பட மூலாதாரம், AIADMK
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை (மே 13) நம்பிக்கை வாக்கெடுப்பை த.வெ.க அரசு நடத்த உள்ள நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் இருவேறு நிலைப்பாடுகள் பேசுபொருளாக மாறியுள்ளன.
த.வெ.க அரசுக்கு ஆதரவளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ள நிலையில், ‘அவ்வாறு வாக்களித்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என அ.தி.மு.கவின் மற்றொரு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
த.வெ.க அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் ஒரு பிரிவினர் வாக்களித்தால் என்ன நடக்கும்?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது.
ஆனால், ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாததால் அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் த.வெ.கவுக்கு ஆதரவளித்தன. இதன்மூலம் த.வெ.க அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.
பட மூலாதாரம், DIPR
‘த.வெ.க அரசுக்கு ஆதரவு’ – சி.வி.சண்முகம்
இந்தநிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவளிப்பதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க் கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
“அ.தி.மு.க காப்பாற்றப்பட வேண்டும் என்ற நிலையில் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளனர். முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என அவர் தெரிவித்தார்.
அ.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுவின் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாகக் கூறிய சி.வி.சண்முகம், “அ.தி.மு.க எந்தக் கூட்டணியிலும் இல்லை. அ.தி.மு.க புதிய முடிவை எடுக்க வேண்டும். அதன்படி, த.வெ.க அரசை ஆதரிப்பதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” எனக் கூறினார்.
அதேநேரம், தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
சி.வி.சண்முகம் பேசும்போது, “தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆதரவுடன் தன்னை முதலமைச்சராக்க ஒப்புக் கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். இதற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சம்மதிக்கவில்லை” என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Handout
உரிமை கோரிய அ.தி.மு.க அணிகள்
முன்னதாக, திங்கள்கிழமையன்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் தற்காலிக சபாநாயகரை சந்தித்து தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களின் கடிதத்தைக் கொடுத்தனர்.
சட்டப்பேரவைக் அ.தி.மு.க குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கடிதம் ஒன்றை தற்காலிக சபாநாயகரிடம் வழங்கினர். தங்கள் தரப்பில் சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய சட்டப்போரவை தலைவராக தேர்வாகியுள்ள ஜேசிடி பிரபாகரனை இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து கடிதம் அளித்தனர்.
நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்களில் எத்தனை பேர் த.வெ.க அரசுக்கு ஆதரவாக உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
பட மூலாதாரம், AIADMK
‘அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் நடவடிக்கை’
அதேநேரம், த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. அதுதான் எங்கள் கட்சியின் விதி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூற முடியாது” எனத் தெரிவித்தார்.
“அமைச்சர் ஆக வேண்டும், பொறுப்பைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை அவர்களை இவ்வாறு பேச வைக்கிறது. எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை ஜெயலலிதா வளர்த்த கட்சியை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார்” எனவும் அவர் தெரிவித்தார்.
தி.மு.க ஆதரவுடன் அ.தி.மு.க ஆட்சியமைக்க முயற்சி செய்ததாக வெளியான தகவலையும் அவர் மறுத்தார். அ.தி.மு.க பிளவை முதல்வர் விஜய் ஆதரிக்க மாட்டார் என தாங்கள் நம்புவதாகவும் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
“நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் எதிராக வாக்களிப்போம். அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது” என, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
அதையும் மீறி த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தங்கள் தரப்பில் 26 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
”த.வெ.கவுக்கு ஆதரவாக அ.தி.மு.கவின் ஒரு பிரிவு வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர். கொறடா உத்தரவு மீறப்படும்போது கட்சி தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அ.தி.மு.க எம்.எல்.ஏக்களில் யார் கொறடா என்பதை அதிகாரப்பூர்வமாக சட்டமன்ற செயலகம் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் தெளிவு கிடைக்கும்” எனக் கூறுகிறார் பத்திரிகையாளர் ஷ்யாம்.
நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது அ.தி.மு.கவில் கணிசமான எம்.எல்.ஏக்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
பட மூலாதாரம், AIADMK
அ.தி.மு.கவில் என்ன நடக்கிறது?
“தொடர் தோல்விகள், கூட்டணி அமைப்பதில் சிக்கல், தேர்தல் செலவுக்கு எடப்பாடி பழனிசாமி போதிய அளவு நிதி கொடுக்கவில்லை என்ற காரணங்களை எல்லாம் சி.வி.சண்முகம் தரப்பினர் குற்றச்சாட்டாக முன்வைத்து வருகின்றனர்” என தெரிவித்தார் குபேந்திரன்.
“அ.தி.மு.கவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான பிரிவு என்பது குழப்பத்துக்கு மட்டும் வழிவகை ஏற்படுத்தும்.” என்கிறார் அவர்.
“நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பொதுக்குழுவை கூட்டும்போது சி.வி.சண்முகம் தரப்புக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படும்” என்கிறார் குபேந்திரன்.
பட மூலாதாரம், SPVelumani/X
“அ.தி.மு.கவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டுவிட்டது. வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க அணிக்கு த.வெ.க அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படுமா என்பதில் உறுதியான தகவல்கள் இல்லை” என குபேந்திரன் குறிப்பிட்டார்.
தற்போது உள்ள கட்சிகளின் ஆதரவை மட்டுமே வைத்து தொடர்ந்து ஆட்சி நடத்த முடியுமா என்ற சந்தேகம் இருப்பதால் அ.தி.மு.கவில் ஒரு பிரிவினர் ஆதரவை முதலமைச்சர் விஜய் ஏற்பதாகக் கூறுகிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு