• Wed. May 6th, 2026

24×7 Live News

Apdin News

அதிகாரத்தின் பின்னால் ஓடுவது கம்பன் குணம் அல்ல | அ.நிக்ஸன்

Byadmin

May 6, 2026


* அன்று மன்னர்களின் புகழ் பாடுவதை தூக்கி எறிந்த கம்பன்…
* இன்று மன்னர்களுக்கு விருது வழங்கும் கம்பன் கழகம்
* பொன்னாடை, மாலைகளைத் தேடி ஓடும் ஈழத் தமிழ் பேராசிரியர்கள்
— — —
அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பின்னால் ஓடுவது கம்பனின் குணம் அல்ல. மன்னர்களை விட ‘அறம்’ சார்ந்த மக்களே உயர்ந்தவர்கள் என்று கம்பன் வாழ்ந்து காட்டினார்.
அதனால்தான், இன்று பொருத்தம் அற்ற அரசியல் பிரதிநிதிகளுக்கு ‘கம்பன் புகழ்’ விருது வழங்குவதை கம்பன் இருந்திருந்தால், அவரே தடுத்திருப்பார் என்பது ஆர்வலர்கள் பலரின் வாதம், கவலையும் கூட…

கம்பன் சோழ நாட்டை விட்டு வெளியேறி, தனக்கு உண்மையாக மதிப்பளித்த சடையப்ப வள்ளல் போன்றவர்களின் ஆதரவில் வாழ்ந்தார். இதனால் தான், தனது காவியத்தின் பல இடங்களில் மன்னர்களைப் புகழாமல், தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை நன்றியோடு போற்றினார்–

குலோத்துங்கன் என்று அழைக்கப்படும் சோழ மன்னன் கம்பனை தனது அரண்மனைக்கு உட்பட்ட ஒரு சாதாரண அரசவைக் கவிஞராக நடத்தினான்.

ஒருமுறை மன்னன், கம்பனை அழைத்து “நாளைக்குள் இராமாயணத்தை எழுதி முடிக்க வேண்டும்” என கட்டளையிட்டான். ஆனால் கம்பன் கவித்துவ சுதந்திரத்தை விரும்புபவர். அதிகாரத்தின் முன் தனது கலை அடிபணியக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

அக்காலத்தில் மன்னர்கள் தங்களைப் பற்றிப் புகழ்ந்து பாடச் சொல்லி வற்புறுத்துவது வழக்கம்.
ஆனால் கம்பன், “இராமனைப் பாடும் வாயால் ஒரு சாதாரண மனிதனை அதாவது மன்னனை உயர்த்திப் பாட மாட்டேன்” என்பதில் உறுதியாக இருந்தார்.

ஒருமுறை மன்னன், கம்பனை ஏளனம் செய்தபோது, கம்பன் தனது தன்மானத்தை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த மன்னன் “நீ என் நாட்டை விட்டுப் போ” என்று சொன்னபோது, கம்பன் கலங்கவில்லை.

“நீ மட்டும் தான் மன்னனா?” என்று பதில் கேள்வி கேட்டு விட்டு வெளியேறினான். தனக்கு உண்மையான மதிப்பளித்த சடையப்ப வள்ளல் போன்ற நல்லுள்ளம் கொண்டவர்களின் ஆதரவில் வாழ்ந்தார்.

இதனால் தான், தனது காவியத்தில் பல இடங்களில் மன்னர்களைப் புகழாமல், தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை நன்றியோடு போற்றினார் கம்பன்.
இத்தகைய பண்பு கொண்ட – தமிழ் மரபையும் தமிழ் உணர்வையும் காத்த கம்பனுக்குக் கழகம் அமைத்து செயற்படும் கம்பவாருதி ஜெயராஜ், கம்பன் கழகப் பெயரில் ஜனாதிபதி அநுரவுக்கு விருது வழங்கியதை என்னென்று சொல்ல?

ஜெயராஜ், 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறியது உண்மைதான்.

ஆனால், அவர் விடுதலைப் புலிகளால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரா அல்லது அப்போதைய போர்ச் சூழலால் இடம்பெயர்ந்தாரா என்பதில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.
சரி, அப்படித்தான் விடுதலைப் புலிகள் வெளியேற்றினார்கள் அல்லது புலிகளின் கலை இலக்கியச் செயற்பாடுகளில் உடன்பாடு இல்லை என்று கூறி, அன்று ஜெயராஜ் வெளியேறி இருந்தாலும், அது கம்பன் வழியில் ஏற்புடையது என்றே எடுத்துக் கொள்வோம்.

ஏனெனில், சோழ மன்னனை புகழ்ந்து பாட விரும்பாத கம்பனைப் போன்று, கம்பன் நெறிகளை பின்பற்றி வருபவர் என்ற வகையில் புலிகள் சொல்வதை செய்ய முடியாது என்று கூறி ஜெயராஜ் யாழ் குடாவை விட்டு வெளியேறியதாகக் கருதப்பட்டால், அதில் ஒரு நியாயம் உண்டு என்று சொல்வோமே!
ஆனால், அங்கே ஒரு நேர்மையான கேள்வியும் எழுகிறது அல்லவா?

அதாவது, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பின்னால் ஓடுவது கம்பனின் குணம் அல்ல என்ற பண்புக்கு அமைய ஜெயராஜ் அன்று செயற்பட்டார் என்றால், ஏன் இன்று அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் விருது வழங்க வேண்டும்?

மைத்திரிபால ஜனாதிபதியாக இருந்தபோது, 2015 மே மாதம் 5ஆம் திகதி கம்பன் கழகம் விருது வழங்கியது. ஆனால், 2018 ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி இரவோடு இரவாக மகிந்த ராஜபக்சவை அழைத்து பிரதமர் பதவி வழங்கியிருந்தார்.

நல்லாட்சி என்று மார்தட்டிய தமிழர்கள் சிலர் அப்போது வெட்கித் தலை குனிந்தனர். இன்று அதன் நீட்சியாக அநுரவுக்கு விருது.

ஆகவே, அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பின்னால் ஓடுவது கம்பனின் குணம் அல்ல என்ற பண்பை, 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையும் பின்பற்றிய ஜெயராஜ், ஏன் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான சூழலில் அப் பண்பை கைவிட்டார் என்ற கேள்வியில் ஒரு உண்மை உண்டல்லவா?

அதுவும், ஈழத் தமிழரின் அரசியல் உரிமை விடத்தில் கடும் போக்கைக் கொண்ட அதிகாரம் படைத்த – பௌத்த சிந்தனை கொண்ட மன்னர்கள் பின்னால் ஏன் ஜெயராஜ் ஓட வேண்டும்?
ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டம், 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டத்தோடு மாத்திரம், ஆரம்பித்து முடிந்து போன கதையல்லவே?

1921 இல் அருணாச்சலம் தமிழர் மகா சபையை உருவாக்கியது முதல், ஒரு நூற்றாண்டு கால நீண்ட வரலாற்றைக் கொண்டது, இந்த முரண்பாடு.
ஆகவே, இந்த உண்மைகளைத் தவிர்த்துவிட்டு, சிங்களத் தலைவர்களுக்கு விருது வழங்குவதன் பின்னணி என்ன?

“இராமனைப் பாடும் வாயால் ஒரு சாதாரண மனிதனை அதாவது மன்னனை உயர்த்திப் பாட மாட்டேன்” என்று அடம் பிடித்த கம்பனின் பண்பை ஜெயராஜ் ஏன் மீறினார்?
இது கம்பனின் கொள்கைகளுக்கு முரணானது அல்லவா?

மன்னர்களை விட ‘அறம்’ சார்ந்த மக்களே உயர்ந்தவர்கள் என்று தான் கம்பன் வாழ்ந்து காட்டினார் அல்லவா? அரசியல் அதிகாரத்தைப் பற்றிச் சொல்லும்போது, மன்னன் என்பவன் ஒரு கருவி மட்டுமே. மக்களே உயிர் என்று குறிப்பிடுகிறார் கம்பன்.

“மன்னவன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற பாடலின் மூலம், ஒருவருக்கு விருது வழங்குவது என்பது அவர் வகிக்கும் பதவியை பார்த்து அல்ல, அவர் மக்களுக்கு செய்த அறப்பணிகளைப் பார்த்தே அமைய வேண்டும் என்பதை உணர்த்துகிறான் கம்பன்.

கம்பன் விருது என்பது தமிழ் புலமையோடு சார்ந்தவர்களுக்குத் தான் வழங்க வேண்டும். ஆனால், அநு – மைத்திரிஆகியோர், தமிழ் மொழிக்கும், ஈழத் தமிழ் வாழ்வியல் பண்பாட்டுக்கும் என்ன செய்தனர்?

சமாதான பேச்சு காலத்தில், அநுர நிகழ்த்திய உரைகள் போராட்டத்துக்கு எதிரானது மாத்திரமல்ல, தமிழர் மரபுரிமை பண்பாடு, தமிழர் தாயகம் போன்ற அனைத்திற்கும் எதிராக இருந்ததை நாடாளுமன்ற செய்தியாளராக நான் இருந்த போது நேரடியாக கேட்டிருக்கிறேன்.
“இராம இராஜ்ஜியமே அழிந்து போகட்டும்” என கம்பன் பாடிய வரிகளை வைத்துப் பட்டிமன்றம் நடத்தும் கம்பன் கழகம், போரை ஆதரித்த கட்சிப் பின்னணி்யைக் கொண்டவர்களுக்கு எதற்காக விருது வழங்கியது?

பல இலட்சம் உயிர்களைப் பலி கொண்ட அந்தப் போரின் தீவிரத்தை ஆதரித்தவர்களுக்கு இவ் விருது தகுமா?
வழங்கப்பட்ட இந்த அங்கீகாரத்தின் பின்னணியில் உள்ள அரசியல் உள் நோக்கம் என்ன?
இதன் மூலம் உணர்த்தப்படும் செய்தி தான் என்ன?

அதேவேளை, “காலமாற்றத்தால் சிதைந்து வரும் ஈழத் தமிழரின் தொன்மையான மரபுரிமைகளையும், பண்பாட்டு விழுமியங்களையும் ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டிய அறம் சார் கடமை தமிழ் மொழித்துறைப் பேராசிரியர்களுக்கு உண்டு.

ஆனால், ஈழத் தமிழ் பேராசிரியர்கள் பலரும் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதில்லை. பெயருக்கும் புகழுக்கும் கம்பன் கழகத்திற்குப் பின்னால் வெறுமனே ஓடுகின்றனர்.
குறிப்பிட்ட ஒரு சில பேராசிரியர்கள் மாத்திரமே. தமிழியல் ஆய்வுகளை செய்கின்றனர்.

ஈழத்தமிழ் மொழி கல்விப் புலங்கள் வெறும் போதனை மையங்களாக மட்டுமன்றி, சமூகத்தின் வேர்களைத் தேடும் ஆய்வு மையங்களாக மாற வேண்டும். அப்போதுதான் ஈழத் தமிழின் தொன்மைக்கும் நவீனத்திற்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப முடியும்.

போராட்ட வரலாற்றில் வலிகளைக் கண்ட ஒரு சமூகத்தின் கூட்டு மனக்காயங்களை (Collective Trauma) ஆற்றும் மருந்தாக அந்த ஆய்வுகள் இருக்க வேண்டும்.
ஈழத்தமிழ் இலக்கியங்கள் வெறும் சொற்களின் குவியல் அல்ல. அவை, தமிழினத்தின் வாழ்வியல் கருவூலங்கள்.

எனவே, இலக்கியங்களுக்குப் பின்னால் மறைந்துள்ள பண்பாட்டுக் கூறுகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து உலக அரங்கில் தமிழுக்கான இடத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழ் மரபுரிமை குறித்த புதிய கண்டுபிடிப்புகளும், நுண் ஆய்வுகளும் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிவரும்போது அவை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுகின்றன.

ஆனால், ஈழத் தமிழ் அறிஞர்கள் பலரும் இவ்வாறான ஆய்வுகளில் ஈடுபடாமல் கம்பன் கழகத்தின் மாலை, பொன்னாடைகள் மற்றும் விருதுகளுக்காக ஏங்கி ஓடுவது பெரும் வேடிக்கை.
ஈழத்து இலக்கியங்களை வெறும் ரசனை சார்ந்து அணுகாமல், நவீன கோட்பாடுகள் – சமூகவியல் கண்ணோட்டத்தில் ஆழமான விமர்சன ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

காலனித்துவ – மேலைத்தேய ஆய்வு முறைகளை கடந்து, ஈழத்தமிழர் வாழ்வியலுக்கு நெருக்கமான, புதிய ஆய்வு முறைகளை உருவாக்க வேண்டும்.
ஈழத்து இலக்கியங்களை ஏனைய மொழிகளுக்கு மொழிபெயர்த்து, சர்வதேச ஆய்வுச் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

ஈழத்தில் இருந்து வெளியேறி உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் “புலம்பெயர் இலக்கியங்களை” (Diaspora Literature) ஈழத்து இலக்கியத்தின் ஒரு அங்கமாக ஏற்று அவற்றின் மீதான ஆய்வுகளை விரிவுபடுத்த வேண்டும்.

இது தான் தமிழ்ப் பணி.

கம்பராமாயாண கதைகள் மற்றும் அதன் பாடல்களைக் கூட சமகால அரசியல் – பொருளாதார நோக்கில் ஆய்வு செய்து விவாதிக்க முடியும்.
1) அதிகாரப் பரவலாக்கம் vs ஒற்றையாட்சி, அதாவது தசரதனின் அமைச்சரவை ஆலோசனைகள் மற்றும் விபீடணனின் சரணாகதிப் படலத்தில் நிகழும் விவாதங்கள், ஒரு நாட்டின் முடிவெடுக்கும் அதிகாரம் ஒருவரிடம் மட்டும் (Dictatorship) இருக்க வேண்டுமா அல்லது ஆலோசனைக் குழுவிடம் இருக்க வேண்டுமா என்ற சமகால ஜனநாயகப் பண்பை விவாதிக்கின்றன.

2) “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பது சிலப்பதிகாரம். ஆனாலும், கம்பர் வாலி வதை படலத்தில் வாலி கேட்கும் கேள்விகள் மூலம் “வலிமையானவன் வகுப்பதே சட்டமா?” என்ற அதிகார அரசியலின் தார்மீகச் சிக்கலை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

3) கோசல நாட்டை வர்ணிக்கும்போது, “கல்லாமை இல்லையெனில் அறியாமை இல்லை, வறுமை இல்லையெனில் ஈகை இல்லை” என்பான் கம்பன். இது ஒரு நாட்டின் பொருளாதாரம் சமமாகப் பகிரப்படும் போது (Equal distribution of wealth), அங்கு வறுமையே இருக்காது என்ற சமதர்ம (Socialist) சிந்தனையை முன்வைக்கிறது.

4) கம்பன் ஒரு மன்னன் வரி வசூலிப்பதை “பூவில் இருந்து வண்டு தேன் எடுப்பது போல” இருக்க வேண்டும் என்பான். ஆனால் தற்கால வரி விதிப்பு’ (Optimized Taxation) அதிகமானது. இதனால் எழும் மக்களின் வாழ்க்கை சுமை பற்றி விவாதிக்க முடியும்.

5) அனுமன் மற்றும் அங்கதனின் தூதுப் படலங்கள், நவீனகால சர்வதேச கொள்கை (Foreign Policy) மற்றும் பேச்சுவார்த்தை உத்திகளுக்கு (Negotiation Skills) மிகச்சிறந்த பாடங்களாகும்.
ஆனால், தமிழ் மொழி பேராசிரியர்கள் நகைச்சுவையாகவும், பழமைவாத கருத்துக்களையும் முன்வைத்து, அரங்கில் இருப்பவர் சிரிப்பதற்காக மட்டும் பேசுகின்றனர். சிந்தனைக்காக அல்ல.

ஆகவே, அர்த்தமற்ற பட்டிமன்றங்களும் உரைகளுமே, கம்பன் விழாவில் விஞ்சிக் கிடக்கின்றன.
குறிப்புகள் —

(A) தமிழ்நாட்டுக் கம்பன் கழகங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் கம்பன் விருதுகள், முதன்மையாக தமிழ் மொழிப் புலமை சார்ந்தவர்களுக்கும், இலக்கிய ஆய்வாளர்களுக்கும் மாத்திரமே வழங்கப்படுகின்றன.

இருப்பினும், அரசியல் பின்புலம் கொண்டவர்கள் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருந்தால், அவர்கள் கௌரவிக்கப்படுவர்.
(B) தமிழ்நாடு அரசு வழங்கும் ‘கம்பன் விருது’ தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர்களுக்குக் கம்பன் விருது வழங்கப்படுகிறது.
எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கம்பன் இலக்கியத்தைப் பரப்பும் சொற்பொழிவாளர்களுக்கே இந்த விருது முன்னுரிமை அளித்து வழங்கப்படுகிறது.

தீவிர அரசியல்வாதியாக இருந்தபோதும், கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இலக்கியப் பங்களிப்பிற்காக, முன்னாள் அமைச்சர் மருத்துவர் எச்.வி. ஹண்டே (H.V. ஹண்டே) 2020 ஆம் ஆண்டு கம்பன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விளக்கம் —

2023 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் ஆயுதப் போராட்டத்தை மலினப்படுத்தி, நடத்தப்பட்ட பட்டிமன்றம் பற்றிக் கடுமையாக விமர்சித்து, யாழ் உதயன்- சஞ்சீவி ஞாயிறு வார இதழில் கட்டுரை எழுதியிருந்தேன்.

அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-

 

By admin