அர்ஜென்டினா அணியின் ஆட்டம் எப்படி?
லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை ஆட்டம் இதுவாக இருந்தால், நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வந்த அர்ஜென்டினா பட்டத்தை இழந்த ஏமாற்றம் அளித்துள்ளது. அர்ஜென்டினாவின் சின்னமான அவரால் ஆட்டத்தின் போக்கை மாற்றியமைக்க முடியாத நிலையிலும் இந்த தொடர் முடிந்துள்ளது.
தற்போது 39 வயதாகும் மெஸ்ஸியின் ஆட்டத்தின் பெரும்பகுதியை மெதுவான நடையில் கழித்தாலும், அவர் இந்த உலகக் கோப்பையில் 8 கோல்களை அடித்துள்ளார். மீண்டும் ஒருமுறை அர்ஜென்டினாவின் தலைவராகவும் உத்வேகமாகவும் திகழ்கிறார், குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி வெற்றியில், 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற இரண்டு கோல்களையும் அவரே உருவாக்கிக் கொடுத்தார்.
பட மூலாதாரம், Kevin C. CoxGetty Images
இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணியால் மெஸ்ஸி நன்கு கட்டுப்படுத்தப்பட்டார்; அவரால் கோலை நோக்கி ஒரே ஒரு ஷாட் மட்டுமே அடிக்க முடிந்தது, அதுவும் இலக்கைத் தவறவிட்டது. மற்றபடி, கோலடிக்க வாய்ப்புள்ள அபாயகரமான பகுதியிலிருந்து அவர் வெகு தொலைவிலேயே ஸ்பெயின் அணியால் கட்டுப்படுத்தப்பட்டார்.
அர்ஜென்டினாவின் அணுகுமுறை மெஸ்ஸிக்கு உதவவில்லை, ஏனெனில் அந்த அணி வீரர்கள் தங்களால் உண்மையில் வெளிப்படுத்தக்கூடிய தரத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஸ்பெயினை விரக்திக்கு உள்ளாக்குவதிலேயே குறியாக இருந்தனர்.
உலகக்கோப்பையைத் தக்கவைப்பதற்கான முயற்சியில் அர்ஜென்டினா இந்த தொடரில் விறுவிறுப்பான ஆட்டங்களை அளித்தது; ஆனாலும், ஸ்பெயினின் வெற்றி பற்றி அர்ஜென்டினாவால் குறை கூற முடியாது.