• Tue. Jun 23rd, 2026

24×7 Live News

Apdin News

உள்நாட்டு விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஐரோப்பிய தலைவர்களின் பாராட்டைப் பெற்ற ஸ்டார்மர்!

Byadmin

Jun 23, 2026


உள்நாட்டில் பல்வேறு அரசியல் விமர்சனங்களை இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் எதிர்கொண்டு வந்தாலும், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடையே அவருக்கு கிடைத்துள்ள ஆதரவும் பாராட்டுகளும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்களுடன் ஒப்பிடுகையில், கீர் ஸ்டார்மருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக பல ஐரோப்பிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்ற தனது நிலைப்பாட்டில் ஸ்டார்மர் தொடர்ந்து உறுதியாக இருந்தாலும், பிரெக்சிட் காரணமாக ஏற்பட்ட உறவு இடைவெளிகளை குறைக்கும் முயற்சிகளில் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனியின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயல்படும் ‘E3’ கூட்டணியின் ஒரு முக்கிய உறுப்பினராகவும் ஸ்டார்மர் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு இங்கிலாந்தின் இராணுவ மற்றும் பாதுகாப்பு உதவிகளை தொடர்ந்து வழங்குவதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தனது சமூக ஊடக பதிவில் கீர் ஸ்டார்மரை பாராட்டியுள்ளார்.

அவர் தனது பதிவில், “பல தலைவர்கள் சிறந்த ராஜதந்திரியாக உருவாக பல ஆண்டுகள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், நீங்கள் வெறும் இரண்டு ஆண்டுகளில் அதனைச் சாதித்துக் காட்டியுள்ளீர்கள். உங்களால் ஐரோப்பாவினதும் உக்ரைனினதும் பாதுகாப்பு மேலும் பலமடைந்துள்ளது. நன்றி, அன்பான கீர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியும் கீர் ஸ்டார்மருக்கு தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவு மிகவும் முக்கியமானதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலு,ம் தனது உணர்ச்சிபூர்வமான பதிவில், “எப்போதும் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருந்ததற்கு நன்றி கீர். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்கு வரலாம். உங்களை எப்போதும் வரவேற்கிறோம்” என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், உள்நாட்டு அரசியல் அழுத்தங்கள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், சர்வதேச அரங்கில் கீர் ஸ்டார்மரின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

By admin