• Thu. Jul 23rd, 2026

24×7 Live News

Apdin News

அன்புத் தோழி | நதுநசி

Byadmin

Jul 23, 2026


அவசர அவசரமாக கயல் தன்னுடைய பாடசாலைப் புத்தகங்களை பாட வேளை பார்த்து அடுக்கி வைத்துக்கொண்டு இருந்தாள். அவளது புத்தகப்பை அன்று மட்டும் ஏதோ அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. கொஞ்சப் புத்தகங்கள் தான். இருந்தாலும் எடுத்து அடுக்கி வைத்துக்கொள்ளச் சிரமப்பட்டுக் கொண்டு இருந்தாள்.

அவளது பாடசாலைக்கு ஐந்து கிலோமீற்றர் தூரம் போக வேண்டும். காலை வகுப்பு வீட்டுக்கு பக்கத்தில் இருந்த திலீபன் கல்வி நிலையத்தில் நடந்தது. அதை முடித்துக்கொண்டு வர கொஞ்சம் நேரமாயிற்று.

அன்று வெள்ளிக்கிழமை.

அதிகாலை எழுந்து நல்ல தோயல் ஒன்றைப் போட்டாள். பாடசாலைச் சீருடைகளை அணிந்தவாறே வகுப்புக்கு போயிருந்தாள். தலை இழுத்துக் கட்டவில்லை. கூட்டிக் கட்டி விரித்து விட்டபடி…. தலை துவட்டியது போதாது போலும். முதுகுச் சட்டை ஈரமாகியிருந்தது.

நான்கு மணி வகுப்பு ஆறு மணிக்கு முடியும். அதுவரை நீர் வடிந்து, முடி உலர்ந்து போகும் என்று எண்ணியிருக்க வேண்டும். அந்த நீண்ட கருங்கூந்தலை வகுப்பு முடிந்து வந்து கட்டிக்கொண்டு போகலாம் என்று எண்ணியிருப்பாள்.

அவளது கெட்ட நேரம் வகுப்பு முடிந்து வீடு வர நேரமாகி விட்டது.

இருந்தாலும், மனதுக்குள்ளே ஒரு ஆறுதல். வெள்ளிக்கிழமை காலைக் கூட்டம்;

சிவபுராண வழிபாடு என்பதால், பாடம் தொடங்க நேரமாகும். ஆனாலும், அவள் மாணவ முதல்வியாக இருந்தாள்.

விரைந்து செல்வதற்கு காரணங்கள் ஒன்று மாறி ஒன்று விரட்டிக்கொண்டு இருந்தன.

அவளது அம்மா புட்டைப் போட்டு வாழைப்பழத்தோடு சீனி சேர்த்து பிசைந்தவாறு

” கயல் சாப்பிட்டு விட்டுப் போ”

என்றவாறு இன்னொரு பக்கம் அவசரப்படுத்திக் கொண்டு இருந்தார்.

எதைச் செய்வது என்ற குழப்பம். ஆனாலும் அவள் கெட்டிக்காரி. சமாளித்துக் கொண்டு விரைந்து வித்தியானந்த கல்லூரிக்கு போய்ச் சேர்வதற்கான தன் பயணத்தை தொடங்கினாள்.

ஈருறுளி ஓட்டம் என்பதால் பாவம் அவள்;

களைத்துப் போய்விடுவாள். இதனைக் கருத்தில் கொண்டு, தன் பயண அவசரத்திலும் கூடிய நிதானம் கொண்டு சென்றாள். கிடங்கு பள்ளம் நிறைந்தத பாதை. மணல் திட்டுக்களும் இடையிடையே வரும். அந்த இடங்களில் இறங்கி உருட்டிக் கொண்டு தான் போக வேண்டும்.

குமுழமுனை தண்ணீரூற்று வீதியில் ஏறியதும் அந்த பாதை முழுவதும் கிரவல். அதுவும் குண்டும் குழியுமாக இருந்தது. வாகனங்கள் வந்து விலத்திப் போனால், வெள்ளைச் சட்டை செம்பாட்டு மண்ணின் செந்நிறத்திற்கு வந்து விடும். தலை வேற ஈரம். உள்ளூர இருந்த பயம். வாகனங்கள் வந்தால் இறங்கி நின்று அவை போன பின்னர் தான் போக வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பயணப்பட்டாள்.

நல்ல காலம். பாடசாலை போய்ச் சேரும் வரை வாகனங்கள் எவையும் வரவில்லை.

செந்திலண்ணையின் கடையில் நின்று ஐந்து கட்டுக்கொப்பி வாங்கும் போது, குமுழமுனையிலிருந்து தண்ணீரூற்றுக்கு போகும் பயணிகள் பேருந்து போனது.

ஒரு பெரு மூச்சு விட்டாள். ஒரு கொஞ்ச நேரம் பிந்தியிருந்தால் பேருந்தின் வேகத்தால் கிரவல் செம்பாட்டுத் தூசி எழுந்து, வெள்ளைச் சட்டை முழுக்க செந்நிறமாக்கியிருக்கும்.

கயல் வீட்டிலிருந்து வந்த பாதை வழியே வலதுகைப் பக்கம் திரும்பினாள். இருபத்தைந்து மீற்றர் தூரத்தில், பாடசாலை போகும் பக்கமாக திரும்பிப் பயணிக்க வேண்டும். முறிப்பு குளத்தின் பக்கவாட்டாக செந்திலண்ணையின் கடை இருக்கிறது.

அவர் உயரத்தில் குள்ளமான; நிறத்தில் வெண்ணிறமான மனிதர். குணத்தில் பழகப் பிடிக்கும் நல்ல மனிதர். கடை நடத்துவதில் வல்லவர்.

கயல் மெல்லிய; சற்று உயரமான தோற்றமுடைய, மென்மையான சுபாவம் உடையவள். அனைவரோடும் இனிமையாகவும் மென்மையாகவும் பேசுபவள். எந்தச் செயலாகினும் மென்மையான போக்குடையவாள் என்றாலும், திடமானவள். அவள்; எல்லோருக்கும் நன்கு பிடித்துப் போகும் சின்னப்பொண்ணு.

கொப்பியை வாங்கியவள் தன் புத்தகப் பையில் அதனை வைத்துச் சீராக்கி விட்டு; பாடசாலை நோக்கிய தன் பயணத்தைத் தொடர்ந்தாள்.

இவளுக்காக இவளுடன் சாதாரணதரம் படித்த சந்தியா காத்துக்கொண்டிருப்பாள். அவளது வீட்டில் தான் கயல் தனது ஈருருளியை விட்டுச் செல்வாள்.

சந்தியா, உயர்தரத்தில் உயிரியல் படித்துக்கொண்டிருந்தாள். கயல் வணிகப் பிரிவில் படித்துக் கொண்டிருந்தாள்.

சிந்தித்தவாறே பயணித்தவள் புதன்வயல் சந்திக்கு வந்து விட்டாள்.

இன்னும் சற்று நேரத்தில், வித்தியானந்தக் கல்லூரிக்குப் போய்விடலாம். கற்பகப் பிள்ளையார் கோவிலடிக்கு வந்தவள் குழாய்கிணற்றடியால் காவல்துறைச் சந்திப்பக்கம் திரும்பிய வேகத்தில், தண்ணீரூற்று சந்தையடியை எட்டியவள்; சந்தியா விட்டு படலையில் சைக்கிளை நிறுத்தினாள்.

சைக்கிளை உருட்டிக் கொண்டே, “நேரம் போட்டுதோ சந்தியா? வகுப்பு முடிய நேரமாச்சு. அதான் வர கொஞ்சம் பிந்திற்று.”

“அப்ப சாப்பிடாமலா வந்தனீ.” என்ற சந்தியா,

“அம்மா!… கயல் வந்திட்டாள். அவளுக்கும் சாப்பாடு போடுங்கோ?” என்றவாறே தானும் சாப்பிட ஆயத்தமானாள்.

கயல் சைக்கிளை; சந்தியா வீட்டு முற்றத்தில் நின்ற மாமரத்திற்கு கீழே நிறுத்தி விட்டு; புத்தகப் பையை தன் ஒற்றைத் தோளில் தூக்கி கொழுவிக் கொண்டு, வீட்டு வாசலுக்கு வந்தாள்.

“சந்தியா பிந்தப்போகுது.”என்றவாறே தன் வெள்ளைச் சட்டையை சீர் செய்தாள்.

“சாப்பிட்டுட்டு போவன் பிள்ளை” என்றவாறு சந்தியாவின் அம்மாவும், தான் சுட்ட அப்பத்தில் ஒரு சோடியை கோப்பையில் போட்டு எடுத்து வந்தார்.

“இல்லையம்மா. நேரம் போச்சு. பிந்தப்போகுது” என்றவாறு தன் அவசரத்தைக் காட்ட; சந்தியாவின் அம்மாவும் அப்பத்தை கடதாசியில் வைத்து மடித்துக் கொடுக்க; சந்தியாவும் தன் புத்தகப் பையை தூக்கியவாறு “வாங்கோ கயல் போகலாம்.” என்றவாறு வாசலுக்கு வந்தாள்.

“ஏன் சந்தியா நீங்கள் சாப்பிடாமல் போறிங்கள்? ” அவளது அம்மா கேள்வியோடு நிற்க,

“கொண்டு போறன். அங்க போய்ச் சாப்பிடுவம்.” என்றவள், கயலோடு வீதிக்குப் போய்விட்டாள்.

“அம்மா போட்டு வாறோம்” உரக்க சொல்லிவிட்டு போனாள் சந்தியா.

இருவரும் பாடசாலை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது. வெள்ளிக்கிழை என்பதால், தாங்கள் வகுப்புக்கு போயிடலாம் என்று பேசிக்கொண்டு பாடசாலை வாசலுக்கு வந்தவர்களை எதிர்கொண்டது பாடசாலை அதிபர்.

இருவரும் இதனை எதிர் பார்க்கவில்லை. அவர்களின் பயத்தை அவர்களின் உடல் தெளிவுகள் தெளிவாகவே காட்டி நிற்க….

மெதுவாக புன்னகைத்த அதிபர் “போங்கள்” என்ற ஒற்றை வார்த்தையில் தன் புரிதலை உணர்த்திப் போனார்.

அன்புத் தோழி – பகுதி 2

கயல் வந்த களை ஆறும் முன்னே அவளது அம்மா பற்றி எரிந்தார்.

அந்த எரிச்சலில் பொறுமை இழந்தாள். கயலின் பாடசாலை உடுப்புக்கள் எல்லாவற்றையும் போட்டு எரித்து விட்டாள்.

அத்தோடு விட்டால் பரவாயில்லை. அவளது புத்தகங்கள், கொப்பிகளையெல்லாம் சேர்த்து அள்ளிப்போட்டு எரித்து விட்டார்.

என்ன நடந்தது என்று புரிந்து கொள்ளும் முன்னே எல்லாம் நடந்து முடிந்தது விட்டது. அம்மாவிடம் கேட்கவும் பயம். போட்டுக்கொண்டு போன உடுப்புக்களும் கழட்டிய வேகத்தில் பறித்து எரியும் நெருப்பில் போட்டு எரிய விட்டாச்சு.

“இனி உனக்கு பள்ளிக்கூடம் வேண்டாம்.” என்ற அம்மாவின் ஒற்றை வரிகளில் கோபம் கலந்திருந்தது.

கயல் அதன் பின்னர் அமைதியாகி விட்டாள். இனி தன் பேச்சு எடுபடாது என்பது அவளது கணிப்பு. இப்படி பல முறை அவளது அம்மா கோபப்பட்டு நடந்து இருக்கிறார். ஆனால், இன்று அவளது பள்ளிக் கற்றலுக்கு இறுதி முற்றுப் புள்ளி வைத்து விடுமளவுக்கு கோபம்.

காரணம் புரியவில்லை. இருந்தும் இனி தன் படிப்பு இத்தோடு முடிந்து விட்டது என எண்ணினாள். மனதுள் எழுந்த அழுகையை வெளிக்காட்ட முடியாத சூழல். இந்த வேளை அழுதால் அம்மாவின் கையில் படும் பொருட்கள் எல்லாம் கயல் மீது மோதி பதம் பார்க்கும். அனுபவத்தின் உறுத்தல் அழுகையை இறுக்கிக் கட்டிப் போட்டது.

தன் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக்கொண்டாள். மனக்கவலை தீரும் வரை அழுது கொண்டாள். அழுதவாறே தன் படுக்கையில் தூங்கிப்போனாள்.

பசியோடு…..

இப்போது கயலின் அம்மா கொஞ்சம் கோபம் தணிந்தது, சுய நினைவுக்கு வந்து கொண்டிருந்தாள். நேரம் மாலை ஆகி இருள் படரும் கருக்கலாகிக்கொண்டிருந்தது.

“கயல் இன்னமும் சாப்பிடவில்லை. நான் கோபப்பட்டிருக்க கூடாது”. என தனக்குள் எண்ணிக்கொண்ட போதும்; இனி, அவளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என்பதில் முடிவாக இருந்தார்.

அயலவர்களின் ஏவல் செய்த வேலை. ஏவல்ப் பேய் கூரையை பிய்த்தது என்பது போல, இன்று அவளது அம்மா வடிவில் வந்து அவளோட வாழ்வை பிய்த்து நாசம் செய்து போட்டது.

கல்வியால் உலகை ஆளலாம் என்ற தத்துவத்தை தத்தெடுக்க கூட முடியாத நிலை. இனி, எரித்தவற்றை எல்லாம் திருப்ப எடுத்து, பாடசாலை அனுப்புவதென்பது பகல் கனவு.

இத்தனைக்கும் கயல் அதிகம் நேசிக்கும் அவளது சித்திமாரும், தாயோடு சேர்ந்திருந்தது தான் ஆச்சரியம்.

அவளோட படித்த சக மாணவனை; அவள் காதலிப்பதாக சொல்லப்பட்ட கதையை கேட்டுத் தான், இத்தனையும் நடந்தது. கயலோட அம்மா தன் பிள்ளையை நம்ப தவறிவிட்டார்.

மற்றவர் கதையை கேட்டு, அதனை நம்பி, இதனை இப்படிச் செய்து விட்டார். அதன் பின்னும் தன் செயலின் விளைவு பற்றி சிந்தித்ததாகத் தெரியவில்லை.

கயல் சாப்பிடவில்லை என்று மட்டுமே இரக்கம் கொண்டு, அவளை; கதவுக்கு அருகில் போய் கூப்பிட்டார்.

மெல்ல கண்விழித்த கயல், எதுவும் பேசவில்லை. பேசாமல் படுத்திருந்தாள்.

நேரம் ஏழு மணியிருக்கும். கயலின் கற்றல் துணை வரதன் வந்தான். வரதனின் உந்துருளிச் சத்தம் கேட்டதும், கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

கயலுடைய அம்மா “தம்பி உவள் கயல் சாப்பிடாமல் கிடக்கிறாள். ஒருக்க சொல்லுங்கோ. சாப்பிட்டிட்டு இருக்கச் சொல்லி.”

வரதன் என்ன சொன்னாலும், கயல் செய்வாள் என்பது அவளது அம்மாவின் நினைப்பு.

கயலுடைய அம்மா சுமதி அடுப்படிப் பக்கம் போய்விட்டார். இனி வரதனாச்சு. அவளாச்சு. என்று நினைத்திருப்பார் போலும்.

வரதன் உயரமான; மெல்லிய உடல்வாகுடையவன். கயலை விட நான்கு வயது தான் மூத்தவன்.

நல்ல கெட்டிக்காரன். தன் ஒன்பதாம் ஆண்டு வரை, ஒழுங்காக பாடசாலை போய் படித்தவன். பின் பாடசாலை படிப்பை தொடரும் சூழல் இல்லாது போனதால்; தானே புத்தகங்களை சேகரித்து, படித்து; சாதாரணப் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளை பெற்றவன். உயர்தரத்தில், விஞ்ஞானப் பிரிவிலும் கூட தானே தனியே முயன்று கற்றுச் சித்தி பெற்றவன்.

அவனிடம் தான் கயல் ஆண்டு பத்து, பதினொன்றுகளில் படித்தவள். அவளும் கெட்டிக்காரி தான்.

வரதனை அந்த சுற்றுவட்ட ஊர் மக்கள் எல்லாம் மரியாதைக்குரிய மனிதனாகவே பார்த்தனர். சின்னப் பெடியன் தான். பொறுப்பானவன்.

கயலின் முகத்தை பார்த்தான் வரதன்; நிதானமாக. கயலின் முகக்குறிப்புக்களை கொண்டு, ஏதோ நடந்திருக்கிறது என ஊகித்துக் கொண்டான்.

” என்ன கயல்?
முகம் வாடியிருக்கு? ”

ஏன் சாப்பிடவில்லை?” என்றவாறு வீட்டுத் திண்ணையில், தன் கையில் கொண்டு வந்த டாலர் தேசம் என்ற கட்டுப் புத்தகத்தை வைத்து விட்டு, அமர்ந்து கொண்டான்.
கயல் தன் தவிப்பையும் கவலையையும் அடக்கிக்கொள்ள முடியாமல், விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டாள்.

மெல்ல நடந்து வரதனருகே வந்து நின்றும் கொண்டாள்.

அவளை மெல்லத் தேற்றிய வரதன், ஆறுதல் சொல்லி, அழுகையை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

இப்போது மெல்ல நிதானமானவள், பேசத் தொடங்கினாள்.

“பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போதே அம்மா பேசத்தொடங்கிற்றா. இருந்திற்றெப்பாலும் அம்மா இப்படித்தானே பேசுவா எண்டு நினைச்சுக் கொண்டு நான் போய் உடுப்பு மாத்திக்கொண்டிருந்தன்.

புத்தகங்களை எல்லாம் எடுத்துப் போட்டுட்டு. வகுப்புக்கு போன கொப்பிகளையும் எடுத்து எல்லாத்தையும் குவிச்சுப் போட்டு, மண்ணெண்ணெயை ஊத்தி நெருப்பு வைச்சிட்டா.

நான் உடுப்ப மாத்திக்கொண்டு ஓடிப்போய் நெருப்பை நூக்க போனன்.

அம்மா எனக்கு அடிச்சுப்போட்டு, தள்ளி விட்டுட்டா.

வெள்ளைச்சட்டை எல்லாத்தையும் எடுத்து நெருப்பில் போட்டு எரிய விட்டுட்டா?

இனி பள்ளிக்கூடம் போக வேண்டாமாம்.” கண்கள் மீண்டும் பனித்துக்கொள்ளச் சொல்லி முடித்தாள்.

“ஏன் என்று நீங்கள் கேட்கவில்லையா?”

” கேட்டனெண்டால் கிடக்கிறதாலை எல்லாம் தூக்கி எறிவா. அதான் உள்ள போய் கதவைப்பூட்டிற்று படுத்திட்டன்.” என்றாள்.

“நான் உங்கட அம்மாவோட கதைக்கிறன். பள்ளிக்கூடம் போக விருப்பமா? என்றான் வரதன்.

” ம்ம். நான் படிக்கப் போறேன்.” என்றாள் அவள்.

“சரி நான் பார்க்கிறேன்.” என்றவன் உடனேயே அதற்கான வேலைகளை தொடங்கினான்.

கயலோட அம்மாவிடம் போன வரதன், அடுப்புக்கு பக்கத்தில் இருந்த போத்தலில் ஊறுகாயை கண்டு விட்டான். அதனை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, பேச்சுக்கொடுத்தான்.

தயிரோட சீனி சேர்த்து சாப்பிடுவது, கருவாடு சுட்டு சாப்பிடுவது என வரதனுக்கு சின்னச் சின்ன ஆசைகள் அதிகம்.

கயல், வரதன் பின்னே போனவள்; தன் தாய் சுமதிக்கு தெரியாது மறைந்து நின்று கொண்டாள்.

வரதன் பேசினான்.

“ஏன் பள்ளிக்கூடப் புத்தகம், உடுப்புக்களையெல்லாம் எரிச்சனீங்கள்?”

கேள்வியைத் தொடர்ந்து எந்த சலனமும் இல்லாமல் தன் பாட்டில், இரவுச் சாப்பாட்டுக்கு கத்தரிக்காய்களை வெட்டிக்கொண்டு இருந்தாள் சுமதி.

இயல்பாக இருந்து கொண்டு, இயல்பாகவே பேசினாள் சுமதி.

“இல்லைத்தம்பி. கயல் அந்த பொடியனோட கதைக்கிறாளாம். அதான், கோபத்தில் எல்லாத்தையும் எரிச்சனான்.”

“உங்களுக்கு யார் சொன்னது.”

“தங்கச்சியும் பின் வீட்டு மாலாவும் சொன்னவங்கள். படிக்கிறத விட்டுட்டு இவளுக்கு இதெல்லாம் என்னத்துக்கு? ”

” படிப்பு பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமாக்கும். பொருளாதாரத்தை தற்காத்துக் கொள்ளும். சுயமாக வாழ வழிகாட்டும். முடிந்தளவுக்கு உதவியாக நீங்கள் தானே இருக்க வேண்டும்.

மற்றவர்களின் கதைகளை தாண்டி பிள்ளையின் செயல்களை பாருங்கள். அங்கு மாற்றம் வந்தால் தானே உங்களுக்கு பிரச்சினை வரும்? கயல் நல்லாத்தானே படிக்கிறாள்.” என்றான் வரதன்.

பதிலுக்கு காத்திராமல் தொடர்ந்தான் வரதன்.

” நான் கயலை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறதுக்கு ஒழுங்குபடுத்துறன். இனி இதைப் பற்றி அவளிட்ட கதைக்க வேண்டாம்.” என்று முடித்தான்.

சட்டென பதிலுரைத்த கயலின் அம்மா சுமதி

” இவள் எங்க படிக்கப் போறாள்.?

இனி என்னண்டு வரதன் பள்ளிக்கூடம் அனுப்புறது. ஒண்டும் இல்லையே!”

பேச்சில் தவறுணர்தலை காட்ட முயன்ற போதும் தோற்றுத் தான் போனாள் சுமதி. அவளுக்கு வரதனின் மீது அதீத மரியாதை உண்டு.

“அதெல்லாம் நான் பாத்துக் கொள்ளுறன்.

கயலோடு இனி யாருடைய கதைகளையும் கேட்டுப் பேச வேண்டாம். அவள் தானா படிக்கட்டும்.” சொன்னவாறே கயலிடம் போகத் திரும்பியவன், கயலை எதிர்கொண்டான்.

” நீங்கள் திங்கள்கிழமை வழமை போல பள்ளிக்கூடம் போகலாம் கயல். வெள்ளைச் சட்டையை தைக்க குடுக்க ஒரு அளவு சட்டை தாங்கோ? ”

“உண்மையாவா சொல்றீங்கள்.” கேட்ட வேகத்தில் ஓடிப்போய் ஒரு சட்டையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அவளது முகம் அன்றலர்ந்த செந்தாமரை போல, அப்போது இருந்தது.

வரதன் கயலிடம் பார்த்ததும்; பார்க்க விரும்புவதும் அது ஒன்றைத் தான்.

என்ன தான் நல்ல கெட்டிக்காரனாகவும் ஊரே போற்றும் திறமையாளனாகவும் வரதன் இருந்த போதும், தாயன்புக்காக ஏங்கிய ஒருத்தனாக இருந்தான்.

பொறுப்பாகச் செயற்படும் வரதனுக்கு வெறுத்தொதுக்கும் உறவுகள் மத்தியில், அன்பைக் கொட்டி, அரவணைத்துக் கொண்டது கயல் மட்டும் தான்.

எந்நேரமும் தன்னுடனேயே வரதன் இருக்க வேண்டும் என எண்ணி வாழத்தொடங்கி விட்டாள் கயல்.

” நான் வாறன்” என்று சொல்லியவாறு புறப்பட தயாரான போது,

” எப்படி புத்தகங்களை எடுப்பிங்கள்? கொப்பியலும் இல்லை.” என்றவள், படிக்க இருக்கும் தன் ஆர்வத்தை வார்த்தைத் தொனியில் வெளிக்காட்டினாள்.

அவளுக்குள் இருக்கும் ஆனந்தத் துடிப்பை உணர்ந்தவனாக வரதன் “நான் பார்த்துக் கொள்கின்றேன்.” என்று புன்னகைத்து விட்டு, புறப்பட்டான்.

விடிந்தால் சனிக்கிழமை:

வரதனுக்கு நன்கு பழக்கப்பட்ட அந்த தையல்கார அக்காவிடம், சாதூரியமாக பேசியவன்; அன்றிரவே வெள்ளைச் சட்டைகளை தைத்து எடுத்து விட்டான்.

கயலுடைய வகுப்பு மாணவர்கள் பலர் வரதனிடம் சாதாரண தரம் படித்தவர்கள். வணிகப்பிரிவிலும் கூட பொருளாதார நுணுக்கங்களையும் பங்குச் சந்தை வியாபார முறைகளையும் கற்றுக் கொண்டிருந்தனர்.

இதனால், உயர்தர பாடக்குறிப்பு கொப்பிகளை பெறுவதில் சிரமம் இருக்கவில்லை.

சனிக்கிழமை காலையிலேயே, பாடக்குறிப்பு கொப்பிகளை பெற்றுவிட்ட வரதன்; சேகர் என்ற அவனது நட்புவட்ட அச்சகமொன்றில், அவற்றை நிழல் பிரதி எடுத்து, கொப்பிகளாக கட்டிவிட்டான். புதிய கொப்பிகளையும் வாங்கி தயார் செய்து, ஆயத்தங்களை முடித்து விட்டான்.

ஞாயிறு வந்து விட்டது:

கயலோடு இருந்து கலந்து பேசினான்.

அவளை ஆற்றுப்படுத்தி, திங்கள் கிழமை பள்ளிக்கூடம் போகும் போது, எதுவும் நடக்கவில்லை என்ற இயல்பான மனதோடு செல்லும் வகையில் மாற்றம் கண்டு விட்டான்.

ஞாயிறு முடிந்தது:

திங்கள் பிறந்தது:

விடிந்தும் விட்டது:

கயல் இயல்பான சுறுசுறுப்போடு, பாடசாலை போக தயாராகியும் விட்டாள்.

வழமைபோல் அவள் படசாலை சீருடையோடு புத்தகப்பையுமாக வெளியே வந்த போது அவளது அம்மா சுமதி, கண்கள் குளமாக அசையாது அவளையே பார்த்தபடி நின்றிருக்க;

” அம்மா போட்டு வாறன். ” கயல் உதிர்ந்த மொழிகளில் சுயநினைவுக்கு வந்தளாக, தன் கையை அசைத்து வழியனுப்பினாள்.

வரதனின் முயற்சியால், கயல் தன் விருப்பம் போல, பாடசாலை நோக்கி பயணப்பட்டாள் புன்முறுவலோடு.

மனதுக்குள் வரதனுக்கு நன்றி சொன்ன சுமதி, திரும்பிய போது, அவளது தங்கச்சியும் அயல்வீட்டுக்கார மாலாவும் அவள் பின்னே நின்றிருந்தனர்.

நதுநசி

The post அன்புத் தோழி | நதுநசி appeared first on Vanakkam London.

By admin