
-
- எழுதியவர், சோபியா குவாக்லியா
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அடர்த்தியான மற்றும் பளபளப்பான தலைமுடியின் ரகசியம், உங்கள் முடியின் தன்மை முதல் சீப்பின் வடிவமைப்பு வரை எல்லாவற்றிலும் ஒளிந்துள்ளது.
எனது தலைமுடியின் ஸ்டைலை நானே முடிவு செய்யும் அளவுக்கு வளர்ந்த காலம் தொட்டு, எனது முடி முதுகின் கீழ் பகுதி வரை நேராகவே இருந்து வருகிறது. சிறுவயதில், நான் ஒரு நாளைக்கு பலமுறை தலை முடி சீவுவேன்.
தலை முடி சீவும்போதெல்லாம் ஆஸ்திரியாவின் ராணி சிசியைப் பற்றி நினைத்துக் கொள்வேன். அவருடைய நேர்த்தியான பழுப்பு நிற முடி, என்னுடையதைப் போலவே, ஆனால் கணுக்கால் வரை நீளமாக இருந்தது. அவர் ஒவ்வொரு இரவும் 100 முறை தலை முடி சீவுவார் என்று சொல்லப்படுகிறது. வளர்ந்த பிறகுதான், ராணி சிசியின் அந்தக் கதை ஒரு கற்பனை என்று எனக்குத் தெரிந்தது. இதைக் கேட்டு நான் மிகுந்த ஏமாற்றமடைந்தேன்.
இப்போது நான் வளர்ந்துவிட்டதால், குளிக்கும்போது மட்டுமே முடியை நன்கு சீவுகிறேன்.
தலைமுடியை எத்தனை முறை சீவ வேண்டும் என்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல் மிகவும் சிக்கலானது.
விஞ்ஞானிகள் முதல் சிகையலங்கார நிபுணர்கள் வரை அனைவரும் இதற்கான விடையைக் கண்டறிய முயன்று வருகின்றனர். ஆனால், இதற்கான பதில் உங்கள் முடியின் அமைப்பு, நீங்கள் பயன்படுத்தும் சீப்பு மற்றும் உங்கள் அன்றாட வாழ்க்கை முறை போன்ற பல விஷயங்களைப் பொறுத்தது.
எனவே, தலைமுடியை எப்படி சரியாக சீவுவது என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.
சீப்பின் வரலாறு
பட மூலாதாரம், BBC/ Prashanti Aswani
சீப்பு மற்றும் தலை முடி சீவும் பிரஷ்ஷைப் பயன்படுத்தி தலைமுடியைச் சீரமைக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
‘தி ஹேர் ஹிஸ்டோரியன்’ அமைப்பின் நிறுவனர் ரேச்சல் கிப்சன் கூறுகையில், “மனிதர்கள் தங்களுக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு எப்போதும் தூய்மை மற்றும் அலங்காரத்துக்கான கருவிகளை உருவாக்கி வந்துள்ளனர். எனவே, தலை முடி சீவுவது என்பது உலகம் முழுவதும் முக்கியமான ஒன்றாக இருந்துள்ளது” என்று தெரிவித்தார்.
இருப்பினும், அடிக்கடி தலை முடி சீவுவது சில நேரங்களில் முடி சேதமடைவதற்கும், முடி உதிர்வதற்கும் காரணமாக அமையலாம். ஒரு நாளைக்கு நூறு முறை தலை முடி சீவ வேண்டும் என்ற கருத்து, ஒருவேளை இடைக்கால பிரிட்டனிலிருந்து வந்திருக்கலாம்.
அந்தக் காலகட்டத்தில் பெண்களின் தலைமுடி மிகவும் நீளமாக இருந்தது. அக்காலத்தில் தலைமுடி பெண்களின் அடையாளத்தின் முக்கிய அங்கமாகக் கருதப்பட்டது என்று கிப்சன் கூறுகிறார்.
அன்றாட சீரமைப்பு முறையில், பொதுவாக முதலில் சீப்பால் முடியைச் சிக்கெடுத்து, அழுக்கு மற்றும் பேன்களை நீக்குவது வழக்கமாக இருந்தது. அதன்பிறகு, பன்றியின் முடிகளால் செய்யப்பட்ட பிரஷ்ஷைக் கொண்டு முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுவார்கள்.
அந்தக் காலத்தில் வசதியான பெண்கள், தங்கள் உடைகள் கலைந்த முடியால் பாதிக்கப்படாமல் இருக்க, பிரத்யேகமான மேலங்கிகளை அணிந்திருந்தனர் என்று கிப்சன் விளக்குகிறார்.
1898-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்க சிகையலங்கார நிபுணர் லைடா நியூமேன், முதன்முதலாக செயற்கை முடிகளால் ஆன ஹேர் பிரஷ்ஷை உருவாக்கினார்.
இதன்பிறகு, ஹேர் பிரஷ்ஷுகள் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கத் தொடங்கின. இதன் விளைவாக, தலை முடி சீவுவது என்பது பொதுவான ஒன்றாக மாறியது. ஆனால், அதனுடன் சேர்ந்து தவறான தகவல்களும் பரவத் தொடங்கின.
தலை முடி சீவுவதால் கிடைக்கும் அறியப்படாத நன்மைகள்
பட மூலாதாரம், BBC/ Prashanti Aswani
சிகையலங்கார நிலையம் நடத்தி வரும் கோர்ஜைன் கூறுகையில், “மென்மையாகவும் கவனத்துடனும் தலை முடி சீவுவது உங்கள் முடிக்கு எதிரியல்ல. பிரச்சனை தலைமுடி சீவுவதில் இல்லை, நீங்கள் அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதில்தான் உள்ளது” என்றார்.
முறையாகத் தலை முடி சீவுவது, முடிகளில் முடிச்சுகள் விழுவதையும், அவை ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்வதையும் தடுக்கிறது.
உயிர்வேதியியல் நிபுணரான ஜெரெட் ரெனால்ட்ஸ், முடி பராமரிப்பு பிராண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் கூறுகையில், “நீங்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை தலை முடி சீவினால், முடிக்கு ஏற்படும் சேதம் மிகக் குறைவு. ஆனால், வாரக்கணக்கில் காத்திருந்துவிட்டு ஒரேடியாக அழுத்திச் சீவினால், பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்” என்று குறிப்பிடுகிறார்.
இருப்பினும், ஆய்வகத்தில் முடியைப் பரிசோதிப்பதையும், நிஜ வாழ்க்கையையும் ஒப்பிட முடியாது என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
முறையாகத் தலைமுடி சீவுவதன் மூலம், உதிர்ந்த முடிகளும், உச்சந்தலையில் தங்கியுள்ள அழுக்குகளும் நீங்குகின்றன.
தலை முடி சீவும் முறை
பட மூலாதாரம், Alejandra Villa Loraca/Newsday RM via Getty Images
ஆனால், தலை முடி சீவுவதற்கான சிறந்த முறை உங்கள் முடியின் தன்மையைப் பொறுத்தது.
அமெரிக்காவின் மியாமி நகரில் சிகையலங்கார நிலையம் நடத்தி வரும் நிகோலா லிஞ்ச் கூறுகையில், “நேரான அல்லது அலை அலையான கூந்தல் கொண்டவர்கள் வாரத்துக்கு குறைந்தது மூன்று முறையாவது தலை முடி சீவ வேண்டும். தேவைப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட சீவலாம்” என்றார்.
நேரான முடி கொண்டவர்கள் ஈரமான தலைமுடியைச் சீவுவதைத் தவிர்க்க வேண்டும் என்று லிஞ்ச் கூறுகிறார். ஈரமான முடி பார்ப்பதற்கு வலிமையாகவும் அடர்த்தியாகவும் தெரிந்தாலும், உண்மையில் அவை பலவீனமாகவே இருக்கும்.
சுருள் முடி கொண்டவர்களுக்கான அறிவுரை இதற்கு முற்றிலும் மாறானது. அவர்கள் ஒருபோதும் உலர்ந்த தலைமுடியைச் சீவக்கூடாது.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள ஸ்பெல்மேன் கல்லூரியின் பேராசிரியர் மிச்செல் கெய்ன்ஸ் கூறுகையில், “சுருள் முடி கொண்டவர்களின் கூந்தல், அலை அலையான முடி கொண்டவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. நீண்ட காலமாக ஆய்வாளர்கள் இதைத் தவறவிட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், David Turnley/Corbis/VCG via Getty Images
கெய்ன்ஸின் ஆரம்பகட்ட ஆய்வுகள், சுருள் முடியின் இழைகள் சிறியதாகவும், ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக ஒட்டிக்கொண்டும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இவற்றின் முனைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் பொருள், இவை ஈரப்பதத்தை அவ்வளவு எளிதாகத் தக்கவைத்துக்கொள்ளாது, இதனால் முடி எளிதில் சிக்கி உடைய வாய்ப்புள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் ஸ்டைலிங் டிரெண்டுகள் காரணமாக, தலைமுடியைக் கொண்டு அடிக்கடி அளவுக்கு அதிகமாகச் சோதனைகள் செய்யும் அழுத்தம் ஏற்படுகிறது என்று மிச்செல் கெய்ன்ஸ் கூறுகிறார். எனவே, முடியைப் பாதுகாப்பதற்காகச் சிக்கை நீக்கும் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்; இது சீப்பும் பிரஷ்ஷும் முடியில் எளிதாகச் செல்ல உதவும்.
சரியான வகை பிரஷ்ஷைப் பயன்படுத்துவதே மிக முக்கியமானது.
“உங்கள் முடி சுருள் தன்மையுடன் இருந்து, நீங்கள் அதை ஈரப்பதத்துடன் பிரஷ் செய்ய விரும்பினால், மென்மையான மற்றும் வளையும் தன்மை கொண்ட பிரஷ்ஷைப் பயன்படுத்துங்கள்” என்று லிஞ்ச் கூறுகிறார்.
உலர்ந்த முடிக்கு, உச்சந்தலைக்கு ஏற்ற மென்மையான முடிகளைக் கொண்ட பிரஷ்ஷைப் பயன்படுத்துங்கள்; இது முடியில் உள்ள இயற்கை எண்ணெயை நுனி வரை பரவச் செய்யும்.
ரெனால்ட்ஸ் தற்போது ஒரு புதிய ‘ஹைப்ரிட்’ பிரஷ்ஷை உருவாக்கி வருகிறார். இதில் நீண்ட பிளாஸ்டிக் முட்கள் மற்றும் சிறிய பிரஷ் முடிகள் என இரண்டுமே இருக்கும். இதன் மூலம் இரண்டு நன்மைகளும் கிடைக்கும். நீண்ட முட்கள் முடியைச் சிக்கெடுக்கும், அதே சமயம் சிறிய பிரஷ் முடிகள் முடியை மென்மையாக்கி எண்ணெயைச் சீராகப் பரப்பும்.
“இதுதான் மிகச்சிறந்த கலவை” என்று ரெனால்ட்ஸ் கூறுகிறார்.
வரலாற்றில், சீப்புகளும் பிரஷ்ஷுகளும் பல வடிவங்களிலும் அளவுகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன. பண்டைய எகிப்திய கல்லறைகளில் தந்தத்தினால் செய்யப்பட்ட சீப்புகளும், வளைந்த குச்சிகளால் செய்யப்பட்ட சீப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வருங்காலத்தில், தலைமுடி குறித்த புரிதல் மேம்படும்போது, நம் முடியைப் பாதுகாப்பதற்கான முற்றிலும் புதிய வழிகளை நாம் கண்டறியக்கூடும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு